3
இருபத்தோராம் நாள்தான் வேணு கண்ணைத் திறந்தான். தலைமுடி பாதி கொட்டிப்போய்விட்டது. எலும்பும் தோலுமாக உடல் உருக்குலைந்து விட்டது.
சுற்றியிருந்தவர்களைத் தீனமாக நன்றியோடு பார்த்தவன், கரைத்துக் கொடுத்த குளுகோஸை ஆவலோடு பருகினான். மறுபடியும் பிரக்ஞை தவறிவிட்டது.
அன்றிரவு காடா விளக்கின் வெளிச்சம் முகத்தில் வட்டமாக விழுந்து கண்ணை உறுத்தவே, வேணு விழித்தான். கையில் விளக்கோடு கௌசல்யா முகத்தைக் குனிந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
“நீயா?” என்றான்.
விளக்கு அவள் கையிலிருந்து உருண்டு விழுந்து அணைந்தது. இளைத்திருந்த வேணுவின் நெஞ்சிலே அவள் முகம் சாய்ந்தது.
“கௌசல்யா!” என்று சிரமத்தோடு அழைத்தான்.
விம்மல் அடங்கவில்லை. ஆதரவோடு முதுகை அணைத்துக் கொண்டான். துயரின் கனத்தில் சில நிமிஷங்கள் நகர்ந்தன.
“எவ்வளவு இளைச்சுட்டேள்?”
“நீ ஏன் இப்படி ஆயிட்டே கௌசா? எனக்கு அடையாளமே மொதல்லே புரியலியே!”
“நான் பாவி. எதிர் வீட்டிலே நீங்க பிரக்ஞை இல்லாமே இருக்கேள்னு தெரிஞ்சும் வர முடியல்லே. அப்பாவின் கடுங்காவல்.”
“அவருக்குத் தெரிஞ்சு போச்சா?”
“ஜொரத்திலே நீங்க என்னென்னமோ பெனாத்தினேளாம். ஊரே சிரிப்பாய்ச் சிரிக்கறதுன்னு என்னை வையாத நிமிஷமில்லே.”“கௌசா!” இருளில் துழாவி அவளது கையைப் பற்றினான்.
“இதுக்கு வழி சொல்லுங்கோ, இன்னும் ஒரு நிமிஷம் கூட என்னாலே அங்கே வாழ முடியாது.”
“கொஞ்சம் பொறு.”
“இந்த வார்த்தைபோதும். எவ்வளவு வேணும்னாலும் பொறுக்கத் தயார்.”
அவள் குரலில் என்ன நம்பிக்கை! எத்தனை எதிர்பார்ப்பு!துணைக்குப் படுத்திருந்த ஆள் தூக்கத்தில் புரண்டார்.
“அப்பா விழிச்சுக்குவார். நீ போ கௌசல்யா.”
“நான் பாவி. உங்களுக்குப் பணிவிடை செய்யக் கூடக் கொடுத்துவைக்கலே.”
அவள் கண்ணீர், வேணுவின் மார்பில் சிதறிற்று. எவ்வளவு உயரப் பறந்தாலும் அவள் பெண்தானே!
“சீ! இதென்ன பயித்தியம் மாதிரி!”
“சரி, நான் வரட்டுமா?”
“விளக்கைக் கொளுத்து. படுத்திருக்கிறவர் மேலே கால் பட்டுவிடப் போகிறது.”
“கெரஸீன் கொட்டிடுத்து. நான் பார்த்துப் போய்க்கிறேன்.”
கௌசல்யா இருளில் மறைந்தாள். வேணு சிந்தனையில் ஆழ்ந்தான்.
வெகு விரைவில் நடமாடத் தென்பு வந்துவிட்டது. வேணு பள்ளிக்கூடம் போனான்.
“வயித்திலே நெருப்பைக் கொட்டப் பாத்தீங்களே வாத்தியாரே!” என்று பெரியசாமிப் பிள்ளை புன்சிரிப்போடு பேசினார்.
