Thursday, 24 January 2013

எங்கெல்லாம் மணி அடிக்கின்றதோ...

எங்கெல்லாம் மணி அடிக்கின்றதோ...
                                                 1
கட்டில்மீது வெள்ளை விரிப்பைத் தட்டிப் போட்ட பாதிரி ஸ்டீபன் மகிமைதாஸ் வீட்டிற்குள்ளே ஏதோ ஓசை கேட்டு உற்றுக் கவனித்தார். மீண்டும் ஒலி நின்றது. மௌனம்.
“மைலார்ட் அண்ட் ஸேவியர்” என்று மெதுவாக முனகியவாறே சிரசிற்கும் தோள்பட்டைகளுக்கும் சிலுவைக் குறியிட்டுக் கொண்டு மேஜையின் மேல் எரியும் பெரிய கிரஸீன் விளக்கை திரி இறக்கினார்.
படுக்கையில் அமர்ந்து, இரவுப் பிரார்த்தனையைச் சொல்ல முழந்தாளிட்டபோது, கதவருகே தெளிவாகக் காலடியோசை கேட்டது. கனமாகப் பாதங்களை எடுத்து வைப்பதிலிருந்தே அப்பாதான் என்று தெரிந்தது.
ஊருக்கு வந்து இரண்டு தினங்களே ஆயினும் அப்பாவின் ஒவ்வொரு சலனமும் மனதில் பாதிவாகிவிட்டன. பதினைந்து வருஷங்களுக்கு முன் கேட்டவைதான் அவை. ஆரோக்கியமும் மனோதிடமும் கொண்ட மனிதனுக்குரிய காலடியோசை, இரண்டே தினங்களில் மனப்பாடமாகும்படி தனித்தன்மை பெற்ற ஓசை.
“என்னப்பா?” என்று கேட்டு விடலாமென்று வாய் வரை பில் வந்த கேள்வி தயங்கி ஏனோ ஓர் உள்ளுணர்ச்சியினால் நின்றுவிட்டது.
பின் நிலாக் காலமாகையால் ஜன்னல் வழியே வெளியில் இன்னும் வெளிச்சம் வராதது தெரிந்தது. ஸ்டீபன் மகிமைதாஸ் இறக்கிவைத்த விளக்கும் அடங்கி நீலமாய் அரும்பி விட்டிருந்தது.
ஸ்டீபனின் அறைக்கதவை அப்பா மரியதாஸ் லேசாகத் திறக்கும் ஒலி. கட்டிலின் மீது முழந்தாளிட்டிருந்த ஸ்டீபனை அவரோ, அப்பாவை இவரோ பார்க்க முடியாத இருட்டு.
லேசாக மூடுவதால் பிறந்த கதவுக்கீலின் கீறிச்சொலி. மெதுவாக சுவாசித்தபடியே ஸ்டீபன் கவனித்தார். தெருக்கதவின் தாழ்ப்பாள் லேசாக எச்சரிக்கை தொனிக்க விலகியது. வெளிக்கதவு வாய் மூட, படிகளில் அந்தக் கனமான பாத ஓசை இறங்கி மறைந்தது.
அதிர்ச்சியடைந்து ஸ்டீபன் படுக்கையில் சலனமின்றி உட்கார்ந்திருந்தார். ஏதோ தவறு செய்யப் போவது போல், ஒரு கள்ள உணர்வோடு அப்பா நடந்து கொண்டது அவரது கம்பீரத்திற்குப் பொருந்தவில்லை.
எங்கே போகிறார்?
ஸ்டீபனுக்குச் சட்டென்று நேற்று சோமலாபுரத்து வண்டிக்காரன், இவர் பின்னால் வருவதை அறியாமல் பேசிக் கொண்டு போனது கவனம் வந்தது.
நேற்று சாயந்திரமே ஜோலார்பேட்டைக்குப் போக பஸ் ஸ்டாண்டில் நின்றபோது, திங்கட்கிழமைச் சந்தைக் கூட்டத்திலிருந்து திரும்புகையில் நடந்த நிகழ்ச்சி ஞாபகம் வந்தது.
மனம் இரண்டையும் ஒட்டுப் போட்டுத் தைத்தது.
அந்தக் கண்கூடாக் கண்ட காட்சி -
சந்தை மைதானத்திலிருந்து வெளிவரும் ஜனத்திரளில் அப்பா கருப்புச் சேலையணிந்த ஒரு மத்திய வயதுக்காரியுடன் பக்கத்தில் நடந்து கொண்டே சிரித்துப் பேசியவாறு வந்தார். அது நெருக்கமான சிரிப்பாக இரண்டு உள்ளங்களுக்கிடையில் ஒரு பெரிய சரித்திரம் இருக்கிறதென்று தெளிவாக்கும் சிரிப்பாக, உள்ளம் தோய்ந்த அனுபவத்தில் முகிழ்த்தது போல் சரக்கென்று ஸ்டீபனின் நெஞ்சில் பதிவாயிற்று.
