5
வீட்டிற்கு வந்து போகும் அரைமணி நேரத்தில் இந்தத் திட்டங்களையே ஆவலோடு தந்தையிடமும் தம்பியிடமும் பேசிக் கொண்டிருந்தார்.
அப்பா அவற்றுக்கெல்லாம் மிகவும் மரியாதையோடு செவி சாய்த்துக் கேட்பதும், மகிமைதாஸ் தனது மகன் என்ற நினைவே மறந்தவர் போன்று நடந்து கொள்வதும் அவருக்குப் பெருத்த சங்கடத்தை ஏற்படுத்தின.
சமயங்களில் என்னதான் பாதிரியாகிவிட்டாலும், உங்களுக்கு நான் பிள்ளைதான் அப்பா என்று கூவிவிட வேண்டுமென்று ஆசை பிறக்கும். ஆனால் பற்றைக் கடந்து, பந்தங்களைக் கடந்து ஏசுவின் சேனையில் விசுவாசமுள்ள சேவனாகிவிட்ட பின்பு, மன எழுச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற தன்னுணர்வு இருந்ததால், ரெவரண்ட் ஸ்டீபன் மௌனமாகச் சகித்துக் கொள்வார்.
கடந்த பதினைந்து தினங்களாக அப்பாவின் முகம் மிகவும் வெளிறிப் போய் விட்டிருப்பதையும், அடிக்கடி அவர் கவனம் பேச்சில் லயிக்காது சிதறுவதையும் கவலையோடு நோக்கி வந்தார் அவர்.
ஒரு சமயம் அப்பா வீட்டில் இல்லாதபோது, தங்கையிடம் அவர் உடல் நலத்தைக் குறித்து விசாரித்தபோது, அப்பாவிற்குச் சாப்பாடு சரியாக ஏற்கவில்லை என்ற விஷயம் தெளிவாயிற்று.
அதோடு மட்டுமல்ல; இரவில் நெடுநேரம் வீட்டிலே விளக்கேற்றி வைத்துக் கொண்டு அவர் பைபிள் படிப்பதாகவும், எதையோ பறி கொடுத்தவர் போல் களையின்றி உலவுவதாகவும் அறிந்து கொண்டார்.
அவர் மன அமைதியை ஏதோ ஒரு விஷயம் குலைக்கிறதென்று புரிந்து கொண்டார். அந்த அமைதியைப் பெறுவதற்காகவே பைபிளில் அவர் மூழ்க முனைகிறார் என்றும் தெரிந்தது.
ஆனால் அது எது?
தங்கை கூறியதை முதுக்குப் பின்னால் கைகளைக் கட்டியவாறே கேட்ட ரெவரண்ட் ஸ்டீபன் வீட்டிற்குள்ளேயே சிறிதுநேரம் முன்னும்பின்னுமாக உலவியவாறே யோசித்தார். பிறகு குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டு வாங்கிச் சற்று பருகிய பின்பு பிள்ளைகளுக்கு விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி எவ்வளவு முன்னேறியிருக்கிறது என்று கவனிக்க வெளியே போனார்.
அந்த விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு உரிய இடமான ரூபியின் வீட்டுக்கு எதிரில் காலியாகக் கிடந்த பெரிய திடலைத்தான் சபை தேர்ந்தெடுத்திருந்தது. முதலில் அந்த இடத்தைச் செதுக்கி முறம்பு மண்கொட்டும் பணி நடந்து கொண்டிருந்தது. ஆஸ்பைரன்டேட்டைச் சேர்ந்த சில கிறிஸ்தவ சகோதரர்களும், ஊரின் உற்சாகமுள்ள இளைஞர் சிலரும் வேலை செய்து கொண்டிருந்தனர்.