அவன் வீடு திரும்பும்போது ராயர் வெளியே உட்கார்ந்திருந்தவர், எழுந்து உள்ளே போய்விட்டார்.
பெரியதனக்காரர் வீட்டிலிருந்து வந்த சாப்பாட்டை முடித்துக் கொண்டு, கவிதைப் புத்தகத்தைத் தூசி தட்டி விட்டு எடுத்துப் புரட்டிக் கொண்டு உட்கார்ந்தான்.
ஏதோ காலடி ஓசை கேட்டது. திடுமென்று ராயர் உள்ளே வந்தார்.
“ஸ்வாமீ, நான் பிள்ளை குட்டிக்காரன்” என்று தடாலென்று பேச்சை ஆரம்பித்தார். வேகத்தில் மூக்கு துடித்து, முகம் வெந்தது. மளமளவென்று கண்ணிலே நீர் வழிந்தது.
“என்ன... என்ன ராயர்வாள்...உட்காருங்கோ” என்று பதறிப்போய் எழுந்தான் வேணு.
“இருக்கட்டும்” என்று தலையை அசைத்தார் ராயர். அசைவிலே கண்ணீர் தரையில் உதிர்ந்தது. மேலே பேச முடியவில்லை. சிலையாக நின்றார். வேணு தலை குனிந்தான்.
மேல் துண்டால் முகத்தைத் துடைத்துக் கொண்டார்.
“அந்தப் பெண் சரியா சாதம் சாப்பிட்டு எத்தனையோ நாள் ஆறது. அதைப் பார்க்க எனக்குச் சித்ரவதையா இருக்கு. தோ, பாருங்கோ! நான் சீர்திருத்தக்காரனில்லே. லோகத்தை எதிர்த்து, எதிர் நீச்சல் போடத் தெம்போ, தைரியமோ இல்லாதவன். சாதாரணக் குடும்பஸ்தன். எனக்கு இன்னும் மூணு பெண்கள் இருக்கு. இதெல்லாம் நடக்கற காரியமில்லே. தவறி ஏதானும் நடந்துட்டா, எங்க ஜாதியிலே பங்கப்பட்டு நான் மூலையிலே நிக்கணும். மூணு பெண்களும், மூளிக் கழுத்தோட முழிச்சுண்டு நிக்கும். என்ன விலை கொடுத்தாலும், எதுவும் செலவாணியாகாது. அந்த அவமானத்தோட இந்த ஒடம்பைச் சொமந்துண்டு நிக்கறது அனாவஸ்யம்.
“நீர் படிச்சவர், நல்ல மனுஷன், சிந்தனா சக்தி உண்டு. ஏதோ எதிர் வீட்டுக்காரன், சிநேகம் எல்லாத்தையும் எடுத்துக்க வாண்டாம். ஒரு தகப்பன், அந்த நிலையை யோசிச்சுப் பாருங்கோ!”
வேணுவுக்குக் கைகால் ஓடவில்லை. ராயர் இவ்வளவு பராதீனமாக வந்து இப்படி முற்றுகை போடுவார் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. “ராயர்வாள், நான் ஒண்ணும் சொல்ற நிலையிலே இல்லை. முடிவு, யோசனை எதுவும் என் கைவசமில்லை. அந்த நிலை எப்போதோ தாண்டிப் போய்விட்டது.”
‘குப்’பென்று ராயருக்கு ரத்தம் முகத்தில் ஏறிற்று.
“ஊருக்கு வாத்தியாரா இருக்கிறே, குடியைக் கெடுக்கலாமா? இது தர்மமா?”
“குடியைக் கெடுப்பதா?” வேணு தடுமாறினான்; தப்பு வழியிலே நான் போகல்லியே ராயர்வாள். ஒங்க பெண்ணைக் கல்யாணம் செஞ்சிட்டு வாழத்தானே பிரியப்படறேன்?”
காதிலே நாராசம் பாய்ந்தது ராயருக்கு.
“அட, சண்டாளா! வேறே ஆளாயிருந்தா, கட்டி வச்சு இப்படிப் பேசிய நாக்கை அறுத்திருப்பேன்.”
