பாடிப் பறந்த குயில்
1
பாதசாரிக்கு இதுதான் வழி! நீங்க இஷ்டப்பட்டிருந்தால் அப்படியே கூடப் போயிருக்கலாம்” என்று அடக்கமாகப் பதிலளித்தான் ஜீவானந்தம்.
“அப்படியா...?” என்று அவனை ஏற இறங்கப் பார்த்தபடியே மெல்ல விசிலடிக்கத் தொடங்கினான் அவன். அவனுக்கு என்ன தோன்றிற்றோ, பிறகு ஜீவானந்தத்துடன் மரியாதையாகவே பேசத் தொடங்கினான்.
“நீங்க யாரு? காட்டிலே எத்தனை நாட்களாகத் தங்கியிருக்கீங்க?”
ஜீவானந்தம் அவன் ஒருபடி இறங்கி வருவதைக் கண்டதும் தான் விட்டுக் கொடுக்காமல் திருப்பிக் கேட்டான்.
“நான் இங்கே மூணு மாசமா காட்டிலே இருக்கிறேன். நேற்றைய வரைக்கும் உங்களைப் பார்த்ததில்லே. நீங்க யாரு என்று நான் தெரிஞ்சுக்கலாமா?”
அந்த மனிதனின் முகத்தில் ஒரு கடுமை கலந்த புன்னகை பரவியது. “நான் இன்னிக்கு காலையிலேதான் வேலைக்கு வந்தேன். காட்டிலாகா அதிகாரி ஐ.ஸி. தியாகராஜ்” என்று அறிமுகத்துக்குக் கையை நீட்டுவது போல் அவன் குதிரையின் கடிவாளத்தை இடது கைக்கு மாற்றிக் கொண்டு வலது கையை நீட்டினான்.
“நான் ஜீவானந்தம். மிஸ்டர் வில்லியம் ஜான்ஸனின் நிலத்தைப் பார்த்துக்கறேன். அவருடைய சிறிய பள்ளியையும் கவனிச்சுக்கறேன்” என்று தன்முன் நீட்டப்பட்ட கரத்தைப் பற்றிக் குலுக்கினான் ஜீவானந்தம்.
“நீங்க விமானப் படையிலே இருந்திருக்கீங்களோ? நீங்க தோளை மேலும் கீழுமா அசைச்சு அசைச்சு நடக்கிறதைப் பார்த்துத்தான் கேட்கிறேன்” என்றான் தியாகராஜன்.
ஜீவானந்தம் திகைத்துப் போனான். “சரி, நான் வரட்டுமா? அப்புறமா சந்திப்போம்” என்று கையை ஆட்டி விடைபெற்றுக் கொண்டு அவன் புறப்பட்டுவிட்டான். ஒரு சரிவில் இறங்கிக் கொண்டிருந்த அவனுடைய உருவத்தையே உற்றுப் பார்த்தபடி நின்றான் ஜீவானந்தம். அவனால் தியாகராஜனைச் சட்டென்று புரிந்து கொள்ள முடியவில்லை. அவனுடைய கடைசிக் கேள்வி சாதாரணமாகத்தான் கேட்கப்பட்டதா, அன்றி, எந்த விசேஷ அர்த்தத்தோடாவது கேட்கப்பட்டதா என்பது தெரியவில்லை. ஜீவானந்தம் வெறுப்புடன் தன் கண்முன்னால் சிறுகச் சிறுக மறைந்துபோகும் அந்த வெள்ளைக் குதிரையைப் பார்த்துக் கொண்டிருந்து விட்டுத் தன் குடிசையை நோக்கி நடந்தான்.
