Saturday, 26 January 2013

பாடிப்பறந்த குயில்-5

5
மறுநாள் காலையில், தலை ஆற்றிக்கொள்ள மாடிக்கு வந்த கங்கா, மாடிக் கைப்பிடியைப் பற்றிக் கொண்டு அப்படியே நின்றுவிட்டாள். சூர்யோதயமாகி இளங் கிரணங்கள்,சிவந்து நீர் கலங்கிவிட்டிருந்த அவள் கண்களையும், துடி துடிக்கும் செவ்விதழ்களையும் வெகு அனுதாபத்தோடு தழுவின. இளம் வெய்யிலில் பிரகாசிக்கும் அந்தச் சோகத்தைத் தாளமாட்டாமல் ஜீவா தலைகுனிந்து கொண்டான். நேரம் வளர்ந்தது. கங்கா கைப்பிடியைப் பற்றியவாறே நின்று கொண்டிருந்தாள்.
“நேரமாகிறது, உள்ளே போ கங்கா!” என்று குரல் கலங்கச் சொன்னான்.
“ஊம், என்ன செய்யப் போகிறீர்கள்?” என்று கண்களைத் துடைத்தவாறே கேட்டாள்.
“அப்பா பேசினதையெல்லாம் கேட்டாயா?”
“கேட்டுக் கொண்டுதான் இருந்தேன். அவருடைய நியாயம் அவருக்கு. உங்களுக்கும் எனக்கும் எது நியாயம்?”
“கங்கா...” என்று வேகமாகக் கையை நீட்டியவாறு சொல்ல வந்தவன், குளிர்காலத்தில் உறைந்துபோகும் மஹா கங்கை போல் உள்ளம் சாம்பி நிற்கும் கங்காவின் தோற்றத்தைக் கண்டு,தன் வேகத்தைக் கட்டுப்படுத்தியவாறு, “கௌரவம் நிறைந்த ராவுஜியின் மகள் நீ. நித்யா, தாமு, கணேஷ், ராதா ஆகியவர்களுக்கு மூத்தவள். நமது விருப்பங்களை நியாயமாக்க முடியுமா?” என்று உருக்கமாய்க் கேட்டான் ஜீவானந்தம்.
“அப்படியானால் நீங்கள் ஒருபுறமும், நான் ஒருபுறமும் வேதனையால் செத்துக் கொண்டிருக்கலாமா?”
“கங்கா...” வருத்தத்துடன் அவளைத் தடுக்கப் போனான்.
கீழேயிருந்து ராயரம்மாளின் குரல் கூப்பிட்டது. “கங்கா!... அரீ கங்கா!”
“அம்மா கூப்பிடுகிறாள்” என்று அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்துவிட்டுக் கங்கா கீழே இறங்கிப் போய் விட்டாள். மாலையில் அவனுக்கு ராவுஜி வீட்டுக்குப் போகவே விருப்பமில்லை. அங்கே போகும் ஒவ்வொரு நிமிஷமும் கங்காவின் உணர்ச்சிகளையும், தன் உணர்ச்சிகளையும் பரிசோதனைக்குள்ளாக்கிக் கொள்வதாகத்தான் ஆகுமென்று அவனுக்கே தோன்றிற்று. ஆனாலும், ஏழு மணிக்கு ராவுஜியே கூப்பிட்டுக் கொண்டு போக வந்துவிட்டார்.
“என்னய்யா ஜீவு! நேத்திக்கு அவ்வளவு தூரம் சொல்லியனுப்பிச்சேன், இன்னும் இங்கேயே உட்கார்ந்துண்டு இருக்கியே? வா, வா. மாமி வேற காப்பி போட்டு வச்சுட்டுக் காத்துக் கொண்டிருக்கா” என்றார்.
அதை மறுப்பதுதான் தவறாக அவனுக்குத் தோன்றிற்று. வேதனையோடு அவர்கூட நடந்தான்.
“என்னடா ஜீவு! பொண்ணைத் தராத இந்த மனுஷாள் முகத்திலேயே விழிக்கிறதில்லைன்னு தீர்மானம் பண்ணிட்டியா? ஏண்டா கொழந்தே. நீயே ஒதறிட்டாலும் நாங்க சும்மா இருந்துடுவோமா? இந்தா, எங்க மஹாராஷ்டிர பட்சணம் ஸந்தேஷûம், பர்பியும். ஒனக்காக பண்ணியிருக்கிறேன். மாப்பிள்ளை முறுக்கெல்லாம் பண்ணிக்காமே சாப்பிடு. நீ வராமே எங்களவர் சாதகப் பட்சி மாதிரி தவிச்சுப்போயிட்டார். அவரும்தான் தம் பிரதாபத்தையெல்லாம் யாருகிட்டே கொட்டுவார்? நான் பொம்மனாட்டி. அடுப்பங்கரையாச்சு; அண்டைவீடாச்சு. பிள்ளைகளுக்கெல்லாம் அப்பா கதை பிடிக்காது. நீ ஒருத்தன் வசமாகச் சிக்கிட்டிருக்கே. அத்தனை லேசிலே உன்னை விடுவாரா?” என்று சிரிப்பும் குறும்புமாக நிலைமையைச் சுவாதீனப் படுத்தினாள் ராயரம்மாள்.