மூச்சு இரைத்தது. வேணுவும் பொறுமை இழந்தான்.
“இப்போது வேணும்னாலும் அப்படிச் செய்யும். திருப்பித் திருப்பி நீர் பேசினாலும் அதுதான் நடக்கப் போகிறது.”
“ஓஹோ”வென்று உறுமியவாறு கால்கள் வெடவெடக்க ராயர் வேகமாக வெளியே ஓடினார்.
சிறிது நேரத்தில் எதிர் வீட்டு ஜன்னல் கதவு ‘படா’ரென்று அறைந்து மூடிக் கொண்டது - ஊர் ஓய்ந்து விட்டதால், ஜன்னலருகே நின்று கொண்டிருந்த வேணுவுக்கு ஸ்பஷ்டமாகக் கேட்டது.
ஏதோ ‘தடதட’வென்று சரியும் சத்தம். மறுபடியும் அமைதி.
“அப்பா... அப்பா” என்று கௌசல்யா கதவை இடித்துக் கொண்டு கூவும் குரல். திடீரென்று அமளி புறப்பட்டாற் போலக் குழந்தைகள் பெருங்குரலில் கதறி அழத்தொடங்கின.
என்ன நடக்கிறதென்று வேணுவுக்குப் புரியவில்லை. இருக்க இருக்கக் கதவை ஓங்கித் தட்டும் ஓசையும், அலறலும் அதிகரித்தன. வேணு,ராயர் வீட்டுக்குப் பாய்ந்து ஓடினான்.
கௌசல்யாவும் குழந்தைகளும், கதவுக்கு முன்னாடி கூவி அழுது கொண்டிருந்தனர். ராயர் உள்ளே போய்க் கதவைத் தாள் போட்டுக் கொண்டு விட்டார்.
‘பளிச்’சென்று மின்னல் தாக்கிய அதிர்ச்சி வேணுவுக்கு. ஒன்றும் புரியவில்லை. பதறிப்போய் நின்றான்.
“ஐயோ...! அவரைக் காப்பாத்துங்களேன்” என்று கௌசல்யா அலறினாள். அதன் பிறகு எதற்காக ராயர் கதவை மூடிக் கொண்டார் என்ற கற்பனை வாளாய்ச் சாடிற்று.
“ராயர்வாள்... ராயர்வாள்” கதவைப் பலக்கத் தட்டினான்.
“சண்டாளா...நீ போய்த் தொலை, வேணும்னா அவளையும் இழுத்துக்கிட்டு ஓடிப்போ.”
உள்ளேயிருந்து ராயர் கர்ஜித்தார்.
ஜுரத்தில் உடம்பு சோர்ந்துவிட்டிருந்தாலும் தன் பலத்தையெல்லாம் திரட்டிக் கதவை மோதினான்.
கெட்டித் தாழ்ப்பாள். கதவு மசியவில்லை.
“கௌசா... கடப்பாரை” என்று குழறினான்.
‘சட்’டென்று அவள் கொண்டு வந்து கொடுத்தாள்.
இரண்டு இடி இடித்து, சற்றே திறந்த இடைவெளியில் கடப்பாரையை நுழைத்து நெம்பினான்.
கிறீச்சிட்டுத் தாழ்ப்பாள் பெயர்ந்துவிட்டது.
‘திடுதிடு’வென்று உள்ளே ஓடினான்.
தொப்பி மாட்டிய தொங்கு விளக்கு வெளிச்சத்தில் ராயரின் நிழலும், உத்தரத்திலிருந்து தொங்கிய கயிறும் தெரிந்தன. கழுத்துச் சுருக்கோடு, ஆள் வந்ததைப் பார்த்ததும் நின்றிருந்த நாற்காலியை உதைத்து விட்டார் ராயர். ஓடிய வேகத்தில் மார்போடு காலை ஏந்திப் பிடித்துக் கொண்டான். ராயர், மார்பை உதைத்து உதைத்து உதறினார். பிடியை விடவில்லை வேணு.