சூரியன் அஸ்தமித்துவிட்டான். சிவப்புக் கடல்போல் அவன் அஸ்தமனமான வட்டத்துக்குச் சரியாகக் கிரண வெள்ளம் பரவிக் கிடந்தது. ஜீவானந்தம் வருகிறபோதே பூட்ஸைக் கழற்றி ஒரு பாறை மறைவில் வைத்து விட்டு, விக்னேசுவரர் கோவிலின் பின்புற வழியாக வந்தான். எதிரில் நீலநிறம் கொண்டது போல், வெள்ளி நரைகள் சீறிப் பெருக, மலையருவி ஓடிக் கொண்டிருந்தது. அருவியருகில் ஒரு சாய்வு நாற்காலிபோல் அமைந்திருந்த ஒரு பாறையின்மீது போய்ப் படுத்துக்கொண்டான் ஜீவானந்தம். முழங்கால் வரை கால்சட்டையை மடித்துவிட்டு, குதுகுதுப்பும் வேகமும் நிறைந்த அருவியில் இரண்டு கால்களையும் விட்டுக் கொண்டான். ஜலம் மெல்ல உந்தித் தள்ளுவது போல் அவன் கால்களின் கனத்தைக் குறைத்து விட்டு ஓடிக் கொண்டே இருந்தது. வீடு திரும்பும் பறவைகள் வானத்தில் விமானங்களின் வரிசை போன்று சென்றன. வானம் ஊதா நிறம் பெற்று, வெள்ளித் திலகம்போல் ஓர் ஒற்றை நட்சத்திரம் சுடர் வீசியது.
அதற்கு மேல் அவனால் பார்க்க முடியவில்லை. இரண்டு தன்மையான கரங்கள் அவன் கண்களைப் பொத்தின. நிஷா தான்.
“என்ன நிஷா! இதுக்கு மேலே நான் பார்க்கக் கூடாதா?” என்று அவள் கைகளை விலக்காமலேயே கேட்டான்.
“எவ்வளவு நேரமா நான் பின்னாலேயே நிற்கிறது! நீ திரும்பிப் பார்த்தால்தானே ஜீவா?” என்று அலுத்தபடியே அவன் கண்களிருந்தது கரத்தை எடுத்தாள் நிஷா. மெய்யாகத்தான் கோபித்துக் கொள்கிறாளோ என்று படுத்தவாறே தலையைப் பின்னுக்குச் சாய்த்து அவளைப் பார்த்தான். உதட்டில் மெல்லிய புன்னகை நெளிந்தது. ஜீவானந்தம் எழுந்து விக்னேசுவரர் கோவில் கல்மேடைக்குத் தாவினான்.
சாட்டை போன்ற இரு நீண்ட பின்னல்கள் மார்பின் மீது துவள, நிஷா அவன் அருகில் வந்து உட்கார்ந்தாள். இன்றைக்கு என்னவோ அவளுடைய முகத்தில் புன்னகையின் பிரகாசம் மங்கவேயில்லை. இருவரும் வந்து அமர்ந்தபோது சந்திரோதயம் ஆகிவிட்டது. சந்திரிகையின் இலேசான கிரணங்கள் முத்துத் தூள் பூசனாற்போல், நிஷாவின் முகத்தில் பட்டன. அவளுடைய யௌவனத்தின் வடிவழகு, அந்நேரத்தில் மெல்லப் பாடும் அருவியும், புராதனமான ஆலயமும் இருக்கும் சூழ்நிலையில் ஜீவானந்தத்துக்கு கம்பீரமான உள்ளக் கிளர்ச்சியைக் கொடுத்தது. அவளோடு பக்கத்தில் அமர்ந்து பேசவோ எந்தத் தாழ்ந்த வகையிலும் அவளுடைய நட்பை அர்த்தப்படுத்திக் கொள்ளவோ அவன் விரும்பவில்லை. கடந்த இரண்டு வருஷ காலமாக அவன் மனத்தில் ஆறாத் தீயாக வருத்தி வரும் வேதனை ஒன்று உண்டு. அதன் வேலிகளைத் தாண்டி ஜீவானந்தம் வரமாட்டான். எனவே சற்று நகர்ந்து உட்கார்ந்தான். அதை நிஷா கவனிக்கவில்லை.
“ஜீவா, ஜீவா! உன்கிட்டே இப்போது ஒண்ணு சொல்லணும்னுதான் இங்கே வந்தேன்! அது என்னவா இருக்கும் சொல்லு?” என்று குழந்தை புதிர் போடுவது போலக் கேட்டாள் நிஷா. அவள் குழந்தையேதான். ஜீவானந்தத்துக்கு இதைக் கேட்டதும் சிரிக்கத் தோன்றிற்று. ஆனால் அவள் மனம் புண்படக்கூடாதே என்பதற்காக, “எனக்கு எப்படித் தெரியும் நிஷா?” என்றான்.
