Friday, 25 January 2013

ஆச்சாள்புரம் -2


2
வேணுவுக்குப் பொறி கலங்கிற்று. மெய் சிலிர்த்தது. இப்படி ஒரு சிருஷ்டியா?
ஒரு பார்வையில் ஆளையே வாரிச் சிறை பிடிப்பது போல்... குளிர்ந்த நிலவில் முழுக்காட்டுவது போல்... மனம் குளிர்ந்து நிறைந்து... விம்மி... வழிந்து...
அவள் முகம் திரும்பிவிட்டாள். பெண்கள் கூட்டத்தின் சிரிப்பொலி மங்கிக் காற்றில் கரைந்தது. குடமும் இடுப்புமாக அவர்கள் கை வீசி நடந்த நடை மேட்டில் நிழலுருவமாக மங்கி மறைந்து விட்டது.
வேணு செய்கை அழிந்து சி லையாக நின்றான். மனமே இறந்து புதிதாய்ப் பிறந்தது போல உடம்பெங்கும் ஒரு விதிர் விதிர்ப்பு. இலேசாக வியர்த்துவிட்டது. அந்தி கவிந்தும் காட்சியில் அந்தத் தோற்றம் வந்து வந்து குறுக்கிட்டது.
கண்கள்... மையிட்ட இரண்டு அற்புதங்கள். நெஞ்சே அமுதக்கேணியாகி இந்த இரு விழிகளும் மீனாக நீந்தி நீந்தித் துள்ளுகின்றன. அப்புறம் வேணுவினால் சித்திரம் எழுதமுடியவில்லை. தான் வரைந்த கண்களைப் பார்த்தான். யாரோ ஒரு பேதைப் பெண் இதைப் போய்க் கௌசல்யாவின் கண்களோடு ஒப்பிட்டாள்! அவற்றில் பொங்கிய உயிரை ஓவியமாகத் தீட்டுவதென்றால்...அடேயம்மா!
பித்தனைப் போல் ஓவியப் பெட்டியைச் சுமந்துகொண்டு வீடு திரும்பினான். ஜுரம் கண்டதுபோல உடல் கனன்றது. ராயர் வழக்கம்போல் தெருத் திண்ணையில் சப்பணம் போட்டு உள்ளங்காலை வருடியவாறு அமர்ந்திருந்தார்.
“என்ன ஸ்வாமீ! இன்னிக்கு இவ்வளவு நாழி?”  
பதில் இலேசில் வரவில்லை. தொண்டை வறண்டது.
“சித்திரம் எழுத ஆற்றுப் பக்கமாகப் போய்விட்டேன்.”
வம்பளக்கப் போகாமல் வீட்டிற்குள் நுழைந்தான். தன் அறைக்குள் தன் வருகையே யாரோ புது ஆள் புதிய இடத்திற்குள் பிரவேசிப்பது போல் பிரமை தந்தது.
என்ன நேர்ந்து விட்டது?
சமைக்கவும் மனமில்லாமல், நாற்காலியில் விழுந்தான்.
கண்கள்... கண்கள்... மனசை அடைத்துக்கொண்டு அறையை நிறைத்து அவை என்னென்ன பேசுகின்றன! அன்று வேணு தூங்கப் போகும்போது, ஜாமக்கோழி விடிகாலைக் குளிரில் நடுங்கியவாறு கூவிற்று.
நாலாவது நாள்.
ஒவ்வொரு நாளும் ஏதோ கிறுகிறுப்பில், பாதி ஆள் அழிந்து போய்விட்ட மாதிரி கழிந்து சென்றது. பள்ளிக் கூடம்... வீடு... ஆற்றங்கரை என்று யந்திரம் போல் உடம்பு இயங்கினாலும் எதுவுமே கை வசத்தில் இல்லை. அகால நேரத்தில் தூக்கம் அறுந்து விடுகிறது. ஒன்றைக் கண்டால் இன்னொரு ஞாபகம்.
கண்கள்... கண்கள்... அவைதான் வெருட்டி வெருட்டிப் பிடித்து விளையாடின.
நிலவு இன்னும் மங்காத அதிகாலையில் ஆற்றங்கரைக்குக் குளிக்கப் போனான் வேணு. ஊரே எழுந்திருக்காத வேளை. தூக்கம் பிடிக்காததால் விடிந்த பொழுது போதுமென்று புறப்பட்டு விட்டான்.
