Friday, 25 January 2013

ஆச்சாள்புரம்-4


4
‘பேசி முடிவு செய்து சொல்லிக் கொண்டு போகத் தைரியமில்லை. கோழையைப் போல் ஓடி வந்துவிட்டேன். மகத்தான தவறு செய்துவிட்டேன். உன் அப்பாவைப் பலி வாங்கிக் கொள்வதைக் காட்டிலும் என்னையே பலியிட்டுக் கொள்வது மேலென்று தோன்றிற்று. உன் நினைவு துரத்திக் கொண்டே இருக்கிறது. எங்கும் நிற்க முடியவில்லை. ஓடிக் கொண்டே இருக்கிறேன்.
ராயர்வாளுக்குத் திருப்தியாக இருக்கலாம் அதுபோதும். அந்த ஒன்றிற்காகச் சாகும் வரை உனக்கு இழைத்த அநீதியைச் சிலுவையாகச் சுமக்கத் தயார்.
என்னைப் போல் ஒரு கோழைக்கு உபதேசம் செய்ய உரிமை கிடையாது. ஆனால் மனமார பொய்யின்றி விரும்புவது ஒன்று உண்டு.
நீ வாழ்வைப் பாழாக்கிக் கொள்ளக் கூடாது. என் விருப்பத்தை மட்டும்தான் தெரிவிக்கிறேன். வேறு எது சொல்லும் உரிமையும் எனக்கு இல்லை.
வேணு.
இந்தக் கடிதம் பிரித்துப்படிக்கப்பட்டு அதன் சாதகமான தொனியை உத்தேசித்துக் கௌசல்யாவின் கையில் சேர்க்கப்பட்டது.
அவள் அதை வாசித்தாள். பொருள் புரியாததைப் போல் திரும்பத் திரும்ப வாசித்தாள். ஒரு வெற்றுத் தாளைப் பார்ப்பது போல் அதைச் சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள். பார்வை வெறிச்சிட்டது. புயல் ஓய்ந்த பின் மிஞ்சிய சூன்யம்.
கால்நடை எது நடந்தாலும் ஏன் நிற்கப் போகிறது? நாள், மாதம், வருஷம் என்று தொட்டுப் பிடித்து ஓடிக் கொண்டே இருந்தது. பருவங்கள் வந்தன; போயின.
ஆச்சாள்புரத்து ஆற்றங்கரையில் வந்த வெள்ளம் வற்றி மணல் சுட்டது. வெயிலில் செத்த மீன்கள்; வானக் கருணை மீண்டும் ஒரு தரம் வழிந்து பெருகிற்று. வற்றியது.
ஆற்றோரத் தென்னைகள் குலைகுலையாய்த் தள்ளின. உடன் துணைக்குப் புதிய மரங்கள் முளைத்தன. அவையும், நட்டு வைத்த மகாராசர்களுக்கு நன்றியாகக் குலை தள்ளின.
பழைய மனிதர்கள் இறந்தார்கள். செண்பக மரங்களும் பூத்துப் பூத்துச் சுமைதாங்காமல் மலர் சொரிந்தன. சமயங்களில் மலர்கள் சிந்திச்சிந்தி, பூப்படுகை மாதிரி ஒரு தோற்ற மயக்கம். சுமைதாங்கிகளும் தேய்ந்துவிட்டன. ஒன்றியே ரம்பம் போட்டு அறுத்த மாதிரி நீளமான விரிசல்.
பத்ரகாரியம்மனின் திரிசூலத்தில் ஏறிய துரு, கால கதிக்குச் சாட்சியமாயிற்று.
கௌசல்யாவையும் வேணுவையும் இணைத்து ஊர் பேசிய பேச்சு, பொய்யாப் பழங்கதையாய் என்றே உதிர்ந்த நினைவாய்த் தேய்ந்து போயிற்று.
அவள் ‘டிரெயினிங்’ படித்து வாத்தியாரம்மாவாகி விட்டதாகப் பேசிக் கொண்டார்கள். வேணுவைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை.
அவன் எங்கே?
இருபத்து மூன்று வருஷங்கள் கழித்து, அந்தி இறங்கிய ஓர் முன்னிருளில் ஆற்றுமணலில் சற்று வயதான உருவம் ஒன்று நடந்து வந்து கொண்டிருந்தது.