“அடியே!... அடியே!” என்று சிரித்தவாறு கிழவர் கையை ஓங்கிக் கொண்டு எழுந்தார்.
‘இவர்கள் வீட்டிலிருந்தா - மாறாத பாசமும் அன்பும் நிலவும் இந்த வீட்டிலிருந்தா - கங்காவை இஷ்ட விரோதமாகத் தான் கொண்டுபோக முடியும்?’ நெஞ்சு பொருமிப்பொருமிச் சக்தியிழந்து வந்தது. ராயரம்மாள் காப்பியை வைத்துவிட்டுப் போனாள்.
“என்ன ஜீவு! இதெல்லாம் வாழ்க்கையிலே ரொம்ப சகஜம். இந்த மாதிரி பிரச்னைகள் கூட இல்லேன்னா, அப்புறம் எதுதான் இருக்கு? இதுக்காக மனசு சங்கடப்படப்படாது. விஷயம் இப்படின்னு தெரிஞ்சுக்கிட்டியா - சரி, அதற்கேத்த மாதிரி நடந்துக்கணும். இதை நான் பெரிசா எடுத்துக்காதப்போ நீ ஏன் அவஸ்தைப்படறே?” என்று தெம்பூட்டினார்.
காப்பியைச் சாப்பிட்டானதும், “கங்கா! இந்தப் பாத்திரங்களை வந்து எடுத்துப்போ, அம்மா!” என்று மராட்டியில் கூறினார்.
கங்கா தலைகுனிந்தபடியே பாத்திரங்களை வந்து எடுத்துச் சென்றாள். ராவுஜி அறியாமலா, இல்லை, வேண்டுமென்று தானா இப்படி எல்லாம் அக்னி பரீட்சை செய்கிறார் என்று அவனுக்குத் திகைப்பாக இருந்தது. வெகு நேரம் வரையில் அவனைச் சம்பாஷணையில் சுவாரசியமாக ஈடுபட வைத்துவிட்டுத்தான் அனுப்பினார்.
தினசரி ராவுஜியின் வீட்டுக்குப் போவது தவறவில்லை. ஆனால், இப்போது அவர் அறையோடு சரி. முன்போல் வீட்டுக்குள்ளே நுழைந்து எல்லோரிடமும் கலகலப்பாகப் பேசுவதென்பது அவனாலேயே முடியாமற் போய்விட்டது. ஆனால் காலை வேளைகளில் மாடிச் சந்திப்பு நிகழ்ந்து வந்தது எவ்வளவு துக்கத்தை வெளியிட முடியுமோ, அவ்வளவு கங்கா வெளியிடலானாள். கொஞ்ச நாட்கள் தேற்றிப் பார்த்தாள். தன்னையே ஏமாற்றிக் கொண்டு நியாயம் கூறிப் பார்த்தாள். எல்லாம் வீணானபின், மௌனமாகக் கண்ணீர் விட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்கலானாள். கங்கா திட்டவட்டமாக வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ள முடியாது என்று தெரிவித்தும் விட்டாள். அந்த நேரத்தில் அவனை யாரோ பெண் பார்க்க வந்திருந்தார்கள்.
கங்கா என்ன செய்யப் போகிறாளோ என்று பயந்தவாறேதான் ஜீவா கல்லூரிக்குச் சென்றான். வீடு திரும்பியதும், முகம் கழுவிக் கொண்டு ராவுஜி வீட்டுப் பக்கமாகப் போனான். இன்னும் வந்தவர்கள் போகவில்லை. அன்றிரவு சீக்கிரமாகவே தூங்கிவிட்டான். அவன் மாடியில்தான் படுத்துத் தூங்குவது வழக்கம். ஏதோ ஓர் அகால வேளையில் திடுக்கிட்டு விழித்தான்.
“ஜீவா! ஜீவா...” என்று மிக மெல்லிய குரலில்ஒன்று அவனை அழைத்தது. ஆச்சரியத்துடன் எழுந்து பார்த்தான். நிலவொளி வீசிக் கொண்டிருந்தது. கனவு மோஹினிபோல் தலையில் ஒரு முக்காட்டுடன் அடுத்த மாடியில் கங்கா நின்று கொண்டிருந்தாள்.
“என்ன கங்கா?” என்று கலக்கத்தோடு கேட்டான்.
“கீழே இறங்கி வாருங்கள்” என்றாள்.
ஜீவானந்தம் திகைத்தவாறு ஓசை செய்யாமல் கீழே இறங்கி வந்தான். கையில் ஒரு பையுடன் தயாராகக் காத்திருந்த கங்கா அவன் வந்ததும், கையைப் பிடித்துக் கொண்டு விடுவிடென்று ஒரு கோயில் அருகில்அவனை அழைத்துச் சென்றாள்.
