Saturday, 26 January 2013

பாடிப்பறந்த குயில் -3

3
கோபமும், ரோஷமும், அவமானமும், வருத்தமும் அவளுடைய அழகிய சிவந்த முகத்தில் தத்தளித்தன. உதடுகளை இறுக மூடிக் கொண்டு அவள் எதிரிலேயே நின்றாள்.
“பாவம், அதுவும் வரட்டுமே!” என்று அவளுடைய தோற்றத்தை ரசித்தபடியே கூறினான் தியாகராஜன்.
“உங்களுக்குத் தெரியாதுங்க எஜமான்! இந்தப் பொம்பளைப் பிள்ளைக்கு அளவுக்கு மீறிச் செல்லம் கொடுத்திட்டேன். இது தம் போக்கிலே ஆடுது. வேட்டைக்கு வந்து இவ என்னத்தைக் கிளிக்கப்போறா?”
“இல்லை, ஜக்கோடன்! இவளும் வரட்டும். மலை ஜாதிப் பெண்ணானால், தைரியமும் வீரமும் அவள் உடம்பிலேயே ஓடணும். வேட்டைகளை அவள் பார்க்கணும்” என்று இடைமறித்தார் ஜான்ஸன்.
ஜக்கோடன் முகத்தில் ஒரு தர்மசங்கடம் நிலவியது. அவர் வார்த்தை அவனுக்குத் தேவ வாக்கு. அவன் பேசாமல் இருந்து விட்டான். நிஷாவின் முகத்தில் புதுப் பூவொன்று மெல்ல மலர்வதைப் போன்ற களிப்பு உருவாகியது. அவள் அவசரத்தோடு ஜீப்பில் ஏறி ஜீவானந்தத்தின் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள். அங்கேதான் சிறிது இடமிருந்தது; முன்புறம் இல்லை. ஜீப் மெல்லப் புறப்பட்டதும் நிஷாவின் முகத்திலிருந்த மந்தஹாசம் ஜீப்பின் இயக்கத்தால் புளகாங்கிதமுற்று அதிக சப்தமில்லாத சிரிப்பாக மலர்ந்தது. ஜீப்பின் ஓசையால் ஜீவானந்தத்துக்கும் ஜான்ஸனுக்கும் மட்டுமே அது கேட்டது.
அந்திக்கு மேல்தான் கருஞ்சிறுத்தைகள் நடமாட்டம் ஆரம்பிக்கும். ஆகவே, காட்டில் விஸ்தாரமாக நுழைந்து பார்த்துவிட்டு வருவது என்று தியாகராஜன் தன் திட்டத்தைப் பிரஸ்தாபித்தான். ஜான்ஸனுக்கும் அது சரியென்று பட்டது. நிஷாவையும் கூட இழுத்துக் கொண்டு அலைவது நன்றாயில்லை என்று ஜக்கோடன் அபிப்பிராயப்பட்டான். ஆனால் அவள் தன் பலத்த ஆட்சேபத்தை முகத்திலேயே தெரிவித்துக் கொண்டாள். அதனால் வளையும் கூட அழைத்துக் கொண்டு செல்ல வேண்டி நேரிட்டது. எல்லோரும் அந்த அமைதி நிறைந்த காட்டில் கலகலவென்று பேசியபடியே உயிர் சந்தடியை ஏற்படுத்திக் கொண்டு நடந்தனர். பூட்ஸ் ஓசைகளையும், சிரிப்பொலிகளையும் கேட்டுப் பயந்து சில பறவைகள் கூட்டை விட்டுப் பறந்தன. அடர்ந்த புதர் ஒன்றின் அருகில் திடீரென்று ஒரு சலசலப்பு கிளம்பியது. சட்டென்று அனைவரும் சிலைகள் போன்று நின்றுவிட்டனர்.
மறுகணம் “டீர்... டீர்... மான்!” என்று கத்திக் கொண்டே ஜான்ஸன் துப்பாக்கியை உயர்த்தி, அந்த வேகத்திலேயே குறியை நிதானித்துக் கொண்டு விரைவாகச் சுட்டார். ஷிகாரியின் அடுத்த குண்டும் ஜக்கோடனின் குண்டும் அதைத் தொடர்ந்தன. புதரிலிருந்து ஒரு மின்னல் போல் துள்ளிப் பாய்ந்து அவர்களைத் தாவிக் கொண்டு ஓடியது ஒரு காட்டு மான்.