தலையில் பாதி நரை. நாலைந்து மாதமாய் மழிக்காத தாடியிலும், கண் குழிவிலும், முகத்தில் விழுந்த திரையிலும் முதுமையின் முத்திரை. பிரயாணக் களைப்பு. வாழ்க்கைச் சாலையில் வழி நடந்த அலுப்பு. தோளில் நீளமாக வார் வைத்துத் தொங்கிய பிரயாணப்பை.
அவன்தான் வேணு.
ஆற்று மணலில் காலடித் தடங்கள் பழைய அழுத்தமின்றி மெதுவாகவே விழுந்தன.
ஏதோ ஹூங்காரம் கேட்கவே நின்றான். ரயில்வே பாலத்தில் ஓசை. ரயில் வந்து கொண்டிருந்தது. புகை கக்கிச் சிம்மமென விரையும் நீராவி எஞ்சினுக்குப் பதில் டீஸல் எஞ்சின் வந்து கொண்டிருந்தது.
ஆழ்ந்த ஞாபகங்கள் கிளர்ந்தெழ அவன் அதை உற்று நோக்கினான்.
பிறகு மெதுவாக மேடு ஏறிப் பெரியசாமிப் பிள்ளை வீட்டிற்குச் சென்றான். வீட்டை இடித்துப் பெரிதாகக் கட்டி விட்டிருந்தார்கள். தெரு வாசலில் பெரிய மல்லிகைப் பந்தல்.
உள்ளே போனான். தெரிந்த முகம் எதுவுமில்லை. விசாரித்ததில் பெரிய சாமிப்பிள்ளை காலமாகிப் பல வருஷங்களாய் விட்டிருந்தன. அவன் காலத்தில் பள்ளிக்கூடத்தில் இரண்டாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தவன் தான் வீட்டுத்தலைவன். அவனுக்கு ஆசிரியர் வேணுவை அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை.
வேணு தன்னை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று சுருக்கமாக “வெளியூர்... உங்க அப்பாவின் சிநேகிதன்...” என்று மட்டும் சொன்னான்.
யாரோ யாத்திரிகன் என்று அன்றிரவு அவனுக்கு அங்கே சாப்பாடு ஏற்பாடாயிற்று.
“கொஞ்சம் வெளியே போய்விட்டு வருகிறேன்” என்று ஊருக்குள் போனான் வேணு.
தர்மரை ஜெயிலில் வைத்திருந்த தர்மராஜா கோவில் இடிந்து விழச் சமயம் பார்த்திருந்தது. அங்குமிங்கும் மாடி வீடுகள். அவற்றில் நாகரிகத்தின் வெற்றியாய்ப் பகட்டிய ட்யூப் விளக்குகள். புதியதாக ஒரு பொலிவு தோன்றியிருந்தது.
ராயர் வீட்டருகே போய் நின்றான் வேணு. தெருவிலே ஆள் நிற்பதைப் பார்த்ததும் “யாரது?” என்றொரு குரல் அதட்டியது.
“ராயர் இருக்காருங்களா?”
“ராயரா...?” என்று கேட்டுக் கொண்டே புஸு புஸு வென்று மீசை வைத்த ஒரு பருத்த மனிதர் வெளியே வந்தார்.
“அப்படி யாருமில்லிங்களே!” என்று இழுத்த குரல் ஒருகணம் நிதானித்தது.
“ஓஹோ! பழைய வீட்டுக்காரறாங்களா?”
“கர்ணம் கோபால்ராவ்.”
“ஆமாம்... ஆமாம். அவரு காலமாய்ட்டாருங்க.”
“அவங்க வீட்டார்?”
“பெரிய பெண்ணு அடுத்தாப்பலே ஓலக்கூரிலே ஹைஸ் ஸ்கூல் ஹெட்மிஸ்டரா இருக்கு.”
“ஹெட்மிஸ்ட்ரஸா?”
“ஆமாம்...”
“வேணுவுக்குப் புதிராக இருந்தது. கௌசல்யா... எஸ்.எஸ்.எல்.ஸி.தானே! ஓ, வேலை செய்து கொண்டே பட்டப் படிப்பும் படித்திருக்கலாம்.”
“நீங்க?”
“அவங்களுக்குத் தெரிஞ்சவன், வெளியூர்.”
“குடும்பமே அங்கேதான். நீங்க போனால் பார்க்கலாம்.”
“நமஸ்காரம்.”
அங்கே மேலும் நிற்காமல் வேணு திரும்பிவிட்டான்.