“சரி; அது அப்புறமா சொல்றேன். நீ எங்கே மத்தியானம் முழுதும் குடிசையிலேயே இல்லே? நான் நாலைஞ்சு தடவை வந்து வந்துஉன்னைப் பார்த்துவிட்டுப் போனேன்!”
“நான் தொரைகிட்டே போயிருந்தேன். சீக்கிரம் வந்துட்டேனே, நீ எப்பத் தேடினே?”
“உச்சி வேளைக்கு.”
“அப்ப சரிதான்” நான் அங்கே இருந்தேன். சரி; என்ன விஷயம் சொல்லு?”
“அப்பா உன்னைக் கூப்பிட்டுக்கிணு வரச் சொன்னாரு. அதுக்காக வந்து தேடினேன்.”
“அப்பா கூப்பிட்டாரா? எதுக்காக?”
“நாளைக்குக் கிழக்குக் காட்டுக்கு வேட்டையாடப் போகணுமாம். அதுதான் விஷயம்.”
வேட்டை என்று கேள்விப்பட்டதும் ஜீவானந்தம் சிறிது உற்சாகமடைந்தான். அதில் ஒன்றில் தான் மனத் தொல்லைகளெல்லாம் மறந்து போய்விடுகின்றன. வேட்டையாடப்படும் மிருகத்துக்கும் மனிதனுக்கும் இருக்கும் விறுவிறுப்பான உயிர்ப் போட்டியில் முழுக்க ஐக்கியமாகும்போது அவனும் அதுவும் மட்டும் நிற்கிறார்கள். ஜீவானந்தத்துக்கு அதனாலேயே வேட்டை மிகவும் பிடித்தது.
“நாளைக்கா?”
“ஆமாம், ஜீவா! நான்கூட வரட்டுமா? எனக்கும் துப்பாக்கி சுடக் கத்துக்குடு” என்று மலைவாசி மக்களுக்கே உரிய துணுச்சலோடு கேட்டாள் நிஷா.
“ஏன், உங்கப்பாவையே கேளேன்!”
“கேட்டாக்க, ‘அதெல்லாம் உனக்கு வேண்டியதில்லேன்னு’ செல்கிறாரே, ஜீவா!”
“அம்மாடி! அந்தப் பழி எனக்கு வேண்டாம். அப்புறமா இந்தக் காட்டிலே பார்க்கிறதுக்கு ஒரு பட்சிக்கூட நிக்காது. நீ விளையாட்டுத்தனமா என்ன செய்யறோம்னு தெரியாமலேயே சுட்டுத் தீர்த்துடுவே!”
“அப்ப...” என்று இழுத்த நிஷாவின் முகம் குன்றி வருத்தத்தினால் வாடியது. “நான் அவ்வளவு கொடூரமானவளா?”
ஜீவானந்தம் வேடிக்கையாக, “இல்லையா, பின்னே?” என்றான்.
நிஷாவுக்கு ரோசம் வந்தது. “கொடூரமானவளோடே எதுக்குப் பேசணும்? ஒண்ணும் இனிமேல் பேசவேண்டியதில்லே” என்று கோபமாகக் கூறியபடியே எழுந்து இரண்டடி எடுத்து வைத்துவிட்டாள். ஊதிவிட்ட நெருப்புப்போல் முகம் கன்றிச் சிவந்திருந்தது.
ஜீவானந்தம் அவசரத்தோடு எழுந்து அவளது வலது கையைப் பிடித்து நிறுத்தப் போனான். அவள் நின்றிருந்த இடம் அருவிக்குச் சிறிதே தூரம் தள்ளியிருந்த சின்னக் கல்மேடை. அவன் பிடித்து இழுத்த வேகத்தில் அவள் தடுமாறிக் கொண்டு அருவியில் விழ இருந்தாள். சட்டென்று தியாகராஜன் அங்கே தோன்றி அவள் மேனியைத் தாங்கிப் பிடித்துக் கொண்டான். அவன் எப்போது அங்கே வந்து சேர்ந்தான் என்பது தெரியவில்லை. ஆனால் ஜீவானந்தத்தின் முகத்தில் ஒரு சுருக்கம் தோன்றியது. நிஷாவை அவன் பற்றியிருந்த பாவனையும் கண்களில் தெரிந்த உணர்ச்சியும் ஒரு சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்கிறவன் போல் தான் தெரிவித்தன. நிஷா ஆச்சரியத்தால் கொஞ்ச நேரம் சும்மா இருந்துவிட்டாள். பின்னர் அலட்சியமாக அவனுடைய இரண்டுகைகளையும் தட்டிவிட்டு, “ப்பூ! விழுந்திருந்தாக்கூட நான் ஒண்ணும் முழுகிப்போயிருக்கமாட்டேன்! எனக்கு நீச்சல் தெரியும்” என்று பளிச்சென்று பதில் சொன்னாள்.