குழந்தைகளின் கூக்குரல். நாலைந்து பேர் உள்ளே ஓடி வந்தனர். கயிற்றை அறுத்து, ராயரைக் காப்பாற்றி விட்டனர். கழுத்து மட்டும் கயிறு உராய்ந்ததால் கொஞ்சம் கன்றி விட்டிருந்தது.
“என்னய்யா, மனுசன்! ஒமக்குப் புத்தி இருக்கிறதா? இத்தனை மூர்க்கமா?”
ராயரை மூலைக்கு மூலை திட்டினார்கள். வேணுவிடம் யாரும் ஏதும் பேசவில்லை. பேச்சைவிட அந்த மௌனம் பயங்கரமாக இருந்தது. கொடிய குற்றவாளியைக் கூண்டிலே நிறுத்திவிட்டு வாயை மூடிக் கொண்டு நிற்பதைப் போல அணு அணுவாக அறுத்தது.
அன்றிரவு முழுவதும் ராயருக்குக் காவலுக்காக நாலு பேர். வேணு வீடு திரும்பும்போது, ராயர் இருந்தாற்போலிருந்து கத்தினார்.
“இன்னிக்குத் தப்பிச்சுட்டேன்... நாளைக்க... நாளன்னிக்கு... எப்பவுமா எனக்குக் காவல் போட்டு வைக்கப் போறீங்க?”
“மூடம்மாதிரிக் கத்தாதீங்க” என்றுயாரோ அடக்கினார்கள்.
அன்றிரவு வேணுவுக்கு மூளைக்கொதிப்பினால் பயித்தியம் பிடிக்காதது ஆச்சரியம்தான். ராயரின் மூர்க்க நெறி கொண்ட குரல்... கதவுக்கு எதிரில் குழுமி நின்று கதறிய குழந்தைகளின் அநாதரவான முகத்தோற்றம்... நினைவில் மாறி மாறிச் சுழன்றது.
வேணு தலையணையில் முகத்தைக் கவிழ்த்துக் கொண்டான். “கௌசல்யா கௌசல்யா” என்று நூறு தடவை அவன் கதறிய ஓசை, தலையணையின் பஞ்சுத் திணிப்பில் புதையுண்டு போயிற்று.
ஊர்ப்பகை, எதிர்வீட்டில் விடியட்டும் என்று மௌனமாக உறுமிக் கொண்டு காத்திருக்கிறது. அதைப் பற்றியும் கவலை இல்லை. அவனது ஒரு சொல்லுக்கு எல்லாவற்றையும் பிளந்து கொண்டு கௌசல்யா உடன் வந்துவிடுவாள்.
ராயரின் மூர்க்கம் தணியாவிட்டால்...
புயலடிக்கும் சமுத்திரக் கரைபோல் மனசு தத்தளித்தது. ஒரே இருள். குழம்பிக் குழம்பி முன்னும் பின்னுமாக முடிவுகள் ஊசலாடின.
வேணு - பிரளயமே நடந்தாலும், கலங்காத மனோதிடம் வாய்ந்த வேணு - சின்னப் பிள்ளை போல் புத்தி தடுமாறித் தவித்தான்.
ஆறுதலுக்கு ஒரு சொல்... ஒரு துணை தோன்றிக் கடலில் குதித்துவிடு என்று கட்டளையிட்டிருந்தாலும், கண்ணை மூடிக் கொண்டு அதை நிறைவேற்றியிருப்பான்.
சிம்னி விளக்கில் எண்ணெய் தீர்ந்து, திரி நெருப்புகட்டி முணுமுணுத்தது. அதுவும் அணைந்து கனிந்து நின்ற நெருப்பும், பரவிய இருளோடு கலந்தது.
அடுத்த நாள் காலை, ஆற்றிலிருந்து தண்ணீர் கொண்டு வந்த பெண்கள், கையில் ஒரு பெரிய டிரங்குப் பெட்டியோடு வேணு எதிர்ப்பட்டதைக் கண்டு ஒதுங்கினர். அவர்கள் கண்களில் வெறுப்பு விஷமாகத் திரண்டு ஒன்றுக்கு ஒன்று பரிமாறிக் கொண்டன.