பெரிய தனக்காரர் வீட்டில் இரவு சாப்பிடும்போது, ராயர் வீட்டாரைப் பற்றி மெள்ளப் பேச்சுக் கொடுத்தான்.
“ரத்தக் கொதிப்பினாலே ராயர் காலமான பிறகு கௌசல்யாம்மா கல்யாணமே பண்ணிக்கலே. வாத்தியார் வேலை செய்து கொண்டே ஒடம்பொறப்புக்களையெல்லாம் படிக்க வச்சுக் கல்யாணம் கட்டிக்கொடுத்தாங்க. இப்ப கடைசித் தங்கைதான் பாக்கி. ஹைஸ்கூல்லே அவங்க கிட்டேயே படிச்சுக்கிட்டு இருக்கு. டீச்சிங்கிலேயாகட்டும், பிள்ளைகள்கிட்டே அன்பா நடந்துக்கிறதிலே யாகட்டும், அவங்களுக்கு ரொம்ப நல்ல பேர்.”
வேணு இலையைப் பார்த்துக் கொண்டிருந்ததால் முகம் கவிழ்ந்திருந்தது. நரையோடிய தலை மட்டும் மின்சார விளக்கின் ஒளியில் பளபளத்தது.
தெருவாசல் முற்றத்திலே மல்லிகைப் பந்தலின் கீழ் கயிற்றுக் கட்டிலில் வேணு படுத்துக் கொண்டான். சற்றுத் தாமதித்து நிலா வந்தது. நூற்றுக்கணக்கான நினைவுகளைச் சுமந்து வந்த பழைய நிலா தேய்ந்து தேய்ந்து இருளின் சூன்யத்தில் ஐக்கியமாகி, மீண்டும் ஒரு நாள் கீற்று விட்டு வளரப்போகும் அதே பழைய நிலா.
‘சோ’வென்று காற்று. வேணுவுக்கு உறக்கமில்லை. காலத்தின் கை தீண்ட முடியாத கல்வெட்டுக்களைப் போல், மனசிலே அச்சு மாறாத எத்தனையோ எத்தனையோ நினைவுகள். ஞாபகம் தொட்டுத் தொட்டும் தேயாத புதுமையோடு, கலையாக் கொலுவாய், மனசின் சுமையாய், வாழ்வின் வகுப்பில் நின்ற மீதியாய்க் கனத்த நினைவுகள்.
வயதும் அனுபவமும் உணர்ச்சிகளின் ஆவேசத்தைத் தணித்து விட்டன. ஆயினும் ஊமைக் கனவாகத் துயர் எரிந்து கொண்டுதான் இருக்கிறது. திரடு கட்டி நின்ற துயர் உறுத்திக் கொண்டுதான் இருக்கிறது.
வேணு எழுந்து செண்பக மரத்தடிக்கு நடந்தான். மரங்கள் ஓங்கி வளர்ந்திருந்தன. சுமைதாங்கி விரிசல் கண்ணில்பட்டது.
மார்பின் மீது கையைக் கட்டிக் கொண்டு வேணு நின்றான். செண்பக மரங்கள் காற்றிலே சலசலத்தன. எதிரும் புதிருமாக அந்த இரண்டு ஓசைகள். ஏதோ வழக்காடுவது போலிருந்தன.
வேணு நின்று கேட்டுக் கொண்டிருந்தான். சிரிப்பும் அழுகையும் கனவும் கலந்த ஆயிரம் சொற் கூட்டங்கள் இன்னும் அங்கே தங்கியிருப்பதைப் போல் வேணுவின் மார்பு விம்மியது.
“நான் செய்தது சரியா, தப்பா?”
சாகாத அந்தக் கேள்வி. ராவண சிரசைப்போல் ஒவ்வொரு மனத்திருப்திக்குப் பின்பும் முளைக்கும் அதே கேள்வி.
கௌசல்யா என்ன நினைத்திருப்பாள்?
“என்ன பேதைமை! எவ்வளவு நாள் கழித்துப் பழங் கணக்கைப் புரட்டுகிறோம்” என்று விரக்தியாக மனசில் ஒரு பரிகாசம்.
“அஞ்சியது போலவே அவள் ஒற்றையாக, நினைவின் ஒண்டுக்குடியோடு வாழ்ந்து கொண்டிருக்கிறாள். துயரின் சிலுவையைச் சுமக்கிறாள்.”
வேணுவின் மனசு, ஒடிந்த சிறகோடு தத்தித்தத்தி நடந்தது.
