Thursday, 24 January 2013

எங்கெல்லாம் மணி அடிக்கின்றதோ-4


  4
மரியதாஸ் தினசரி காலையில் நகரத்தில் வைத்திருந்த தச்சுப் பட்டறைக்குப் போக அவள் குடிசையைக் கடந்து தான் செல்ல வேண்டும் என்றுமே திரும்பி ஒரு சிரிப்புடன், கண்களாலேயே விடை பெற்றுச் செல்லும் வழக்கம். கடந்த பதினைந்து நாட்களாக ஒரு கொடிய எஜமானின் சவுக்கு பின்னாலிருந்து அதட்டுவதுபோல் தலைகுனிந்து கொண்டு... வேண்டுமென்று எதிர்ச்சாரியைப் பார்த்துக் கொண்டு... அவர் போவதைக் குடிசை வாயிலில் நின்று கவனித்தாள் அவள்.
ஏதோ ஒரு நாடகத்தின் வேஷத்தைக் கலைத்த பின் நடிகனின் சுயரூபத்தைப் பார்ப்பது போலிருந்தது. இது பல வருஷம் நடந்த நாடகம். நிஜமாக நம்பி மனசை தத்தம் செய்து கொடுத்த நாடகம்.
‘சீ!’ என்று அவள் உள்ளம் வெறுப்புற்றது. தனிமையும் தைரியமும் வெகு காலமாகப் பழக்கமானவைதானே. வைராக்கியமாக அதை மீண்டும் வரித்துக் கொள்ளத் தீர்மானித்தாள். ஆயினும் அந்த வைராக்கியம் ஒரு நாளைக்குப் பலமுறை உடைவதும், உருப்பெறுவதுமாக அவளுக்குப் பைத்தியமே பிடித்துக் கொண்டது.
பல்லைக் கடித்தவாறு, வேலைக்குப் போகும் சாக்கில் அந்த சூனியத்திடமிருந்து தப்பி ஓடினாள். வெகு நேரம் கழித்து வீடு திரும்பி, சமைக்காமலேயே படுத்துக் கொண்டாள். காலப்போக்கு இந்த உணர்ச்சித் துடிப்புக்களை ஆற்றிச் சமப்படுத்தும் என்று நம்பி உறக்கமின்றிப் புரண்டாள்.
ஆயினம் வழியோடு போகும் மரியதாஸை நிறுத்திக் கேட்கத் தோன்றவில்லை. ‘எனக்கு மட்டும்தான் இந்தத் துடிப்பு; அவருக்கு இல்லை என்றால் வலிந்து வழக்கிட்டு அப்படியென்ன யாசித்து வாழவேண்டும்? அந்த நிலை ஏற்பட்டால் இத்தனை வருஷ உழவுக்கு அர்த்தம் என்ன?’
அவள் இதையெல்லாம் யோசித்துப் பல்லைக் கடித்துக் கொண்டு தன் வேதனைகளைச் சுமந்து கொண்டாள்.
நாட்கள் வெகு சிரமத்தோடு நகர்ந்தன.
அன்று மாலை ஐந்து மணிக்கெல்லாம் மழை வரும் என்று சந்தன டிப்போவில் வேலை செய்யும் ஆட்களை அனுப்பிவிட்டார்கள். ஏரிக்குப் பின்னால் கிழக்கே மலைமறைந்து ஒரு பெரிய சாம்பல் போர்வை வானை மூடியிருந்தது. அவள் அவசர அவசரமாக வீட்டுக்குப் புறப்பட்டாள். அந்த சாம்பல் போர்வை கறுத்துக் கனத்தது. மெல்லிய கர்ஜனையும் காற்றின் சீறலும் கேட்கத் தொடங்கியதும் ஓட்ட ஓட்டமாக வீட்டை அடைந்துவிட்டாள்.
கதவைத் திறந்ததும் மழை பிடித்துக் கொண்டது. நெடுநாளைய வஞ்சினம்போன்று காற்று சீறிச்சீறி அடிக்கக் கொட்டும் மழை. சிறிது நேரத்தில் அந்த விறுவிறுப்பைத் தாளாது மரங்கள் ஊளையிட்டுக் கதறின. குடிசைக் கதவை வேகமாகத் திறந்து கொண்டு சாரல் காற்று உள்ளே நுழைந்தது.