மேடு இறங்கி, கரை நெருங்கும் இடைவெளியில் நாலைந்து தென்னை மரங்கள்... சிறு தோப்புப்போல. அரை இருட்டு. நிலவு வெளிச்சம் அங்கங்கே சிதறியிருந்தது. அதைக் கடந்து கொண்டிருந்த வேணு திடுக்கிட்டு நின்றான்.தால்
எதிரில் கைவளையோசையும் புடவைச் சரசரப்பும் கேட்டன. கௌசல்யா! மூர்ச்சை போடும் நிலை வேணுவுக்கு. ஜிவ்வென்று நரம்பு நாடிகளில் மின்சார வேகம். அவளும் நின்று விட்டாள். ஒரு கணம். யுகத்தின் கனத்தோடு உணர்வு உணர்வாய்ப் பொங்கி அலை எறிந்து நீண்ட ஒரு கணம்.
“நீங்களா... நான் பயந்தே போய்ட்டேன்.”
அவள்தான் முதலில் மௌனத்தைக் கலைத்தாள். புன்முறுவல் பூத்த அவள் உதடுகளின் மீதும் குளித்ததால் பளிச்சிட்ட நெற்றியிலும் சந்திர வெளிச்சம் கொஞ்சிற்று.
“என்ன... இத்தனை விடிகாலையில்?”
“இன்னிக்கு வெள்ளிக்கிழமை... வீடு மெழுகறது அது இதுன்னு நெறய வேலை.”
“இருந்தாலும் தனியா இந்த இருட்டிலே.”
“பூதமா பிடிச்சுண்டுடப் போறது? நம்ம தைரியம் நம்ம கையிலே இருந்தா யார் என்ன செய்யமுடியும்?”
வேணுவுக்கு அவள் பேசியது, பதிலுக்குத் தான் கேட்டது... பதில்கள்.. சிரிப்பு..நினைவில் எதுவுமே பதியவில்லை. பித்தனைப் போல் அவள் கண்களையே பார்த்துக் கொண்டு நின்றான்.
“வழி விடறேளா? நாலுபேர் வர்றநேரம்” கண் உருக்கமாகக் கெஞ்சிற்று.
என்ன செய்கிறோம் என்று அறியாது அவளை நெருங்கினான். அவளது கரத்தைப் பற்றிக் கண்களில் ஒற்றிக் கொண்டான். பரவசத்தில் அந்த ஸ்பரிசத்தால் கண் ததும்பி வழிந்து விட்டது.
சௌசல்யா இதை எதிர்பாராதவள் போல் கையைச் சரேலென்று விடுவித்துக் கொண்டாள்.
“என்ன தைரியம்?” என்று கேட்டுவிட்டு உறுத்துப் பார்த்தாள். வேணுவின் தைரியம் காற்றாய்ப் பறந்தது. இதயம் துடிக்க, கண் ஈரம் இமையில் துடிக்க நிமிர்ந்து பார்த்தான்.
அவனதுஅந்தப் பதறிய கோலம் அவளுக்கே பரிதாபமாகப் பட்டிருக்க வேண்டும். சிறிது மௌனம், தென்னங்கீற்றின் சலசலப்பு.
“பயந்துட்டேளா?”
வேணுவிடமிருந்து பதில் இல்லை.
“இந்தக் காரியம் செய்யலாமா?”
கௌசல்யாவின் விழிகளின் ஒரு கோடியில் இந்தக் கோபம் பொய், அந்தப் பொய்யின் திரைக்குப் பின்னால் வேணுவின் துணிவுக்கு இசைவான ஆனந்தம் படபடக்கிறது என்று உண்மை நகைத்தது.
வேணுவுக்கு யானை பலம் வந்துவிட்டது.
“நீங்கள் இன்னும் எவ்வளவு கோபித்துக் கொண்டாலும் சரி” என்று தொட்ட கரத்தைப் பற்றினான். இந்தத் தடவை கௌசல்யாவின் கை அவன் பிடியில் குழந்தை போல் நெகிழ்ந்தது.