“அது தப்பிக்க முடியாது, ஜக்கோடன்!” என்று மலை போன்ற, வயதான கிழவர் ஜான்ஸன் இளைஞன் போல் துள்ளிக் கொண்டு அதைப் பின் தொடர்ந்தார். ஜக்கோடனும், ஷிகாரி ராஜவேலுவும் அவரைப் பின்பற்றி அடர்ந்த புதர் வழிகளில் இறங்கி ஓடலானார்கள். அந்த நடுக்காட்டில் திடீரென்று தனியே விடப்பட்ட மூவரும் மௌனமாக இருந்தார்கள். வெகு நேரம் கழித்துக் காட்டின் அதிக தூரத்துக்கப்பால் உறுமல் போன்று ஒரு துப்பாக்கி ஓசை கேட்டது.
“சுட்டுவிட்டிருப்பார்களா மிஸ்டர் ஜீவன்?” என்று அவனைத் திரும்பிப் பார்த்தான் தியாகராஜன். இவ்வளவு நேரம் வரையில் தூங்கி எழுந்தது போல் அவனுடைய சுபாவம் மீண்டும் திரும்பியது.
“கட்டாயமா சுட்டிருப்பாங்க!” தலையை அசைத்துக் கொண்டு முந்தின நிஷா. அவள் பக்கமாக விசித்திரமான பார்வையோடு திரும்பிப் பார்த்தான் தியாகராஜன். அடர்ந்த மரங்கள். விந்தையான செடி, கொடிகள். வெள்ளைக் கூழாங்கற்கள். விசித்திரமான இயற்கையின் அந்தப் பச்சைப் பந்தலின் கீழே அவளுடைய அழகில் ஓர் அபூர்வ லாகிரி சேர்ந்திருந்தது. தியாகராஜன் அடங்காத இதய தாகத்தோடு அந்த லாகிரியில் மெல்ல மெல்ல அவளையே பருகி விடுவது போன்று பார்த்தான். பின்பு ஏதோ ஒரு முக்கிய விஷயம் சொல்வது போன்ற குரலில் ஜீவானந்தத்தின் பக்கம் திரும்பி, “இவள் ஒரு வனமோகினி மாதிரி இல்லை, மிஸ்டர் ஜீவன்?” என்று கேட்டான்.
ஜீவானந்தத்தின் நெற்றி நரம்புகள் புடைத்தன. துப்பாக்கியை நிலத்தில் ஊன்றியிருந்த அவனுடைய இரண்டு கைகளிலும் அடக்கமாட்டாத ஓர் உக்கிரம் தோன்றி, அவை விறைத்தன.
‘இவ்வளவு துச்சமானவனிடமா கடைசியில் கங்கா ஒப்புவிக்கப்பட்டுவிட்டாள்? ரத்ன மண்டபத்தின் உப்பரிகையில் நிலவின் அமிர்த கிரணங்கள் தூங்கச் செய்ய, மந்தமாருதம் கோதிவிட, மேன்மையான இடத்தில் இருக்க வேண்டிய அந்த இள மலர் எவ்வளவு நீசமானவனிடம் விசிறி எறியப்பட்டிருக்கிறது!’
ஜீவானந்தம் காலாக்கினி போன்ற ஆத்திரத்தின் வசப்பட்டான். துப்பாக்கியை உயர்த்தி வெறும் வானத்தை நோக்கிச் சுட்டான். நிஷா பீதியடைந்து தியாகராஜனின் தோளைப் பற்றிக் கொண்டாள். அந்தக் குண்டின் ஓசை ஒரு தெளிவற்ற முனகல் ஒலிபோல் மெல்லமெல்ல அடங்கியது.
தியாகராஜன் கடகடவென்று சிரித்தான். “என்ன மிஸ்டர் ஜீவன்! துப்பாக்கி சுட்டுப் பழகிக் கொள்கிறீர்களா?” என்று நறுக்கென்று கேட்டான்.