“நான் ஏன் இங்கு வந்தேன்? இதைக் கேட்கவா?”
“என்னை இங்கு வரச் செய்தது எது?”
வேணு சுமைதாங்கிக் கல்லில் போய் உட்கார்ந்தான்.
“சரியா தப்பா?... சரியா தப்பா?” என்ற வட்டாட்டம் நின்றது.
சரி, தப்புக்களைக் கடந்து வாழ்க்கை ஓடிவிட்டது. நாம் பாழென்று நினைப்பது அவளுக்குச் சாந்தியாக இருக்கலாம். உடன்பிறப்புகளைப் படிக்க வைத்து, திருமணம் செய்து கொடுத்து...
“டீச்சிங்கிலாகட்டும்... பிள்ளைகளை அன்பா நடத்தறதிலாகட்டும்” என்று சோமு சொன்ன வார்த்தைகள் காதில் சுழன்றன.
கௌசல்யாவுக்கு மறக்கத் தெரியாது. ஞாபகங்களை இப்படி எதிலோ கரைத்துக் கொண்டிருக்கிறாள்.
கலகலவென்று நூற்றுக்கணக்கில் பிள்ளைகள் கூட்டம் ஒன்றும் அவர்கள் மத்தியில் கௌசல்யா முதிர்ந்த பக்குவத்தோடு நிற்பதும் கண்ணில் நிழலாடிற்று. வெகுநேரம் வரை சுமைதாங்கியில் உட்கார்ந்திருந்தான். ஒரு நேரமாக வீட்டுக்காரர் வெளியே வந்து காலிக் கட்டிலைப் பார்த்து சம்சயப்படுவார் என்று தோன்றவே வேணு எழுந்து ஊருக்குள் நடந்தான்.
நியாயம்தான் என்று விட்ட குறையைத் தொட்டு நினைவு முணுமுணுத்தது.
“அந்த அறிவை... ரசானுபவம் நிறைந்த அந்த உள்ளத்தை ஏகபோகமாகக் கொள்ளையடித்து வீட்டுக்கதவுக்குள் பூட்டிக் கொள்ளப் பார்த்தோமே!”
வேணு கட்டிலில் விழுந்தான்.
“விதியின் தீர்ப்பு நியாயம்தான். அவள் வாழ்க்கை பாழாகவில்லை” என்று வாய்க்குள் சொற்கள் உருண்டன.
பொழுது விடியுமுன், வானில் எரிந்து இருள் உதிர்ந்த சாம்பல் பூக்காமுன் வீட்டுக்காரரிடம் சொல்லிக் கொண்டு புறப்பட்டான் வேணு.
“விடியட்டுமே! குளிச்சி, டிபன் சாப்பிட்டுப் போறது.”
“இல்லே, ரயிலுக்குப் போகணும்”
“அப்படியா... செய்யுங்கோ”
ஆச்சாள்புரம் உறங்கிக் கொண்டிருந்தது. வீடுகளும் மனிதர்களும் மாறிவிட்ட தோற்றம். அங்குமிங்குமாகச் சில பழைய காட்சிகள். அதுவும் மாறிப்போகும். யாவுமே காலத்துக்கு இரையாயினும் நெஞ்சு துடிக்கும் வரை நினைவு ஓர் உலகமாக, சாகாது திரிசங்கு தொங்குவது போல் நிற்கப் போகிறது.
அது வெற்றியா, விசனிக்கத்தக்க வாழ்க்கைத் தோல்வியா?
இந்தக் கேள்விகளுக்கு விடை வந்தால் என்ன, வராமற் போனால்தான் என்ன?
வேணு ஆற்றைக் கடந்து சாலைக்கு வந்தான்.
அந்த விடியற்காலையில் ஓர் இரட்டை மாட்டு வண்டி தூங்கி வழிந்து போய்க் கொண்டிருந்தது. வண்டிக்காரன் மாடுகளை அதட்டி வண்டியை நிறுத்தினான். கீழே குதித்து வண்டிக்கு அடியில் இன்னும் எரிந்து கொண்டிருந்த ‘லாந்தரை’ ஊதி அணைத்தான்.
சாலை ஓரத்தில் உபாதை நீக்கிவிட்டு வேப்பமரத்தில் பல் துலக்கக் குச்சி ஒடித்தான்.
“எங்கேப்பா போவணும்?” என்று கேட்டான் வேணு.