இருவரும் தம்மை மறந்தனர். ஆற்று நீரின் தண்மை மறையாத கௌசல்யாவின் இடையை வேணுவின் கரங்கள் சுற்றிக் கொண்டன. மார்பு உஷ்ணத்தில் மயங்கிச் சாய்ந்த கௌசல்யாவின் விழிகளும் உதடுகளும் வேணுவின் விரல் முகத்தைத் தூக்கவே நிமிர்ந்தன.
ஒரு நிமிஷம். இன்பத்திரட்சியில் திக்கு முக்காடி நகர்ந்த ஒரு நிமிஷம். அடுத்த நிமிஷம் வேணுவின் கைகளிலிருந்து விலகினாள் கௌசல்யா.
“நான் என்னமோன்னு நெனச்சேன். ஆசாமி ரொம்பப் பொல்லாதவர்” என்று வாயைத் துடைத்துக் கொண்டாள்.
“மெய்யாவா சொல்றீங்க?” என்று மீண்டும் கையைப் பிடித்தான் வேணு.
“இஸ்ஸ்...” என்று உதட்டில் விரல் வைத்து எச்சரித்தாள்.” நாலு பேர் வர்ற இடம். நேரமாச்சு. அப்பா எழுந்துட்டிருப்பார்!”
கௌசல்யாவைப் போகவிட்டான் வேணு.
நிலவு மங்கி வெளுக்கும் வைகறையில், ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த வேணு, இன்பச் செருக்கிலே மிதந்தான். ஏதோ பட்டத்து இளவரசனாய் விட்ட மாதிரி கம்பீரம். மனசிலே ஒரு மாணிக்கம் வைத்த ஒளி. ஓடும் ஆறு, மலை... மனிதர்கள். எப்போதும் பார்த்து முகச் சுளிப்பு ஏற்படுத்தும் தொழு நோய்ப் பிச்சைக்காரன். தென்னஞ்சோலையில் கத்தும் குருவி... ஆற்றில் அலைபடும் தெப்பம்... எல்லாவற்றின் மீதும் கருணை... நேசம்... புதுமை!
ஒவ்வொன்றும் வாரித் தழுவத்தக்கவைபோல் மனசு விரிந்து விரிந்து பரவுகிறது. நினைவுகள் கட்டுக்கடங்காது வெள்ளத்தோடு போட்டியிடுகின்றன.
பெண்ணை வெல்வதில் பித்துப் பிடிக்கிற மாதிரி இத்தனை மகிழ்ச்சி உண்டா?
வீடு திரும்பும் பொழுது வெளித் திண்ணையில் ராயர் சாய்வு மேஜையின் மீது குனிந்து கணக்கெழுதிக் கொண்டிருந்தார்.
பாதித் தெரு நிறைக்கக் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள் கௌசல்யா. குளித்து முடித்து கூந்தல் பம்மென்று கோடாலி முடிச்சில் திணறிக் கொண்டிருந்தது. எவ்வளவு கூந்தல்!
காலடி ஓசை கேட்டுத் திரும்பினாள். மூண்ட இன்பத் தீக்கு நேகிடி போட்ட நெற்றித் திலகம்.
அன்பு, ஆனந்தம், அங்கீகாரம், ஓர் இமைப்பில் ராயர் அறியாமல் என்ன மௌன நாடகம்!
“என்ன ஸ்வாமீ!பெருங்  குளியலா” கண்ணாடிக்கு மேலே பார்த்துக் கொண்டு கேட்டார் ராயர்.
வேணுவுக்குக் களவு செய்த அபராத உணர்வில்லை. வாய் நிறையச் சிரித்தவாறே “ஆமாம்” என்றான்.
“ஜலதோஷம் பிடிக்கப் போறது. புதுவெள்ளம்” என்று எச்சரித்தார் ராயர்.
கோலம் போடும் கௌசல்யாவை ஓரக் கண்ணால் பார்த்தவாறு கடகடவென்று சிரித்தான் வேணு. கௌசல்யாவின் இதழ்களில் ஒரு குறுநகை.
ஊரும் ராயரும் உறங்கிய இரவு வேளையில் ஆச்சாள்புரத்துச் செண்பக மரத்தடியில் தினசரி இரண்டு உருவங்கள் சந்தித்துக் கொண்டன. சுமைதாங்கிக் கல்லின் சரித்திரத்தில்  சுவாரஸ்யமான திருப்பம்.