“ஜீவா!” என்று கோயிலை நெருங்கியதும் அவன் தோளின் மீது முகத்தைச் சாய்த்துக் கொண்டு விம்மிவிம்மி அழலானாள்.
“தயவு செய்து, எனக்காக என்ன விஷயம் நடந்ததென்று சொல்லமாட்டாயா? எங்கே? சொல்லு! சொல்லு!” என்று அவள் முகத்தை இரண்டு கரங்களாலும் ஏந்திக் கெஞ்சினாள் ஜீவா.
“என் மனப்பூர்வமாக உங்களுக்கு என்னை ஒப்படைத்து விட்ட பிறகு, அடிக்கடி நடக்கும் இந்தப் பெண் பார்க்கும் நாடகத்தில் நான் நடித்துக்கொண்டே இருக்க வேண்டுமா?”
ஜீவானந்தம் அதற்குப் பதில் சொல்லவில்லை.
“நீங்கள் என்ன பதில் சொல்வதாயிருந்தாலும், நான் மாட்டேன் ஜீவா. போதும் இந்த நரக வேதனை! உங்களையே முழுக்க நம்பிக்கொண்டு புறப்பட்டு வந்துவிட்டேன் வீடு, வாசல், அம்மா, அப்பா, சகோதரிகள் எல்லாரையும் துறந்துவிட்டு, கொண்டுபோய்க் கிணற்றில் தள்ளுவதாயிருந்தாலும் தள்ளிவிடுங்கள். இனி என் மன வேதனைகளை என்னால் சகித்துக் கொண்டிருக்க முடியாது.”
“கங்கா!” என்றான் சற்று உரக்கவே. தூக்கத்தில் நடமாடுபவனை உலுக்கி எழச் செய்வது போல், அவள் தோள்களைப் பற்றி உலுக்கி, “உனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா? உங்க அப்பா என்னை எவ்வளவு நேசிக்கிறார் தெரியுமா? அவர் என்னைக் கேவலமான ஈனப்பிறவியென்று தம் நல்ல உள்ளம் நோகக் காறித் துப்பவேண்டுமா? உன் உணர்ச்சிகளைப் பற்றி நீ பெரிதாக மதிக்கிறாயே ஒழிய, உனக்கப்புறம் நித்யா இருப்பதை அடியோடு மறந்தே போய்விட்டாயா? உன்னைக் கிணற்றில் தள்ளும் அதிகாரமோ, உன்னை எங்காவது அழைத்துக் கொண்டு செல்லும் அதிகாரமோ எனக்குக் கிடையாது. வீட்டுக்குத் திரும்பிப் போய்விடு. ராவுஜியின் மகளா இப்படி என்று எனக்கே மனம் திடுக்கிடுகிறது.”
“ஜீவா! ஐயோ ஜீவா...!” என்று அவன் கைகளைப் பிடித்து அதில் முகத்தைப் பதித்துக் கொண்டு அழுதாள். “நான் உங்கள் சொத்து நீங்கள் என்னை என்னவேணுமானாலும் செய்யலாம்” என்று சிறு குழந்தைபோல் அழுதாள். அவளைச் சமாதானப்படுத்தி, படாத பாடுபட்டு வீட்டுக்குத் திருப்பிக் கூப்பிடு வந்தான். கதவைத் தட்டி ராவுஜியை எழுப்பினான்.
பாதி உறக்கத்தில் என்னமோ ஏதோ என்று அவர் எழுந்து வந்தார். கங்காவோடு உள்ளே நுழைந்து, “ஸார், என்னை மன்னிச்சுடுங்கோ. நான் ஒரு கிராதகன். நீங்க எவ்வளவோ சொல்லியும் வலுக்கட்டாயமாகக் கங்காவை அழைச்சுட்டு ஸ்டேஷன் வரைக்கும் போயிட்டேன். அப்புறமாத்தான் எனக்குப் புத்தி தெளிந்தது. இதோ அழைச்சுட்டு வந்துவிட்டேன். என்னை என்ன பண்றதானாலும் பண்ணுங்கோ” என்றான்.
அவர் கங்காவை உள்ளே அனுப்பிவிட்டு, “ரொம்ப சந்தோஷம் ஜீவு! பொறுப்புணர்ந்த மனுஷனா, கொழந்தையைத் திருப்பி அழைச்சுக்கிட்டு வந்தியே, போதும். இனிமேயும் நான் உன்னோட பழகினா அது எனக்கும் நல்லா இருக்காது; உனக்கும் நல்லா இருக்காது. இதற்கு உன்னைத் தப்பு சொல்றேன்னு அர்த்தமில்லே. வயசு அப்படித்தான். எல்லாத்திலேயும் ஓர் அவசர முடிவு வரும். அது திடீர்னு மாறும். நானும் டிரான்ஸ்ஃபர் போயிடுவேன். அகாலமாகிவிட்டது. போய்த் தூங்கு போ” என்று சுருக்கமாகப் பேசிவிட்டுக் கதவை அடைத்தார். ஜீவானந்தத்துக்கு அந்த வீட்டின் கதவு மட்டுமல்ல, கங்காவின் மனக் கதவும் அடைக்கப்பட்டுவிட்டன. ஆனால் அது அத்தனை சுலபத்தில் அவன் நெஞ்சிலிருந்து மறைவதாயில்லை.