வேப்பிலையை உருவிப் போட்டுக் கொண்டே வண்டிக்காரன் பதில் தந்தான்.
“ஒலக்கூருக்கு.”
கௌசல்யா வேலை செய்யும் ஊர்.
“இன்னும் எவ்வளவு தூரம்?”
“தோ, மேக்கத்திப் பள்ளம் தாண்டினா, எடத்தாலே மண் ரோட்டு திரும்புது. அங்கிருந்து ரெண்டு மைல்... ஏங்க ஐயா... வர்றீங்களா?”
மனம்... மனம்... கட்டிக்கட்டி வைத்தாலும் பாதரசமாய்ச் சிதறி ஓடுகிறதே!
“காலி வண்டிதான். வர்றதானா வாங்க... எனக்கும் வழித் துணையாச்சு.”
“இப்போது ஏன் அவளைப் பார்க்க வேண்டும்? அவளுக்குப் பழகிய சாந்தியைக் குலைத்து, பள்ளிக்கூடம் என்ற அவளது பெரிய உலகத்திலிருந்து பிரித்து அலைக்கழிக்கவா?”
சிதறிய மனசை அரைத்துக் கட்டிக் கொண்டிருந்தான். வண்டிக்காரன் தாமதிப்பதைப் பார்த்து வாய் முந்திக் கொண்டது.
“இல்லேப்பா... நீ போய் வா.”
அச்சாணியும் மாட்டுச்சலங்கையும் ஜதியிட்டுக் கொண்டு வண்டி போய்விட்டது.
ஒரு சந்திப்பு... சில வார்த்தைகள்...
தூரத்தே மறையும் வண்டியைப் பார்த்து உள்ளே எதுவோ கரைந்தது.
‘அப்படி முடியாது... அதோடு மட்டும் முடிந்துவிடாது. அப்பால்... பிரிந்து வளைந்து எங்கெங்கோ விலகிய பாதைகள் மோதி வேறு குழப்பம் தோன்றும். ஒரே சந்திப்பில் நிற்கும் பக்குவம் வந்துவிட்டால் அப்புறம் அந்த சந்திப்பே கூட அவசியமில்லையே! நினைவில் கௌசல்யா யௌவனத்தோடு எனக்கே உரியவளாய் இருக்கிறாள். நிஜம் எப்படியோ... வேண்டாம், ஒரு தலையீடு போதும். இரண்டாவது தலையீட்டிற்கு அதிகாரமில்லை.”
வேணு பஸ்ஸுக்குக் காத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான். எந்த ஊருக்குப் போவது என்று இன்னும் தீர்மானமாகவில்லை.
வார் வைத்துத் தோளில் தொங்கிய பிரயாணப்பையில் சித்திரப் பெட்டியும், கவிதைப் புத்தகமும் இருந்தன. நாடோடி போல் போய்க் கொண்டே இருக்கிறான். அவை மறதிக்கு உபாயமாக ஊரூராக இழுத்துக் கொண்டே போகின்றன. நெடுந்தொலைவு சுற்றி ஆயிற்று. இன்னும் எவ்வளவு தூரமோ!
பரவி வந்த வெளிச்சத்தில், சாலை ஓரத்தின் நின்ற மஞ்சள் போர்டில் நறுக்கி வைத்தவை போன்று, கறுப்பு எழுத்துக்கள் தெரிந்தன.
“ஆச்சாள்புரம் - 2 கி.மீ.”
ஆச்சாள்புரம் - பெயரிலே என்ன தொனி! என்ன ஈர்ப்பு! மந்திரம் போல் மனசைக் கவ்வி இழுக்கிறதே! ஒரு காலமே உள்ளடங்கி இருப்பதைப் போல் அந்தச் சொற்களில் என்ன தாக்கு!
யாருக்கு இந்தப் பெயரை வைக்கத் தோன்றியது?
சாலையில் வந்த முதலாவது பஸ்ஸை ஊர் பேர் பார்க்காமல் கை நீட்டி நிறுத்தினான் வேணு.
பஸ் நின்று அவனை ஏற்றிக் கொண்டு நகர்ந்தது. நின்று நகர்ந்ததால் டீஸல் புகை பஸ்ஸுக்குப் பின்னால் கவிந்து திரண்டு போர்டை மூடியது.
ஆச்சாள்புரம் 2 கி.மீ. என்ற எழுத்துக்கள் பஸ் நகர, நகர மறைந்து கொண்டே வந்தன.

No comments:

Post a Comment