அவள் கோவிலூர்க்காரிதான். சோமலாபுரத்து வண்டிக்காரன் ஜாடைமாடையாகப் பேசிய கதையில் குறிப்பிட்டவன்தான்.
சட்டென்று தலைகுனிந்து கழுத்தில் கறுப்புக் கயிற்றிலே பிணைந்திருந்த சிலுவையை விரல்களில் பற்றியவாறே ஒரு பிரார்த்தனையைச் சொல்லிக் கொண்டே பஸ் நிலையக் கட்டிடத்தில், அப்பாவின் கண்ணில் படாமலிருக்க நுழைந்து கொண்டார்.
அந்தக் காட்சியை ஏசுவின் நாமத்தை உச்சரித்தவாறே நினைவிலிருந்து துடைத்தெறிய முயற்சித்தார்.
திடீரென்று அவர் எழுந்து போனது வீட்டில் யாருக்காவது கேட்டிருக்குமா என்ற ஐயம் பிறந்தது.
வீட்டிற்கு விருந்தாளிகளும் உறவினர்களுமாக நிறையப் பேர் வந்திருந்தனர். நாளைக்கு ஸ்டீபன் மகிமைதாஸ் பிஷப்பிடமிருந்து குருப்பட்டம் வாங்கப் போகும் தியாக பலி பூஜை. அவர் விரும்பிக் கேட்டுக் கொண்டதற்கிணங்க கோவிலூரிலேயே அந்நிகழ்ச்சி நியமனம் ஆகியிருந்தது. திருச்சபைக்கு கருக்கு மீசை அரும்பாத பருவத்தில் அர்ப்பணிக்கப்பட்ட சிறுவன், வளர்ந்து பெரியவனாகி, சொந்த ஊருக்கே மதகுருவாகத் திரும்பிவரும் காட்சியைக் காண அனேக உறவினர்கள் வந்திருந்தனர்.
ஸ்டீபன் மகிமைதாஸின் தம்பி வாசல் நடையில் படுத்திருந்தான். பருவமடைந்த தங்கை அறையினுள் தூங்கிக் கொண்டிருப்பாள். அந்தக் குடும்பத்தைப் பொறுத்தவரை மகிழ்ச்சிகரமான அந்த மறு தினத்தைப்பற்றி - ஸ்டீபனின் பால்யப் பருவத்தைப்பற்றி - நெடு நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு சற்று நேரத்திற்கு முன்தான் அவர்கள் ஓய்ந்தனர்.
தூங்கியிருப்பார்களோ மாட்டார்களோ! யாராவது தூங்கவில்லை என்றால்...?
ஸ்டீபன் அதன் விளைவைக் குறித்துக் கவலை கொண்டார். மரியதாஸைப் பற்றிக் களங்கமாக நினைப்பதைவிட அதை ஒருவருக்கொருவர் வம்பாகப் பேசி வளர்த்துக் கொள்வதைக் குறித்துத்தான் அவருக்கு யோசனையாக இருந்தது.
அப்படி நேரக்கூடாது. வெளியே சென்றவர் சற்று நேரத்தில் திரும்பிவிட வேண்டும், என்று அவரையும் அறியாது ஓர் ஆசை உள்ளத்தில் முகிழ்த்தது. ஆயினும் அந்த ஆசையை அழித்து உலக இயற்கையைக் குறித்து அவரது
விவேகம் தீர்ப்பிட்டுக் கொண்டிருந்தது.
ஸ்டீபன் மகிமைதாஸை ஏசுவின் திருச்சபைக்கு ஒப்புக் கொடுத்தபோது அவரது தந்தைக்கு முப்பத்து ஐந்து வயது. இப்போதைவிட அன்று திடகாத்திரமாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தார். அப்போது குறைப் பிரசவத்தினால் ஸ்டீபனின் தாய் இறந்து இரண்டு வருஷங்களாகி இருந்தன.
அந்த இளமைக்காலம் இன்னும் ஒளி மங்காது ஸ்டீபனுக்கு நினைவிருக்கிறது. திருப்பத்தூர் பாதிரி பங்களாவிலிருந்த சர்ச்சுக்கு கோவிலூரிலேயே ‘தங்கபுரூச்’ அணிந்து சென்ற பெண்மணி அவருடைய தாயார் ஒருத்திதான்.
மரியதாஸ் எங்கோ வெளியூருக்குச் சென்று வந்த போது அந்த ‘தங்க புரூச்’ வாங்கி வந்த தினம்கூட நன்றாக நினைவிருக்கிறது. அதை அணிந்து அம்மா கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டபோது, பெருமையும் நெகிழ்ச்சியும் தோன்ற அப்பா சிரித்த காட்சி இதோ இப்போதும் கண்ணாடியில் தெரிகிறது. அந்தச் சிரிப்புக்கு அடிமையாகி அம்மாவின் கண்கள் நாணத்தோடு தாழ்கின்றன.