மௌனமாக வீதியில் தலை குனிந்து கொண்டே செல்லும் அவன் இதயத்தில் எப்பேர்ப்பட்ட போராட்டமும் எவ்வளவு காயங்களும் நிரம்பியிருக்கின்றன என்று யாரும் ஊகிக்க மாட்டார்கள். கங்கா அழுது தீர்த்துக் கொள்வாள். ராவுஜி தம்பதிகள் நொந்து தீர்த்துக் கொள்வார்கள். ஆனால் அவன்...?
ராவுஜிக்கு மாற்றல் வரும் வரை கூட அவனால் அங்கு இருக்க முடியவில்லை. ஒரு வாரத்தில் மாமாவிடம் சொல்லிக் கொண்டு படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டுப் புறப்பட்டு விட்டான். ஆனால் கங்கா அவன் நெஞ்சில் சாகவில்லை. ஊழிக் காலத்துக்கும் அணையாத செந்தழலாக, அவன் வாழ்வெங்கும் துக்கத்தினால், எரிந்து கொண்டிருந்தாள்.
காலடியோசைகளும் பேச்சுக் குரல்களும் கேட்டுத் துப்பாக்கியின் மீது கைகளையும், கைகளின் மீது முகத்தையும் ஊன்றிக் கொண்டிருந்த ஜீவா தலையை நிமிர்த்தித் திரும்பினான். சுட்ட மானைத் தோளில் போட்டுக் கொண்டு, ஜக்கோடன் பின்தொடர ஜான்ஸனும் ராஜவேலும் வந்து கொண்டிருந்தார்கள்.
கைக்குட்டையை எடுத்து முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டு, வரவழைத்துக் கொண்ட புன்சிரிப்போடு, ஜீவா எழுந்து அவர்களை நோக்கிச் சென்றான்.
“நிஷா எங்கே சாமி?”
“வெல் மை பாய்... நீ என்ன இங்கே உட்கார்ந்துகிட்டு இருக்கே? அவங்க எல்லாம் எங்கே?” என்றார் ஜான்ஸன்.
“அவன் அவளுக்குத் துப்பாக்கி சுடக் கத்துக் கொடுக்கப் போயிருக்கான்?”
அவன் குரலில் தொனித்த அவமரியாதையைக் கண்டு ஜான்ஸன் விருட்டென்று அவனை ஏறிட்டுப் பார்த்தார்.
“துப்பாக்கி சுடவா? நீங்க ஏன் சாமி அனுப்பிச்சீங்க? அந்தக் களுதையைக் கூட்டிக்கிட்டு வந்ததே தப்பு” என்று பொருமினான் ஜக்கோடன்.
“இரு இரு, ஜக்கோடா! அவள் துப்பாக்கி சுடக் கத்துக்கறதிலே என்ன தப்பு?” என்று அவனை அடக்கினார் ஜான்ஸன்.
ஜக்கோடன் குண்டுபட்டு, மருண்ட கண்கள் அச்சத்தால் நிலைகுத்தி நின்றுவிட்டிருக்க மாண்டுபோயிருந்த மானைக் கீழே இறக்கினான்.
“சாமி! நான் போயி அவளை இழுத்துக்கிட்டு வர்றேன்” என்று முன்னால் போன ஜக்கோடனை நிறுத்தி, “அவங்களை எங்கே போய்த் தேடுவே? இதோ ஒரு குண்டு சுடுவோம். அப்ப அவங்க புரிஞ்சுக்கிடுவாங்க” என்று துப்பாக்கியை உயர்த்தி ஒரு வேட்டு போட்டார் ஜான்ஸன். காடு அதிர்ந்தது.
சிறிது நேரத்தில் நிஷாவும் தியாகராஜனும் சிரித்தவாறே வந்து சேர்ந்தார்கள். அவர்களைச் சேர்த்துப் பார்க்கப் பார்க்க ஜீவாவின் உடம்பு பற்றி எரிந்தது. அவர்கள் இருவருக்கும் பின்னால் தியாகராஜன் வீட்டில், ஏக்கம் நிறைந்த முகத்தோடு கண்ட கங்காவின் இரண்டு பெரிய கண்ணீர்த் துளிகள் தெரிவது போல் அவனுக்குத் தோன்றியது. ஒரு வரையறையில்லாத முரடனிடம் கங்காவை ஒப்படைத்து விட்டிருக்கிறாரே அவள் தந்தை என்று உள்ளம் கொதித்தது. அவன் ஏதாவது பேசவும் பயந்தான். அந்தப் பேச்சு அவனை உஷ்ணப்படுத்தி விபரீதமான காரியங்களில் இறக்கி விடக் கூடும் என்பதே அதன் காரணம். சாப்பாட்டிலும் கலகலப்பான பேச்சுக்களிலும் காலம் கழிவதே தெரியாமல் மாலை மங்கிவிட்டது.