அவள் கதவைச் சாத்தித் தாழிடுவதற்காக வாசற்படியை நெருங்கினாள்.
வீதியில் மழை நிரம்பிய வழியில் திக்கு முக்காடிக் கொண்டு மரியதாஸ் வந்து கொண்டிருந்தார். அவர் வீடு ஊர்க்கோடியில் இருக்கிறது.
அவள் சாரல் அடிப்பதைப் பொருட்படுத்தாமல் திறந்த கதவின் அருகில் நின்றாள். மழையில் நனைந்து ஓடிவரும் மரியதாஸும், நனைந்து கொண்டே வாசற்படியில் அவள் நிற்பதைக் கவனித்தார். ஒரு கணம் அவரது கால்கள் அங்கு நின்றன.
முகத்திலும் உடலிலும் சாரல் பொழிய அவள் மௌனமாக நின்று கொண்டிருந்தாள்.
மரியதாஸ் வேகமாக அந்தக் குடிசையை நோக்கி ஓடி வந்தார். அவள் உள்ளே நுழைந்ததும் கதவை வேகமாகச் சாத்தித் தாளிட்டாள்.
“அப்பா... பேயாச் சொழண்டு அடிக்குது!”
“ஆமாம் திடீர்னு புடிச்சுக்கிச்சு”
வேறு பேச்சின்றி அவள் துடைத்துக் கொள்ள ஒரு துண்டை எடுத்து அவரிடம் கொடுத்தாள்.
காற்றின் ஓசை. மழை கெக்கலி கொதிடீரென்று மாதா கோவில் மணி “கிளாங்... க்ளாங்” என்று வீசி வீசி ஆடுகிறது. மரியதாஸ் மௌனமாகத் தலை துவட்டிக் கொண்டிருந்தார்.
“காப்பி போடறேன்” என்று அவர் உத்தரவு தேவையில்லை என்ற தோரணையில் அவள் அறிவித்தாள். அவள் அடுப்பு மூட்டும்போது சட்டையைக் கழற்றிப் பிழிந்து காயப் போட்டுவிட்டு ஓர் உலர்ந்த துண்டில் உடம்பைப் போர்த்திக் கொண்டு, உட்கார்ந்தார்.
அடுப்புச் சுள்ளிகள் சடசடத்தன; காப்பி தேக்ஸா காய்ந்து முனகிற்று.
மௌனத்தில் தான் எத்தனை அழகாகப் பேசிக் கொள்ள முடிகிறது?
காப்பித் தம்ளரைச் சேலைத் தலைப்பில் சுற்றிக் கொண்டு வந்தாள்.
கரங்கள் சந்தித்தன.
“உனக்கு?”
அடுப்பை அணைத்துவிட்டு இன்னொரு தம்ளரை நிரப்பி எடுத்து வந்தாள்.
காப்பியைச் சாப்பிட்டு தம்ளரை வைத்த சப்தம். வெளியே காற்றும் மழையும் கலந்து வீசிக் கொண்டிருந்தது. மாதா கோவில் மணி ‘கிளாங்... கிளாங்’ என்று முழங்குகின்றது.
ஒருவருக்கு ஒருவர் அன்னியமாக, பேசாமல் சிறிது நேரம் உட்கார்ந்திருந்தனர்.
சிறிது தாமதித்து மரியதாசே ஆரம்பித்தார்.
“நானே வரலாம்னு இருந்தேன்!”
“அதுக்குள்ளே மழை அவசரப்பட்டுவிட்டது இல்லே” அவள் வார்த்தைகள் சீவு கத்திபோல் பாய்ந்தன.
மரியதாஸ் அவளை நிமிர்ந்து பார்த்தார். அவளது தாபங்கள் அந்த வைராக்கியத்தில் மறைந்திருந்தாலும் அவருக்கு இனந்தெரிந்தன.
“ரொம்ப அவசரப்படறியே.”ஏன் இன்னும் பதினஞ்சு வருஷம் காத்துக்கினு இருக்கச் சொல்றீங்களா?”
“ரூபி...” அவர் தொண்டை அடைத்துக் கொண்டது.