“இது களவாணித்தனமா? அப்பாவை ஏமாற்றி வஞ்சிக்கிறனோ சொல்லுங்கோ வேணு?” என்று ஒரு நாள் உணர்ச்சி பொங்கக் கேட்டாள் கௌசல்யா.
“இல்லை கௌசா... அப்படி உனக்குப்பட்டா நீ வர வாண்டாம் நின்னுடு.”
“ஒரு நாழிகை தவறினால் உடம்பு தரிக்க மாட்டேங்கறதே.”
“அப்படி, இருக்கச்சே என்ன?... இதோ பார். யாரையும் மோசம் பண்ணிக் களவு செஞ்சு கெட்டழியறது நம்ம நோக்கமில்லே... நம்ப மனோதர்மத்திற்கு விரோதமா நீயும் நானும் பார்த்துப் பார்த்துப் புழுங்கிண்டு வீட்டிலே அடஞ்சிருக்க முடியாது. அப்ப அது நமக்கே நாம செஞ்சுக்கற துரோகம். மத்தவங்களுக்குத் துரோகம் செய்யப்படாதுண்ணு நமக்கு மட்டும் நாம துரோகம் செஞ்சுக்கலாமா?”
“நமக்கு வேணும்னா நாம் துரோகம் பண்ணிக்கலாம். நம்மை நம்பியிருக்கறவாளுக்கு துரோகம் பண்ணப்படாது.”
“அவங்க  நம்ம கிட்டே எதை நம்பி இருக்காங்க?”
ஒரு வினாடி கௌசல்யா திகைத்தாள்.
“இப்படியெல்லாம் பிறத்தியாரோட சினேகமா இருக்காமே...”
அவள் முடிக்கும் முன்பு வேணு குறுக்கிட்டான்.
“குனிஞ்ச தலை நிமிராமே சமையற் கட்டும் பற்றுப் பாத்திரமுமா, வீட்டை அலம்பி மெழுகிச் சுத்தப்படுத்திட்டு வேளை வர்றவரையிலே வீட்டிலே சிலையாட்டம் காத்திருந்து...”
அதற்கு மேல் கௌசல்யாவே தொடர்ந்தாள்.
“வர்றவருக்கு கழுத்தை நீட்டிக் குழந்தைகள் குட்டிகள் பெற்று கிரஹலட்சுமியா விளங்கணும்னு தானே ஒரு தோப்பனார் நெனப்பார்.”
“மகளே, உனக்கு மனம் எப்படிப் போனாலும் அதற்குத் துரோகம் பண்ணிக்கோ. நான் உன்னைப் பெத்து வளர்த்தேன். என் கடமையைக் கழிச்சுக்கணும். உனக்கு துரோகம் பண்ணிக்கோ. நல்லவனோ கெட்டவனோ நான் பார்த்துக் கட்டிவைக்கிற பேர்வழிகிட்டே சம்சாரம் பண்ணு. பந்தோபஸ்தா இருப்பே. இதுதான் கதை.”
“இதுதான் சமூகம்.”
“அவங்களா பண்ணி வைக்கற கல்யாணங்கள்ளே விபத்து நேர்ந்தா அது?”
“தலை விதி.”
“இப்படி யாரையோ சந்திக்கறதும் மனசை இழந்து போகிறதும்கூட தலைவிதியாகாதா?”
“......”
“இது  மத்தவங்களுக்குப் பண்ற துரோகமாகாதா?.”
“.....”
“இப்படியே தலைமுறை தலைமுறையாக நடந்து பெண் ஒரு விலைப் பொருளாகி அவள் விருப்பமே சமூக வளர்ச்சிக்குத் தேவையான பலியாகி, பின்னாடி விதியாகி விடுகிறது.”
“சரி... நான்... இல்லே நாம் என்ன செய்யலாம் சொல்லுங்கோ.”
கௌசல்யா தெளிந்த நோக்கோடு கேட்டாள்.
“மகிழ்ச்சியை, இன்பத்தை தைரியமா அனுபவிக்க வேண்டியதுதான்” பெத்தவங்களுக்கும் மத்தவங்களுக்கும் உரிய கடமையைச் செய்யணும். நம்ம சந்தோஷம்ணு வர்றச்சே அதைவிட்டுக் கொடுக்கப்படாது.”