அப்பாவின் மாற்றத்தைக் குறித்துச் சிந்தித்தபடி அதை மேற்பார்வை செய்த ரெவரண்ட் ஸ்டீபன், தற்செயலாக எதிர்வீட்டைப் பார்த்தார். வீட்டிற்கு வெளியே கண்ணும் முகமும் குழிந்து ஒரு மாதத்திற்கு முன் சர்ச்சிலே பார்த்த அந்த முகமே அல்ல இது என்று தோன்றும்படி இளைத்து, எங்கோ பார்த்தபடி நின்றாள் ரூபி.
சட்டென்று மனசிலே ஒரு வெறுப்புணர்ச்சி பிறக்கவும் ரெவரண்ட் ஸ்டீபன் தோளுக்கும் சிரசிற்கும் சிலுவையிட்டுக் கொண்டார்.
‘வெறுக்கவும் விரும்பவும் நமக்கு அதிகாரமில்லை’ என்று அவரது துறவுள்ளம் முனகிற்று.
ஆயினும் அவளது அந்தத் தோற்றம் தன்னையறியாது அப்பாவின் மனப் போக்கை ஞாபக மூட்டிற்று.
யோசனையில் ஆழ்ந்ததால் அவர் கவனம் வேலையில் பதியவில்லை.
மறுநாள் ரெவரண்ட் ஸ்டீபன் கோவிலூருக்கு வந்தபோது வழக்கம் போல் வீட்டிற்குச் சென்றார். அவரது தங்கை கவலை தோய்ந்த முகத்துடன் காணப்பட்டாள்.
“என்னம்மா விஷயம்?” என்று கேட்டார்.
“ராத்திரி பூரா அப்பா தூங்கவேயில்லை. அறையிலே வௌக்கு எரிஞ்சுணு இருந்தது. ஒரு நேரமா எழுந்து போனேன். அப்பா தூக்கத்திலே மொனகறாப்பிடி தனக்குத் தானே மகனே மகனே... நான் பாவி. இந்த... வயசிலே... இந்த வயசிலேண்ணு... என்னவோ சொன்னாங்க. மெல்ல விசும்பி விசும்பி அழறமாதிரி சத்தம் கேட்டது. கொஞ்ச நேரம் கழிச்சு ஐயோ புத்தி தடுமாறுதே. மகனே மகனேன்னு மறுபடியும் சொன்னாங்க. நான் கதவை லேசாத் தெறந்து பார்த்தேன். பைபிளை விரிச்சு வச்சுக்கிட்டு, கூரையைப் பாத்தாப்படி உட்கார்ந்திருந்தாங்க. எனக்குப் பயமா இருந்தது. அவங்களைக் கூப்பிடலே. கொஞ்ச நேரம் பாத்துக்கிட்டே நின்னேன். உனக்குத் தெரியுமா உனக்குத் தெரியுமாண்ணு யாரோடவோ பேசறாப்படி கேட்டாங்க நான் மெதுவா கதவை மூடிக்கிணு வந்துட்டேன்” என்றாள்.
ரெவரண்ட் ஸ்டீபன் திடுக்கிட்டார். அவருக்குச் சித்த பிரமையோ? அவர் பிதற்றியதாகச் சொன்ன வார்த்தைகள் திருப்பித் திருப்பி நினைவில் ஓடின.
சிறிது நேரம் நாற்காலியில் உட்கார்ந்து அமைதியாகச் சிந்தித்தார் ஸ்டீபன்.
அப்பாவின் மனப் போராட்டம் என்னவென்று அவருக்குப் புரிந்தது. அதற்குத் தான் ஒரு காரணம் என்ற கசப்பான உண்மை உள்ளத்தில் உறைத்தது. தங்கைக்குத் தைரியம் சொல்லிவிட்டு வெளியேறினார்.