“எஸ்; பரணெல்லாம் தயார்தானே, ஜக்கோடன்?” என்றார் ஜான்ஸன். நிஷாவுக்கு இப்போதுதான் சற்றுப் பயம் தட்ட ஆரம்பித்தது. மிருங்களில் மோசமானதும் குரூர புத்தி வாய்ந்ததுமான சிறுத்தை வேட்டைக்கு அது ஒரு பீடிகை என்று அவளுக்குள் உணர்வு பாய்ந்து உடம்பு குளிர்ந்தது.
“எல்லாம் தயார் சாமி!” என்றான் ஜக்கோடன்.
சிறுத்தை தண்ணீர் குடிக்க வரும் ஒரு துறைக்குச் சற்றுத் தூரத்தில் ஓர் அடர்ந்த மரத்தில் சௌகரியமாகப் பரண் அமைக்கப்பட்டிருந்தது.
“நிஷா! ஒண்ணும் பேசக்கூடாது. இருமக் கூடாது. தும்மக்கூடாது. ஏதாவது பண்ணினால் உயிருக்கே ஆபத்து. ஜாக்கிரதை!” என்று அவளைத் தாழ்ந்த குரலில் எச்சரிக்கை செய்துவிட்டுப் பரணின் மேல் சாத்தியிருந்த ஏணியில் ஏறத் தொடங்கினார் ஜான்ஸன். ஒருவர் பின் ஒருவராக மௌனமாக ஏணியின் மீது ஏறினார்கள். நிஷாவுக்கு முன்னால் பரணில் ஏறிவிட்ட தியாகராஜன், நிஷா ஏறும்போது அவளுக்குக் கைகொடுத்துத் தூக்கி விட்டான். ஜீவாவின் முகம் வெறுப்பினால் கறுத்தது.
அனைவரும் அமைதியாக, இலேசான சுவாச ஓசை மட்டும் கேட்கப் பரணின் மீது படுத்திருந்தார்கள். காட்டில் ஏற்படும் சின்னஞ்சிறு சருகோசைகள், சிட்டுக் குருவிகள் ‘விர்’ரென்று சிறகடித்துச் செல்லும் ஓசை, காட்டுக் குயில்கள் எப்போதாவது இடைவிட்டு, இடைவிட்டுக் கூவும் குரல் எல்லாம் அவர்களைச் சிலிர்க்க வைத்தன. மரணச் சாயையின் மகாமௌனம் அங்கே பரிபூரணமாக நிலவியது.
சீக்கிரத்தில் சந்திரோதயமானதால், காட்டில் பளிங்கு போன்ற இள நிலவின் தண்ணொளி பரவியது. நீல விளக்கால் அக்கானகம் அலங்கரிக்கப்பட்டது போல் ஒரு விசேஷமான அழகு சுற்றிலும் சோபித்தது. ஐந்து துப்பாக்கி முனைகள் ஐந்து வெவ்வேறு திசைகளில் குறி பார்த்தன. மருள மருள விழித்தவாறு நிஷா படுத்துக் கொண்டிருந்தாள். அவளுடைய இதயத் துடிப்பு அதிகரித்தது, அவளுடைய மார்பு விம்மி விம்மித் தாழ்வதிலிருந்து தெரிந்தது. நீண்ட நேரமாக அவ்விதம் காத்துக் கொண்டிருந்தார்கள். திடீரென்று காட்டில் இயற்கைக்கு மாறான ஒரு சலசலப்பு ஏற்பட்டது. சிறுத்தை தண்ணீர் குடிக்கும் துறையை நோக்கித் துப்பாக்கியைக் குறி வைத்துக் கொண்டிருந்த ஜான்ஸனின் கண்களில் நீண்ட பளபளப்பான ஓர் உடல் கறுப்பு வரிகளும், மஞ்சள் பட்டைகளும் தெரிய நெளிந்தது தெரிந்தது. அவருடைய பிடி இறுகியது. குறி பார்க்கும் துவாரத்தில் அவருடைய கூர்மையான கண் உஷாராயிற்று.
“அப்பா! அப்பா...! தொறவுக்குப் புலி வந்திருக்குது!”
என்று சிறு குரலில் நிஷா அப்பாவிடம் சொல்லி விட்டாள்.
“உஸ்!” என்று யாரோ எச்சரித்தார்கள்.