அப்பா, அம்மாவை எவ்வளவு நேசித்தார் என்பது அறிவு அரும்பு விடுகின்ற அந்த இளமைப் பிராயத்திலேயே ஸ்டீபனுக்கு பளிச்சென்று மனசில் பதிந்திருந்தது. இன்று எண்ணுகையில் மனைவியின் மேல் வைத்த அன்பிலேயே இந்த உலகின் உறவுகளையெல்லாம் புரிந்து கொண்டிருக்கிறார் அவர் என்பதும், அந்த அன்பில் எவ்வளவுக்கெவ்வளவு தன்னை இழந்து போகிறோமோ அவ்வளவு வாழ்க்கை சஞ்சலமற்று ஒருமையுற்று நின்றதாக அவர் கருதி வாழ்ந்திருக்கிறார் என்பதும் தெளிவாகத் தெரிந்தது.
அந்த அம்மா இறந்துபோனாள். அப்புறம் தந்தையின் நடவடிக்கைகள் திக்கற்ற குழப்பமானது ஞாபகம் வந்தது. அவரால் தன்னை எங்காவது ஓரிடத்தில் ஒப்புவித்துக் கொள்ளாமல் வாழவே முடியாது. அவர் நேசிக்கப் பிறந்தவர்.
அதனாலா - அதனாலா...
தமது சிந்தனை விபரீதமாகப் போய்க் கொண்டிருக்கிறதா என்று எச்சரிக்கை கொண்டு “மைலார்ட் அண்டு ஸேவியர்” ஆரோக்கியமான மனிதருக்கு ஆத்ம விழிப்பு ஏற்பட்டு உண்மையைத் தேடும் காலம் உதிக்கவில்லை என்றே தோன்றியது. விவிலிய நூலிலிருந்து ‘கிடை தவறிய ஆடு’ என்ற கதை ஞாபகமாயிற்று.
மன ஓட்டங்களைக் கட்டுப்படுத்திக் கொள்வதற்காக ஸ்டீபன் முழந்தாளிட்டவாறு கண்களை மூடினார். தாளிட்டவாறு கண்களை மூடினார். பிரார்த்தனைச் சொற்கள் நட்சத்திர ஒளி போன்று, தூரத்து நம்பிக்கையாக நினைவில் ஒலித்தன.
“பரமண்டலத்திலிருக்கிற எங்கள் பிதாவே...”
சலனம் ஒழிந்தது, அந்தரங்க சுத்தியான அந்த பிரார்த்தனை பளிங்கு நீர் போன்று நிரம்பி தேகமெங்கும் பரவுகிறது. ஸ்டீபன் ஆறுதல் ஊட்டும் சத்திய ஒளியை நோக்கி வெகு அருகாமையில் நெருங்குவதாக உணர்ந்தார். மனசிலே சாந்தி, நடுச் சமுத்திரத்தின் ராஜகம்பீரமான சாந்தி.
ஆ! இந்த அனுபவம்!
கண் விழித்ததும் இந்த அனுபவம் எத்தனை புனிதமானது. பந்தமற்று சுதந்திரமாக ஆனால் திக்கெல்லாம் அன்பால் நிரம்பியிருப்பது போன்ற அந்த சாந்தி; அது எத்தகைய ஆனந்தம் என்று நினைத்துக் கொண்டார், சிந்தனை மேலே ஓடிற்று.
இந்த நிலையே மனிதன் அடைய வேண்டிய நிலை. ஆயினும் தவறானவற்றையே அவன் தேடிக் கொண்டிருக்கிறான். குழந்தைகள் மண் பொம்மைகளிலும் வெறும் பாவனைகளிலும் பித்துப் பிடித்திருப்பது போன்று அவனும் இருக்கிறான். இருந்தாலென்ன? கர்த்தரின் ஞானத்தைக் குறித்த ஆர்வம் அவர்களுக்குள் ஆரம்பமாகி விட்டது. பல கட்டங்களைக் கடந்தாயினும் அவர்கள் அதை அடைந்தே தீருவார்கள். இப்போதே அதற்காக அவர்களைக் கோபித்தும் சபித்தும் ஆகப்போவதென்ன?
ஸ்டீபன் அப்பாவை இப்போது தெளிவாகப் புரிந்து கொண்டார். மனசில் விஷமுள்ளாக உறுத்திய வெறுப்பையும் கிள்ளி எறிந்து விட்டு விசாலாமான இதயத்தோடு அவரை மன்னிக்கத் தயாரானார்.[தொடரும் ]
                                                             

No comments:

Post a Comment