“ஓ, அப்படியா!” என்று அசடு வழியச் சிரித்தான் தியாகராஜன்.
இன்னும் தன் பக்கமே வராமல் தியாகராஜன் அவனையே பார்த்தபடி நின்று கொண்டிருப்பதையும், இச்சமயத்தில் தான் மௌனம் சாதித்துக் கொண்டு சும்மா இருப்பதையும் சகிக்காமல் ஜீவானந்தம் அவனோடு பேச்சை ஆரம்பித்தான்.
“இந்தச் சமயத்தில் வந்து உதவினதற்கு ரொம்ப நன்றி!”
தியாகராஜன் அவன் பக்கம் முடுக்கோடு திரும்பி, “நன்றி ஒன்றும் அவசியமில்லை மிஸ்டர்... ஆங், உங்கள் பெயர் என்னச் சொன்னீர்கள்?” என்றான்.
“ஜீவானந்தம்!” என்று உணர்ச்சியற்ற குரலில் சிறிது தாமதமாகச் சொன்னான்.
“ஆங், மிஸ்டர் ஜீவன்! சமயத்திலே வந்து உதவிய சந்தோஷமே எனக்குப் போதும்.”
“எனக்கு நீ ஒண்ணும் உதவி செய்யலே! எனக்கென்ன கையில்லையா? கால் இல்லையா?” என்று வெடுக்கென்று இடைமறித்தாள் நிஷா.
தியாகராஜன் கலகலவென்று சிரித்தான். “இந்தப் பெண்ணுக்கு மரியாதை தெரியல்லே. ஆனால் அழகாகக் கோவிச்சுக்கிறாள், இல்லையா மிஸ்டர் ஜீவன்?” என்றான்.
இந்த வெட்கமற்ற பேச்சும், அவனைக் கேலி செய்வது போல் இருந்த அந்தக் கேள்வியும் ஜீவானந்தத்தைக் கொதிப்புறச் செய்தன. ஆனால் அவனுக்கு ஒன்றும் செய்யத் தோன்றவில்லை. தன் அதிருப்தியைக் கண்களில் காட்டிக் கொண்டான். நிஷா அவனுக்காகச் சும்மா இருப்பவள் போல் திரும்பி நின்று, அருவியின் ஓட்டத்தைக் கவனிக்கலானாள்.
“நான் இறங்கி வந்து கொண்டிருக்கிற போது வேட்டை நாளைக்குன்னு என்னவோ பேசிக் கொண்டிருந்தாப்போலிருக்கு. என்ன விஷயம்? எனக்கு வேட்டைன்னா ரொம்ப இஷ்டம். உங்க ரெண்டு பேருக்கும் பாதகமில்லேன்னா நானும் கலந்துக்கப் பிரியப்படறேன்” என்றான் தியாகராஜன்.
அவன் பேச்சில் குறும்பு கலந்திருந்தது. அவன் எந்த அர்த்தத்தில் ‘உங்க ரெண்டுபேருக்கும் பாதகமில்லைன்னா’ என்ற வார்த்தைகளைப் பிரயோகப்படுத்தினான் என்பதை ஊகித்ததும் ஜீவானந்தத்துக்கு உடல் கூசிற்று. அவன் அதிக நேரமாக அவர்கள் பேச்சைக் கேட்டிருக்க வேண்டும். கன்னத்தில் அறைவது போல் ஜீவானந்தம் அதற்குப் பதில் கூற விரும்பினான். ஆனால் ஏதோ ஒரு சக்தி அவனை இழுத்துப் பிடித்தது.(தொடரும்)
No comments:
Post a Comment