ஜீவானந்தம் பளிச்சென்று அவனை நிமிர்ந்து பார்க்கையில் தியாகராஜனின் தோளைப் பிடித்துக் கொண்டு நிஷா மலங்க மலங்க விழித்தபடி நின்றிருந்தாள். அவளைக் கண்டதும் அவனுடைய இருதய வேகம் தாழ்ந்தது. தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான்.
“ஒன்றுமில்லை சார் சும்மா, துப்பாக்கி சுடுகிறதா என்று பார்த்தேன்.”
“அப்படியா?” என்று அலட்சியமாகப் பார்த்தபடி” அதைத் தான் நம்பவில்லை என்பதுபோல் தியாகராஜன் நின்றான்.
“இன்னும் இவர்களைக் காணவில்லை. நாம் கொஞ்சம் அப்படியே சுற்றிவிட்டு வருவோமா?” என்று அவன் அலட்சியத்தை மதியாது ஜீவானந்தம் நடக்கத் தொடங்கினான். அவன் மனத்தில் அந்தக் கோபமெல்லாம் அப்படியே ரஸவாதமானது போல் வருத்தமாகி விட்டது.
“ஓ, போகலாம்! ஆனால் நீங்கள் துப்பாக்கி சுடுகிறதா என்று என் மேலே சுட்டுப் பார்த்துவிடாதீர்கள்... என்ன நிஷா?” என்று கூர்மையான அர்த்தத்தோடு சிரித்தான் தியாகராஜன். ஜீவானந்தத்தால் பேச முடியவில்லை. நிஷா தான் சளசளவென்று தியாகராஜனோடு பேசிய வண்ணம் வந்து கொண்டிருந்தாள். “துப்பாக்கி எப்படிச் சுடுகிறது? எப்படிச் சுட வேண்டும்?” என்று என்னென்னவோ கேள்விகளைக் கேட்டுக் கொண்டே வந்தாள். பேச்சு சுவாரசியத்தில் தியாகராஜனும் நிஷாவும் பின்னால் ஓரடி தள்ளிவிட்டதால் ஜீவானந்தம் முன்னால்நடந்து கொண்டிருந்தான். கங்கா என்ற வட்டத்தைச் சுற்றியே ரத்தம் சிந்தியவாறு அவன் எண்ணம் ஓடியது. பழைய நினைவுகள்... பழைய சம்பாஷணைகள்... பழைய காலம்...!
“இவ்வளவு கேக்கிறியே! உனக்குத் துப்பாக்கி சுடணும்னு ஆசையாய் இருக்கா?” என்று கேட்டான் தியாகராஜன்.
“அப்பப்பா! எனக்கு எவ்வளவு ஆசை தெரியுமா?” என்று சிவந்த உதடுகள் குவிய அவனைப் பார்த்தாள் நிஷா.
“முதல்லே நான் சுட்டுக் காட்டறேன், அதோ அந்தப் பறவையை!” என்று அவன் சொல்லி முடிக்குமுன், ஜீவானந்தத்தின் தலைக்கு வெகு அருகில் ஒரு குண்டு சீறிக் கொண்டு நீல வானில் ஹாய்யாக வட்டமிட்ட ஒரு ராஜாளியை நோக்கிப் பறந்தது.
ஜீவானந்தம் திடுக்கிட்டுத் திரும்பினான்.
ராஜாளி ஒன்று சற்றுத் தொலைவுக்கப்பால் போய்த் துவண்டு விழுந்தது.
“பயந்துவிட்டீர்களா மிஸ்டர் ஜீவன்? நிஷாவுக்குச் சுட்டுக் காண்பிச்சேன். அதோ பாருங்க, அந்தப் பறவையை!” என்று அவனக்குச் சுட்டிக்காட்டினான் தியாகராஜன். நிஷா கலகலவென்று நகைத்துக் கொண்டுகீழே விழுந்த பறவையை எடுத்துவர ஓடினாள்.
ஜீவானந்தம் தீர்க்கமாக அவனையே உற்றுப் பார்த்தான். தியாகராஜன் அந்தப் பார்வையை லட்சியம் செய்யாமல் நிஷாவைப் பின் தொடர்ந்து நடந்தான்.