வேணு இதைக் கவனித்தான்.
“ம்ஹும்” என்று விரக்தியோடு ஒரு முனகல் நெஞ்சுக்குள் மடிந்தது!
பெரியதனக்காரர் வீட்டுக்குப் போய் வீட்டுச் சாவியையும், பள்ளிக்கூடச் சாவியையும் கொடுத்தான்.
“என்ன, வாத்தியாரையா?”
“நான் ராஜினாமாச் செய்துடறேன். ஊருக்கே போயிடறேன்.”
அவர் பதில் சொல்லவில்லை.
“எனக்கு எவ்வளவோ உபகாரம் செஞ்சிருக்கீங்க, அதுக்குக் கைம்மாறு செய்ய முடியல்லே.”
அவரும் சற்றுக் கலங்கிவிட்டார்.
“அதெல்லாம் கிடக்கட்டும். அவசரப்பட்டு இப்பவே புறப்படணுமா?”
“இன்னும் ஒரு பொழுதுகூட இங்கே தாமதிக்க எனக்குப் பலமில்லே.”
“உங்க இஷ்டம்.”
கைகூப்பி வணங்கி விட்டு, பெட்டியைத் தூக்கிக் கொண்டு புறப்பட்டான். ஒரு வருஷம் இருந்து நல்லவனாகவும் வாழ்ந்த ஊரைவிட்டு மூன்றாம் மனிதனாக வெளியேறும் வேதனை பிழிந்தது.
ஓரிருவர் “எங்கே வாத்தியாரய்யா, ஊருக்கா?” என்றனர்.
மௌனமாகத் தலை அசைத்தான் வேணு. தெப்பம் கரைக்கு வந்தது. வேணு ஏறி உட்கார்ந்தான். தெப்பக்காரர்கள் கயிற்றைச் சுழற்றிப்போட்டு ஆற்றிலே நடந்தனர். வட்டக்கூடை போன்ற தெப்பம், கால்வட்டம், அரை வட்டமாக ஆற்று வெள்ளத்தில் சுற்றிச் சுற்றி ஆடுகிறது.
ரயில்வே பாலம் கண் எல்லைக்கு மறைந்துவிட்டது. ஆற்றின் அக்கரைத் துறையிலே நிற்கும் கூட்டம். ஆச்சாள்புரத்துக் கவரி வீசி நிற்கும். தென்னை வரிசை. உதடுகள் நடுங்கின. திடுதிடுவென்று பூமியதிர்ச்சியிலே நிலம் பிளந்து விரிவதைப் போல நெஞ்சிலே பள்ளம் பறிந்தது. தூரத் தூரப் போய்க் கொண்டிருந்தது ஆச்சாள்புரம்.
வேணு, தெப்பத்தில் நின்ற கூட்டத்தின் மத்தியில், எங்கே கதறி விடுவோமோ என்ற அச்சத்தில் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.
ஆற்றின் ஓலத்தை மீறி, அடைத்து நின்ற ஜனப் புழக்கத்தை மீறி, அக்கரை மேட்டைக் கடந்து, செண்பக மரத்தடியை நோக்கிக் கௌசல்யா கௌசல்யா என்று உள்ளம் பதறிக் கூவிக் கொண்டிருந்தது.
இக்கரை மேட்டில் இறங்கினான் வேணு. விடு விடு வென்று, துரத்திவரும் நினைவுகளிடமிருந்து தப்பிச் செல்வதுபோல் வேகமாக நடந்தான். கொஞ்சம் கொஞ்சமாகச் சரிந்த மேட்டில் அவன் உருவம் மறைந்து போயிற்று.
சில நாட்கள் கழித்து வேணுவிடமிருந்து கௌசல்யாவுக்கு ஒரு கடிதம் வந்தது.
No comments:
Post a Comment