“அசைய வேண்டாம்!” என்று எல்லோருக்கும் ஜான்ஸன் எச்சரித்தார். தியாகராஜன் வேட்டை வெறியனாதால் அவனுடைய துப்பாக்கி மட்டும் மிக மெதுவாகத் துறையை நோக்கித் திரும்பியது. அந்தச் சிறிய ஓசைகளையே சந்தேகப்படுவதுபோல் அந்தப் புலி - ஆம், அது சிறுத்தையல்ல - மெதுவாகத் தலையைத் தூக்கிப் பார்த்தது. கண்கள் அக்கினிக் கொழுந்து போல் செஞ்சுடர் வீசின எதிர்ப்புறத்திலிருந்த பிரதேசத்தின் ஆத்மாவையே துருவிப் பார்ப்பது போல் வெகு பயங்கரமான பார்வை! நிலவொளியில் அதன் உடல் நன்கு தெரிந்தது. சவுக்கு போன்ற நீளமும் லாவகமும் வாய்ந்த அழகான புலி அது. வயதாகி விட்டது என்று சற்று வளைத்தபோதுதான் அதற்குள் ஒரு விசேஷ அடையாளம் தெரிந்தது. எல்லாப் புலிகளுக்கும் போல் அல்லாது, கழுத்திலிருந்து முன் முதுகு வரை அதற்குக் கறுப்பு வரிகளே இல்லை.
“ஹா!” என்று ஏதோ உணர்ச்சி வசப்பட்டவர் போல் ஜான்ஸன் கிசுகிசுத்தார்.
தியாகராஜன் சட்டென்று துப்பாக்கியை உயர்த்தினான்.
“நோ... நோ... நாட் நௌ!” என்று தம்மைச் சமாளித்துக் கொண்டு அவனைக் கடுமையாக எச்சரித்தார் ஜான்ஸன்.
புலி சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு மெல்ல உறுமியவாறே முன்னங் கால்களைச் சௌகரியமாக இரண்டு பாறைகளின் மீது ஊன்றிக் கொண்டு தலையை வளைத்து, உறுஞ்சி உறிஞ்சித் தண்ணீர் பருகலாயிற்று. நேரம் மரணப்பளுவோடு தள்ளாடிக் கொண்டு கழிந்தது. ஜான்ஸன் குறி வைத்து டிரிக்கரை (விசையை) அழுத்த முயலும்போது இன்னொரு புலி அதைத் தொடர்ந்து உடலைக் கம்பீரமாக வளைத்தவாறு புதர் மறைவிலிருந்து வெளிப்பட்டது.
தியாகராஜன் மீண்டும் துப்பாக்கியை உயர்த்தினான்.
“தியாகராஜன்! நான் உங்களை எச்சரிக்கிறேன்! அந்தப் புலிக்காக இருபது வருஷங்கள் காத்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் அதைச் சுட முயன்றால் ஒரு நாயைச் சுடுவதுபோல் உங்களைச் சுட்டுக் கொல்லுவேன்...” என்று வெறி பிடித்தவர்போல் ரத்தம் உறைந்துபோகும் மெல்லிய குரலில் எச்சரித்தார், ஜான்ஸன். அவர் அதைச் செய்வார் என்று அந்தக் குரல் தாட்சண்யமின்றித் தெரிவித்தது. தனது உடலில் பொங்கிய ஆத்திரத்தைப் புத்திசாலித்தனமாகக் கட்டுப்படுத்திக் கொண்டு தியாகராஜன் துப்பாக்கியைத் திருப்பிக் கொண்டான்.
நிஷா மிகவும் பயந்துவிட்டாள். ஜான்ஸனுடைய கோபத்தை அவள் இதுவரை கண்டதேயில்லை. எதிரில் புலி உலாவுவதைவிட அதிகமாக அவருடைய கோபாக்கினி வீசும் முகம் அவளுக்குக் கிலி ஊட்டியது.
தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கும் புலிக்கு அருகில் சென்று தானும் தண்ணீர் பருக ஆரம்பித்தது புதிய புலி. சிறிது நேரம் சென்றதும் தண்ணீர் குடிப்பதை நிறுத்திவிட்டு முதலில் வந்த பெண் புலியின் உடலை நக்கிக் கொடுக்கத் தொடங்கிற்று. பெண் புலியும் தண்ணீர் பருகுவதை நிறுத்திவிட்டுத் திரும்பி ஒரு வீட்டு நாய்போலக் கழுத்தை இசைவாக அதற்குக் காட்டிற்று. அதன் கழுத்தையும் முகத்தையும் நாவால் நக்கிக் கொடுத்தது ஆண் புலி.