ரூபி அடக்கி வைத்திருந்த துக்கம் தாளாமல் குமுறினாள்.
“என்னிக்கானாலும் நான் எதிலே சேர்த்தி? நடுவிலே வந்தவதானே. நடுவிலே வந்தவ நடுவாந்தரத்திலே போகணும். நீங்க மதகுருவுக்கு அப்பா, அந்தப் பெருமைக்கே எல்லாத்தையும் கை கழுவிட்டு, பெரிய மனுஷராயிடுவீங்க...”
அவள் ஆத்திரப்படுகிறாள். அது தணியட்டும் என்று காத்திருந்தார் மரியதாஸ்.
“என்னைப் பாக்கறதுக்கே இப்போ உங்களுக்கு அவமானமா இருக்கு? ஏண்டா? இப்படித் தண்டாவிலே மாட்டிக்கிட்டோம்னு தோணுது! எல்லாமே... உங்க பிள்ளை கோவிலுக்கு வந்தப்புறம் தான் நடந்தது இல்லியா - சொல்லுங்க, சொல்லுங்க!”
கண்ணீர் விடாமல், ஏதோ நியாயம் கேட்பவள் போல் கேட்டாள் ரூபி.
“உண்மைதான்” என்று உண்மையை ஒப்புக் கொண்டார்.“ஆனா ஏன் அப்படித் தோணுதுண்ணு ஒனக்குத் தெரியுமா?”
“ஒங்க மகன் கௌரவம் போயிடும்...!”
“இல்லே ரூபி. அவன் வாழ்க்கையைத் தொறந்துட்டு சாமியாரா பாதரா கோவிலுக்குள்ளே இருக்கறப்போ நம்ம மனச்சாட்சி குத்தலியா? கௌரவம் பாதிக்கப்படும்னு சொல்லறது ஒரு பக்கம் இருக்கட்டும். இன்னிக்கில்லேன்னாலும் ஒரு நாள் ஊரே தெரிஞ்ச இந்த சங்கதி அவனுக்குத் தெரிய வந்து, நீயும் நானும் ஒண்ணா கோயிலுக்குப் போயி அவன் கண்ணிலே பட்டா, அது அவனுக்கு என்ன யோசனையைத் தரும்?”
“அவருக்காக நான் எக்கெதி கெட்டாலும் பரவாயில்லே அப்படித்தானே?”
“ரூபி” அவர் குரல் தாழ்ந்தது. “ஒவ்வொரு வயசுக்கு ஒவ்வொரு கொணம். நமக்கும் வயசாயிடலே?”
“மனசுக்கு வயசாகலே"
ஒருமாத காலமாக திருப்பத்தூர் பாதிரி பங்களாவில் தங்கியிருந்தபடி அமெரிக்க கத்தோலிக்க மிஷனால் வழங்கப்படும் கோதுமை, ரவை மற்றும் மதப் பிரச்சார நூல்கள் இவற்றை வினியோகிக்க தினசரி கோவிலூர் வந்து செல்லும் ரெவரண்ட் ஸ்டீபன் பாதிரியார், அவகாசம் கிடைக்கும் அரைமணியில் வீட்டுக்கு வந்து போவார். வாராவாரம் நடத்தும் சர்வீஸஅ தவிர, தினசரி ஊருக்கு வருவதும் அவருக்குப் பிடித்திருந்தது.
அதற்குக் காரணம் தந்தையும் குடும்பத்தினரையும் காண்கிறோமே என்பதல்ல. தான் பிறந்த ஊரில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் ஏராளமாக இருந்ததுதான். ஊரிலிருந்த கிறிஸ்தவ எலிமெண்டரி ஸ்கூலைப் பெரிதுபடுத்தி எட்டாம் வகுப்பு வரை அதை விஸ்தரிக்க அரசாங்க அனுமதி வாங்க வேண்டும்; ஆலயத்தைச் சுற்றி அழகான யூகலிப்டஸ் மரங்களை நிறுவி வளர்க்க வேண்டும்; குழந்தைகள் விளையாட, பெரிய விளையாட்டு மைதானம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று அவருக்கு என்னென்னவோ கனவுகள்.
[தொடரும்]

No comments:

Post a Comment