“என்ன நிஷா, கெடச்சுடுச்சா?” என்று அவனது குரல் ஜீவானந்தத்தைப் பரிகாசம் செய்வது போல் காற்றில் மிதந்து வந்தது. அவன் துப்பாக்கியைக் கீழே ஊன்றி, ஒரு பாறையின்மீது உட்கார்ந்தான். கைகள் இரண்டும், கோத்தாற்போல் துப்பாக்கியைப் பிடித்திருந்தன. நெற்றியின் மீது இரண்டு கைகளையும் துப்பாக்கியையும் சாத்திக் கொண்டு மெல்லக் கண்களை இறுக மூடிக் கொண்டான்.
“ஜீவா... ஜீவா! நீ வரவில்லையா?” என்று நிஷா கத்தினாள்.
“இல்லே” என்று கண்களைக் கூடத் திறக்காமல் பதில் சொன்னான் ஜீவானந்தம்.
“என்ன சமாசாரம் மிஸ்டர் ஜீவன்?” என்று கேட்டான் தியாகராஜன்.
“தலை ஒரு மாதிரியா வலிக்கிறது!”
“அப்போ இங்கேயே உட்கார்ந்திண்டு இருங்க. இவளுக்குத் துப்பாக்கி சுடக் கத்துக் கொடுக்கிறேன்... நிஷா! அந்த ராஜாளியைக் கொண்டுபோய் அவர் பக்கத்திலே போட்டுட்டு வா” என்றான் தியாகராஜன்.
நிஷா ராஜாளியைக் கொண்டு வந்து அவனருகில் போட்டுவிட்டுச் சிறிது நேரம் நின்றாள். துப்பாக்கியின் மீது குனிந்து கொண்டிருந்த அவனைக் கருணையோடு நோக்கினாள். மெதுவாக அலையலையான அந்தக் கிராப்பை வருடிய வண்ணம் மனத்தினுள்ளிருந்து பேசுவதுபோல், “ரொம்ப நோவுதா ஜீவா?” என்றாள். ஜீவானந்தத்துக்கு மனம் கலங்கியது. நிமிர்ந்து அவளைப் பார்த்தான். விளையாட்டுத்தனம் நிறைந்த அந்தக் கண்களில் உண்மையான வருத்தம் கண்டிருந்தது.
“கொஞ்சம்தான்.”
“இங்கேயே ஒக்காந்துக்கிணு இருப்பியா?”
“ஊம்.”
“சரி; நான் போவட்டுமா?”
“செய்” என்று அவளை அனுப்பி வைத்தான் ஜீவானந்தம். அவர்கள் இருவரும் பிரிந்து சென்றதும் எந்தக் கட்டுக்களுமற்று அவன் மனம் ‘ஹோ’வென்றது பொங்கி எழுந்தது. கரையின் மீது நுரையைத் துப்பிவிட்டுத் திரும்பி ஓடும் அலைபோல் அவன் நினைவுகள் சீறின. அந்த அலையோசøயில் செயலற்றுச் சிறுகச் சிறுக அமிழ்ந்துவிட்டான் ஜீவானந்தம்.
ஜீவானந்தத்தின் பழைய நாட்கள்! அநாதையான அவன் ஆம்பூர் கஸ்பாவில் மாமா வீட்டில் தங்கிப் படித்துக் கொண்டிருந்தது.... அடுத்தடுத்த இரண்டு மாடி வீடுகளில் பக்கத்து மாடி வீட்டில் கங்காவின் குடும்பம் வசித்தது... இனிமை வாய்ந்த அநேக தினங்கள்... ஆகியவைகளெல்லாம் அவன் அகக் கண்ணில் பிலிம் சுருள்போல் வேகமாக ஓடின.