நிலவொளி வீசும் அந்த முன்னிரவில், அடர்ந்த கானகத்தில் வெறும் விலங்குகளின் மிருக உணர்ச்சிபோல் அந்த நிகழ்ச்சி தோன்றவில்லை. யுக யுகாந்திரங்களாக, அன்பும் பாசமும் தழுவிக்கொள்ள, ஜீவராசிகள் மன லயிப்போடு நடத்தி வரும் முடிவற்ற காதல் நாடகமாகவே அது தென்பட்டது. சிற்றலைகளால் மெல்ல சப்திக்கும் அந்த நீர்த்துறையின் அருகில், அந்த வயோதிகத் தம்பதிகளின் சரசம் வெகு அழகாக இருந்தது. புதிய மேகங்களும், புதிய பறவைகளும் ஜான்ஸனின் மன வானில் பறந்தன. அவர் துப்பாக்கியைத் தாழ்த்தி, கண்களில் மளமளவென்று நீர் வழிய, இமைகளைச் சிமிட்டிச் சிமிட்டி மங்கும் கண்களைத் தெளிவாக்கியவாறே, எல்லோரும் மூச்சையும் அடக்கிக் கொண்டு காத்திருக்கும் அந்த அவ்வேளையில் முழு மனித உணர்ச்சியோடு அதை ரசித்துக் கொண்டிருந்தார். இளந்தம்பதிகள் போல் அந்தப் புலிகள் கட்டிப் புரண்டு விளையாடின.
“அவைகளைச் சுடுங்கள், மிஸ்டர் ஜான்ஸன்! சுடுங்கள்!” என்று வேட்டை வெறியோடு கிசுகிசுத்தான் தியாகராஜன்.
“சுடுங்கள், சார்! இன்னுமேன் தாமதம்?” என்று ஜீவாவின் குரல் பின்னாலிருந்து வந்தது.
நிஷா மெதுவாகக் கையை நீட்டி ஜான்ஸனின் முதுகைத் தொட்டாள். அவள் விரல்கள் நடுங்குவதை அவர் அறிந்தார். ஆனாலும் தாழ்த்திய துப்பாக்கியை உயர்த்தவில்லை.
“நான் கெஞ்சுகிறேன் மிஸ்டர் ஜான்ஸன்” என்று கூறியவாறே அதற்கு மேலும் தாளமாட்டாதவன் போல் துப்பாக்கியை உயர்த்தி “டிரிக்கரை’த் தள்ளினான். தியாகராஜன். சட்டென்று தம் துப்பாக்கியால் அந்தக் குறியைத் தடுத்து வேகத்தோடு அவனுடைய துப்பாக்கியை மேலே உயர்த்தினார் ஜான்ஸன். சீறிக் கொண்டு ஒரு குண்டு கிளம்பி ஏதோ ஒரு மரத்தின் உச்சியில் வெடித்தது. கீச்கீச்சென்று பறவைகளின் பெரிய ஓலமும், குண்டின் எதிரொலியும் வெகு பயங்கரமாகக் கிளம்பின.
உஷார் அடைந்த புலிகள் ‘உர்’ரென்று உறுமியவாறே குண்டு வந்த திசையை நோக்கிப் பாய்ச்சல் நோக்கில் தயாராக நின்றன. சட்டென்று துப்பாக்கியை தூக்கி நீலவானத்தில் இரண்டு முறை சுட்டு வேட்டுக் கிளப்பினார் ஜான்ஸன். பளிச்சென்று திரும்பி மின்னல் போலத் துள்ளிப் புதருக்குள் பாய்ந்தோடிவிட்டன. அந்தப் புலிகள். காட்டில் சிறிய மிருகங்களின் அச்சக் கூக்குரலும், பறவைகளின் சோகமான முறையீடுகளும் ஓயாத அலைபோல் ‘ஓ’வென்று கேட்டுக் கொண்டிருந்தன.
“இது என்ன மடத்தனம்?” என்று கத்தினான் தியாகராஜன்.
“என்ன சார், வேண்டுமென்றா விட்டுவிட்டீர்கள்?” என்று ஆச்சரியத்தோடு ஜீவானந்தம் கேட்டான்.
“என்னாங்க, தொரை! உங்க குறி எப்பேர்ப்பட்டது! உங்களுக்கா தப்பிச்சுக்கிச்சு?” என்று விஷயம் தெரியாமல் அங்கலாய்த்துக் கொண்டான் ஜக்கோடன்
எல்லாவற்றுக்கும் மௌனமாக இருந்த ஜான்ஸன், முகத்தில் பூத்திருந்த வேர்வையை ஒரு கைக்குட்டையால் சாவதானமாகத் துடைத்தவாறு பைப்பை எடுத்துத் தீக்குச்சியினால் பற்றவைத்துக் கொண்டு பேசலானார்.
“முதலில் உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன், மிஸ்டர் தியாகராஜன்!” என்று தம் கையில் இருந்த துப்பாக்கியைத் தோளில் சாத்திக் கொண்டு தியாகராஜனுடைய துப்பாக்கி பிடித்த கையைத் தமது பெரிய கைகளால் பற்றிக் கொண்டு உலுக்கினார். பரண் கிறீச்சிட்டு மெல்ல அதிர்ந்தது. வயதான அந்தப் பெரியவரின் பணிவைக் கண்டு, தன் உணர்ச்சிகளை மறந்த தியாகராஜன், அந்தக் கைகளை இடது கையால் பிடித்துக் கொண்டான்.