அன்றிரவு பிரார்த்தனை செய்யும்போது வெகுநேரம் வெரண்ட் ஸ்டீபன் கண்ணீர் சிந்தி, அப்பாவிற்கு மனச்சாந்தி தரும்படி தேவனை வேண்டிக் கொண்டார். படுக்கையில் படுத்தபோது சிந்தனை தெளிவடைந்தது. அவரவர் தர்மங்கள் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை. எது சரியான தர்மம் என்பது அதைக் கடைப்பிடிப்பவன் விசுவாசத்தோடு தீர்மானிக்க வேண்டிய விஷயம். சில சமயங்களில் மற்றவர் தர்மங்கள் என்று தன் சுதர்மத்தைக் கொன்று விடும் உத்வேகம் எழலாம். சுதர்மத்தைக் கொன்றால் அது தன்னையே கொன்று கொள்வதற்கு ஆரம்பம்.
‘வாழ்க்கை யாத்திரை எத்தனையோ பிரயாணிகளை அவர்கள் அடைய வேண்டிய எத்தனையோ லட்சிய நிலைக்கொண்டது. யாவுமே எல்லோருமே இறுதியில் அடைய வேண்டியது ஒரு மோன நிலைதான். எனினும் ஒரு சிட்டுக்குருவி வல்லூறாக மாற ஆசைப்பட்டால் அது உடனே முடியக் கூடிய காரியமல்ல. மேலும் அதில் காட்டுகின்ற அவசியம் ஒரு சுயவதையாகி பாவத்திலே மீண்டும் கொண்டு போய்ச் சேர்க்கும். எல்லா அவசரங்களும் ஒரு பாவமே.’
ரெவரண்டின் சிந்தனை கிளைத்துக் கிளைத்துப் படர்ந்தது.
அப்பாவிற்குத் தன் மீது தர்ம பயம் ஏற்பட்டு விட்டதையும், அதனால் இயல்பாக ஓடிக் கொண்டிருந்த அவரது வாழ்க்கை முறுக்கேறி ஒரு முறிவு நிலையை எட்டிவிட்டிருப்பதையும் அனுசரித்தவாறு அவரது யோசனை ஓடிற்று.
வெகுநேரம் ரெவரண்ட் ஸ்டீபனின் அறையில் மெழுகு வர்த்தி எரிந்து கொண்டிருந்தது.
அந்த ஞாயிற்றுக்கிழமை சர்வீஸுக்கு ஸ்டீபன் மரியதாஸ் வரவில்லை. அவருக்குப் பதிலாக ஒரு மலையாளத்துப் பாதிரி வந்து பூஜை நடத்திச் சென்றார்.
மரியதாஸ் கேட்டதற்கு திருச்சபை உத்தரவுப்படி ஸ்டீபன் மகிமைதாஸ் பாதிரியார் வேலூருக்கு மாற்றப்பட்டு விட்டதாக அவர் பதிலளித்தார். ஓரிரு தினங்களில் ரெவரண்ட் ஸ்டீபனிடமிருந்து, வேலூரிலிருந்து சௌக்கியமாக இருப்பதாகக் கடிதம். அதில் அந்த மாறுதலை அவரே விரும்பிக் கேட்டுக் கொண்டார் என்பதற்கான சூசகம் கூட இல்லை.
அந்தக் கடிதமும் மகன் அங்கு வராமற் போனதும் மரியதாஸுக்கு ஏதோ ஒரு வகையில் ஒரு நிம்மதி தந்தது.
இப்போதெல்லாம் மரியதாஸ் திருப்தியோடு சர்வீஸில் கலந்து கொள்கிறார். எப்போதையும் போல நல்ல கிறிஸ்துவராகவே வாழ்ந்து வருகிறார்.
காங்கிரகேஷனுக்கு மணி அடிக்கப்படும் சமயங்களில் மட்டும் தம் குமாரன் நடத்திய முதல் சர்வீஸ் நினைவு வரும். அந்த மணியோசை ஞாபகத்தில் தோன்றும்.
எங்கெல்லாம் அவ்விதம் மணி அடிக்கின்றதோ? அங்கெல்லாம் என்ன விளைவுகள் ஏற்படுமோ?
[முற்றும் ]
No comments:
Post a Comment