ஜீவானந்தத்தின் மாமா பாலகிருஷ்ண முதலியார், ஆம்பூரில் ஒரு பெரிய தோல் கிடங்கில் கணக்குப் பிள்ளையாக வேலை பார்த்து வந்தார். முப்பது வயதுக்கு மேல் அவர் கல்யாணம் செய்து கொண்டதால் ஜீவானந்தம் அங்கே படிக்கப் போய்ச் சேர்ந்தபோது குஞ்சும் குளுவானுமாக அவருக்கு அரை டஜன் குழந்தைகள். அவருக்கு ஜீவானந்தத்தின் பேரில் மிகவும் பிரியம். மாடியையும் அதிலிருந்த அறையையும் அவனுக்காகவே ஒழித்துக் கொடுத்துவிட்டார். அந்த வீடும் சரி, அதற்கு அருகிலிருந்த இன்னொரு மாடி வீடும் சரி - பழங்காலத்து முறையில் கட்டப்பட்டவை. மாடியிலிருந்து கீழே எட்டிப் பார்க்கக் கொஞ்சம் இடத்தை நடுவில் விட்டுவிட்டு மற்ற நான்கு பக்கங்களிலும் கம்பிகள் பொருத்திச் சுவர் எழுப்பியிருப்பார்கள்.
அவன் பள்ளிப் படிப்பையெல்லாம் முடித்துவிட்டு, ஆம்பூருக்குப் பக்கத்திலுள்ள வாணியம்பாடியில் கல்லூரியில் சேர்ந்திருந்த நேரம் அது. பக்கத்து வீட்டுக்குப் புதிய குடித்தனக்காரர்கள் வந்திருப்பதை அறிந்திருந்தான். ஆனால் யார் இன்னாரென்று தெரியாது.
அன்று அதிகாலை வழக்கம்போல் விளக்கைப் போட்டுக் கொண்டு படித்துக் கொண்டிருந்தான் ஜீவானந்தம். மனம் லயித்துப் படித்துக் கொண்டிருந்த ஜீவா, பட்டென்று பக்கத்து வீட்டு மாடியில் மின்சார விளக்கு போடப்பட்டதையும் வளையல் ஓசையும் கேட்டுத் திரும்பினான். இந்த வீட்டு மாடியிலிருந்தவாறே பக்கத்து மாடியை நன்கு பார்க்க முடியும். விடிவின் வெளிம்பில் தோய்ந்த பொன்போல் பிரகாசிக்கும் மின்சார வெளிச்சத்தில் ஈரத் தலையை ஆற்றியவாறே ஒரு துண்டைக் காயப் போட்டுக் கொண்டிருக்கும் ஓர் இளம் பெண் அவன் கண்ணில் தென்பட்டாள். ஜீவா அதிசயமும் குறுகுறுப்பும் மனத்தில் நிலவ, செயலிழந்து பார்த்துக் கொண்டேயிருந்தான். சிவந்த மேனியும் ஒரு கம்பீரமான சாந்தமும் முகத்தில் நிலவ, அடர்ந்திருந்த கூந்தலைச் சுயேச்சையாய் அவிழ்த்து விட்டு, ஆடிய இளங்காற்றில் அதை ஆற்றிக் கொண்டிருப்பது,மஹா மங்கை பகீரதன் தவத்திற்காக வானின்று இறங்கி வந்தது போல் அவனுக்குத் தோன்றிற்று. அப்படி ரவிவர்மாவின் படம் ஒன்றை அவன் பார்த்திருக்கிறான்.
அவளுடைய நீண்ட விழிகள், காற்றின் இலேசான கொஞ்சலை அனுபவிப்பது போல் சற்றே மூடியிருந்தன. இதழ்களில் ஒரு புன்முறுவல். ஜீவா பார்ப்பதை அவள் கவனிக்கவில்லை. எனவே அவளுடைய முழு சௌந்தர்யமும் அந்தக் காலை வேளையில் சுயேச்சையோடு விகிசித்தது.
அதற்குள் வீதியில் பாடிக் கொண்டு போகும் ஒரு முஸ்லிம் பக்கீரின் குரல் கேட்டது. அவள் கீழே எட்டிப்பார்த்துவிட்டுத் திரும்பினாள். ஓர் இளைஞன், ஆச்சரியமான பார்வையோடு தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டு திடுக்கிட்டுத் திரும்பி நடந்தாள். மின்சார விளக்கு அணைந்தது.[தொடரும்]

No comments:

Post a Comment