“நான் மிகவும் வருந்துகிறேன், மிஸ்டர் தியாகராஜன். அந்தப் பெண் புலியைப் பார்த்ததும் எனக்கு வெறி பிடித்து விட்டது. அதற்காகத்தான் நான் தேசத்தை விட்டு, உற்றார் உறவினர்களையெல்லாம் விட்டுவிட்டு இருபது வருஷங்கள் இந்த மலைப் பிராந்தியத்திலே காத்துக் கொண்டிருந்தேன்” என்று மேலே பறந்து கொண்டிருந்த பறவைகளைப் பார்ப்பது போல உணர்ச்சிகளைச் சமாளித்தார் ஜான்ஸன்.
“அப்படின்னா...?” என்று ஜக்கோடன் இழுத்தான்.
“ஆம், ஜக்கோடன், அதுதான் என் மனைவி மேரியை அடித்துக் கொன்றது. நான் அதனால்தான் இங்கே தாமதித்துவிட்டேன். என் இளமைப் பிராயமெல்லாம் என்னோடு அருமையான சாந்தியையும் தேடித் தந்த மேரியை அது வீடுபுகுந்து அடித்துக் கொன்றது. அதுவே ஒரு மனிதனாக இருந்தால், அவன் எந்தக் கண்டத்துக்கு ஓடியிருந்தாலும் நான் அவனை விட்டிருக்கமாட்டேன். நான் கொலை வெறிபிடித்து அலையவில்லை. என் மேரியின் மேல் நான் வைத்திருந்த அன்பு அத்தனை பரிபூரணமானது. உணர்ச்சி வசத்தினால் அவளுக்கே துரோகம் செய்யக்கூடிய அவமானகரமான காரியம் ஒன்றில் நான் ஈடுபட்டும் கூட, என்னை வாய் பேசாமல் மன்னித்து அவள் ஏற்றுக் கொண்டாள். அவள் விவாகரத்து செய்துவிட்டு பிரிட்டனுக்குக்கூடப் போயிருக்கலாம். அவள் ஒரு தேவமகள் - அப்படிச் செய்யவில்லை. அப்படிப்பட்ட சொத்தை நான் இழந்தேன். இருபது வருஷ காலமாக அவளை அடித்துக் கொன்ற புலியை நான் இந்தக் காட்டின் ஒவ்வொரு மூலை மூடுக்கிலும் தேடினேன் - அதைத் துடிக்கத்துடிக்கச் சுட்டுக் கொல்லவேண்டும் என்று. என் நரம்புகளெல்லாம் கொதித்தன. நாளாக நாளாகத் தனிமையும் பைபிளும் என்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு வந்தன. அதன் அடையாளத்தைப் பற்றி சம்பவம் நடந்தபோது பார்த்தவர்கள் சொன்னார்கள். இன்று அதையே, என் வாழ்நாட்களையெல்லாம் பாலைவனமாக்கிவிட்டு ஒரு நாடோடிப் பிரயாணிபோல் அலையவிட்ட அந்தப் புலியையே பார்த்தேன். ஆனால் காலம் மாறிவிட்டது” என்று ஜான்ஸன் யோசனை லயிப்பில் சற்று நிறுத்தினார்.
“அந்தப் புலியும் என்னைப்போலவே வயோதிகம் அடைந்துவிட்டது. மேலும் அதன் ஆண் புலியும் கூட வந்திருந்தது. எந்தப் பிரிவை நான் இப்போது சகித்துக் கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறேனோ, அதை பிரிவைச் சதா உறுமியவாறு சாகும் வரையில் அந்த ஆண் புலியின் மேல் சுமத்த நான் அனுமதிக்கப்படவில்லை. நான் ஒரு உண்மையான கிறிஸ்தவன்; ஒரு கன்னத்தில் அடிவாங்கி விட்டு, மறு கன்னத்தைக் காட்டக் கடமைப்பட்டவன். இந்த வயதான காலத்தில் ஒரு கோழையைப் போல் அந்தப் புலியை வஞ்சம் தீர்த்துக் கொள்ள விரும்பவில்லை. அது கேவலம் மிருகம்; நான் இதயமுள்ள ஒரு மனிதன். என்னிடம் நியாயமாகக் கர்த்தரால் எது எதிர்பார்க்கப்படுமோ அவ்விதம் நான் நடந்து கொண்டேன்” என்று நிறுத்தினார் ஜான்ஸன்.
“ஸார்...” என்று உணர்ச்சி வசப்பட்டு அவரது பெரிய தோளில் கையை வைத்தான் ஜீவானந்தம்.
“உண்மையிலேயே, மேரியின் மீது நான் வைத்திருந்த அன்பை உங்களுக்கு என்னால் விளக்க முடியாது. அப்படியே சிரமப்பட்டு நான் விளக்கினாலும் அதை நீங்கள் நம்புவது கஷ்டம். இயற்கையின் பொது விதிகள் எனக்கும் அந்தப் புலிக்கும் ஒன்றுதானே மிஸ்டர் ஜீவா?” என்று கேட்டார் ஜான்ஸன்.
[தொடரும்]

No comments:

Post a Comment