“அது புரியறது... நம்முடைய இந்தப் பிரியத்தின் முடிவு?”
வேணு அவளது மிருதுவான இரண்டு கன்னங்களையும் மோவாயுடன் ஒரு கலசத்தை ஏந்துவது போல் ஏந்தியவாறே அவளை நேசம் கனிந்தோடப் பார்த்தான்.
“நம்ம பிரியத்திற்கு எது ஆரம்பம்?”
“ஆற்றங்கரையில் நீங்க என்னைப் பார்த்தேளே அந்தப் பார்வை...”
“அந்தப் பார்வை என்ன சொல்லிற்று?”
அவள் முகத்தில் நாணம் அதிகரித்து ஒரு செல்லக் கோபம் பிறந்தது.
“சொரக்காய் இருக்கு பாருங்கோ சொரக்காய்...”
வேணு முந்திக் கொண்டான்.
“அதிலே உப்பு இல்லைண்ணு சொல்லிச்சு...”
“ஊஹும்” என்று அவள் முகத்தைக் கண்டிப்பாக வைத்துக் கொண்டாள்.
“என்ன சொல்லிற்று?”
“உப்பு இல்லேண்ணு சொல்லலே. உப்புப் போதாதுண்ணு சொல்லிச்சு.”
அவன் விழுந்து விழுந்து சிரித்தான். அவளும் சேர்ந்து கொண்டாள். களிப்பின் அலை ஓய்ந்தது.
“இப்போ நெஜம்மா கேக்கறேன். சொல்லு கௌசா எது நம் பிரியத்தின் ஆரம்பம்?”
“நம்பிக்கை.”
“ஓ” என்று உணர்ச்சிவசப்பட்டு ஒரு பெரிய வார்த்தையைக் கேட்டுச் சிலிர்ப்புற்றவன் போல், அவளது இரண்டு கரங்களையும் வாரி மிருதுவாய்ப் பற்றி அவற்றிற்கு அஞ்சலி செய்பவன் போல் கண்களில் ஒற்றிக் கொண்டே ஒரு வினாடி அவன் கண் மூடியிருந்தான்.
அவளது உணர்ச்சி பரவசத்தில் அவளும் ஆட்பட்டாள். செண்பக மரங்கள் காற்றில் சலசலத்தன. அவன் நிமிர்ந்து அவற்றைப் பார்த்தான்.
“எதுக்கும் நம்பிக்கை ஆரம்பமா இருந்தா அது வீண் போகாது. நம்பிக்கையா ஆரம்பித்து எதுவும் விரக்தியிலே முடியாது.”
“எதிலே முடியணும்?” என்று கௌசல்யா கேட்டாள்.
“நீ நெனைக்கறப்பிலே கல்யாணத்திலே தான் முடியணுமா?”
“இல்லே குடும்பத்திலே முடியணும்.”
“எப்படியும் இது முடிஞ்சு போயிடணும்கிறே.”
“அப்பாடி... உங்களாண்டே எவ பேசுவா?”
“இத்தனை நாளாச்சு ஒருத்தி பேச. அவளும் இத்தனை சீக்கிரம் சலிச்சுட்டா...”
கௌசல்யாவின் துடிக்கும் இதழ்கள் அவனது பேசும் உதடுகளை மூடின. ஆற்றங்கரையில் அதிகாலை ஒன்றில் அவன் வழங்கிய வரத்தை அவள் திருப்பினாள்.
அவன் தந்த மாதிரியே மட்டுமல்ல அவன் சிந்தித்த மாதிரியே அவளும் நினைத்தாள். அவனது கலாரசனை... தர்க்கம்... தர்மக்கோட்பாடு எதிலும் அவள் இணைநாதமானாள். எதைப் பேசினாலும் சூட்சமமாய்ப் பிடித்துக் கொண்டாள்.
என்னென்ன வார்த்தைகள்... சங்கீதம்... சிரிப்பு... அழுகை... கொஞ்சல்... கோபம்... செண்பக மரத்தடி நீர்த் தூளிப்பட்டது. துணைக்கு நிலா சேர்ந்து கொள்ளும்.
இதற்கு ஒரு வரம்பு உண்டு என்று ஒரு பொறுப்பு இருவருக்கும் மறக்கவில்லை. வேணு அவசரக்காரனல்ல.
கௌசல்யாவோடு வார்த்தை யாடும் வெறும் சொற்களே அமுதசுகமாயிற்று. கூந்தலைக் கோதிவிட்டு நெகிழ்ந்து செல்லும் காற்று - வளைகள் சோர்ந்துவிழும் ஒலி. கறுத்த இமையின் நடிப்பு இந்த அனுபவங்களே வேணுவுக்குத் தித்தித்தது.
இருவரும் பல நாட்கள் வரை அத்து மீறவில்லை. அந்த நாட்கள் -
உயிர்க்கமுதாகிய சில தினங்கள்... அந்த நாட்கள் வேணுவைத் தேவனாக்கின. கௌசல்யாவின் காதல் மழலை உலகின் அழுக்கிலிருந்து உடம்பின் உச்சுவாச நிச்சுவாச உபாதையிலிருந்து உண்டு உறங்கும் சலித்த உயிர் வாழ்விலிருந்து சின்ன மனிதச் சச்சரவிலிருந்து அவனை விண்ணுக்கு உயர்த்திற்று.
வர வரச் சொற்கள் குறைந்தன. ஒரு பார்வையும் உதட்டின் சிறு மலர்ச்சியுமே அந்த மோன மூர்ச்சைக்குப் போதுமானதாயிற்று.
இதற்குள் ஆற்றங்கரையில் - குடங்களைச் சுற்றிலும், திண்ணை ஓரங்களிலும் ஜாடைமாடையாகக் குசுகுசுப்புப் பரவிற்று.
திடீரென்று ஒருநாள், ராயர் வேணுவிடம் பேச்சு வார்த்தையை நிறுத்திக் கொண்டார். அன்றிரவு காளியம்மன் கோவில் சூலத்தருகே வேணு காத்துக்கிடந்தான். வெகு நேரமாயிற்று. முன்நிலவு மேற்கே சரிந்தது. கொடிய பனி உடலை வாட்டிற்று. கௌசல்யா வரவில்லை. வேணு உடல் குளிரில் உதறப் பொறுமையாகக் காத்திருந்தான். ஜாமக்கோழி கூவி, வேணுவின் பொறுமைக்கு வரம்பிட்டது.
கௌசல்யா வரவில்லை. இனி வரமாட்டாள் என்று பளிச்சென்று மனசிலே ஒரு குரல்.
வேணு வீட்டுக்குப் போனான். தெருத்திண்ணையிலே ராயர் மணையைத் தலைக்கு வைத்துப் படுத்திருந்தார். ஜன்னலில் வெளிச்சம் தெரிந்தது. கௌசல்யாவும் தூங்கவில்லை. மெள்ள இருமிக் காட்டுவோமோ என்றொரு சபலம், மனசிலே கள்ளத்தனம் செய்கிற சோர்வு தோன்றவே, சலித்தவாறு அறைக்குப் போனான்.
மறுநாள் வேணுவுக்கு ஜுரம். பள்ளி திறக்கவில்லை. அதற்கு மறுநாள், அதற்கு மறுநாள் வேணு கண்ணே திறக்கவில்லை. என்னென்னவோ பிதற்றல்கள். யார் வந்தார்கள், போனார்கள் என்ற பிரக்ஞையின்றி நாட்கள் ஓடிக் கொண்டிருந்தன.
கொடிய டைபாய்டு என்று டவுனிலிருந்து வந்த டாக்டர் சொல்லிவிட்டுப் போனார். திருநெல்வேலியில் அவனை வளர்த்துப் படிக்க வைத்த மாமாவுக்குப் பெரிய சாமிப்பிள்ளை ஒரு தந்தி கொடுத்தார். பதிலுமில்லை. ஆளும் வரவில்லை.
ஊர்க்காரர்கள் ஒருவர் மாற்றி ஒருவர் வந்து பார்த்து விட்டுப் போனார்கள். துணைக்குப் படுத்துக் கொண்டார்கள்.
‘கௌசல்யா... கௌசா...’ என்று என்னென்னவோ பிதற்றினான் வேணு.
மரணத்துக்கும், வாழ்வுக்கும் இடையே அவன் ஊசலாடிய வேளையில்கூட ராயர் வீட்டிலிருந்தோ ராயரோ யாரும் பார்க்க வரவில்லை.[தொடரும்]

No comments:

Post a Comment