Thursday, 24 January 2013

எங்கெல்லாம் மணி அடிக்கின்றதோ-2


2
‘எந்தத் துணையை இழக்க முடியாது அவர் உள்ளம் தவிக்கிறதோஎன்று சிரசிற்கும் தோளுக்குமாக சிலுவை இட்டுக் கொண்டார் ஸ்டீபன்.
மனக்குறளி மீண்டும் கை நழுவிற்று.
‘தான் ஏசுவின் தொண்டன். நாசரேத்தில் அன்று அந்த மனுஷகுமாரன் சுமந்த பாவத்தின் சிலுவை தன் வாழ்வின் புனித ஞாபகமாகக் காத்து வருகிறது. எதிர்ப்படும் சலனங்களில் துணையொளியாக நின்று பாதையின் நேர்மைக்குப் பத்திரப்படுத்துகிறது.’
‘ஆனால் மரியதாஸ்.’
‘அப்பாவானாலும் ஆசாபாசங்களின் மத்தியில் வாழும் சராசரி மனிதர்; தன்னை முழுக்க எதனிடமும் அர்ப்பணிக்க இயலாத, துயரமான, இந்த மனித உலகின் ஓர் அங்கம்.’
‘அவருக்கு அம்மாவின் மரணம் என்ன சூன்யத்தை ஏற்படுத்தியிருக்கும்?’
வீட்டைவிட்டுப் போய்ப் பதினைந்து வருடங்களாயிற்று. நடுவில் எப்போதும் அவர் வந்ததில்லை. கடிதங்கள்தான் வரும். அப்பாவிடமிருந்து, தம்பி, தங்கைகளிடமிருந்து, கடிதங்கள் வந்தன. அவற்றிலே வெறிச் சோடிவிட்ட அம்மாவின் ஸ்தானத்தை எவருமே உணர்ந்து வருந்தாதபடி அவர் பூர்த்தி செய்து வருவதை ஸ்டீபன் உணர்ந்தார்.
மடாலய தினங்களில் அம்மா இல்லாமல் அவர் எவ்விதம் வாழ்கிறார் என்று எண்ணி வியப்பார். துக்கங்கள் மறந்து பழகிவிடுவதாகச் சொல்வார்கள். ஸ்டீபனுக்கு அதுசரியில்லை. துக்கங்கள் மறப்பதில்லை. அந்த நஷ்டம் ஈடுசெய்யப்படுகிறது. அவ்விதம் சமன்பாடாகாதவரை எந்தத் துக்கமும் மறப்பதில்லை’ என்றொரு அனுபவ பூர்வமான எண்ணம்.
‘மரியதாஸின் இதயமும் அவ்விதம் எங்கோ ஈடு செய்யப்பட்டிருக்குமோ? இல்லையென்றால் இந்த நிம்மதி... இந்த நம்பிக்கை...’ என்று அவர் சந்தேகப்பட்டார்.
அது உண்மை... உண்மை என்று கண்கூடாக நிரூபிக்கப்பட்டுவிட்டது.
அவரை ஒரு பாவியென்றும் அஞ்ஞானியென்றும் அருவருப்போடு வெறுக்க முடியவில்லை. இந்த ஆரோக்கியமான மனிதருக்கு ஆத்ம விழிப்பு ஏற்பட்டு உண்மையைத் தேடும் காலம் உதிக்கவில்லை என்றே தோன்றியது. விவிலிய நூலிலிருந்து ‘கிடை தவறிய ஆடு’ என்ற கதை ஞாபகமாயிற்று.
மன ஓட்டங்களைக் கட்டுப்படுத்திக் கொள்வதற்காக ஸ்டீபன் முழந்தாளிட்டவாறு கண்களை மூடினார். தாளிட்டவாறு கண்களை மூடினார். பிரார்த்தனைச் சொற்கள் நட்சத்திர ஒளி போன்று, தூரத்து நம்பிக்கையாக நினைவில் ஒலித்தன.
“பரமண்டலத்திலிருக்கிற எங்கள் பிதாவே...”
சலனம் ஒழிந்தது, அந்தரங்க சுத்தியான அந்த பிரார்த்தனை பளிங்கு நீர் போன்று நிரம்பி தேகமெங்கும் பரவுகிறது. ஸ்டீபன் ஆறுதல் ஊட்டும் சத்திய ஒளியை நோக்கி வெகு அருகாமையில் நெருங்குவதாக உணர்ந்தார். மனசிலே சாந்தி, நடுச் சமுத்திரத்தின் ராஜகம்பீரமான சாந்தி.
ஆ! இந்த அனுபவம்!
கண் விழித்ததும் இந்த அனுபவம் எத்தனை புனிதமானது. பந்தமற்று சுதந்திரமாக ஆனால் திக்கெல்லாம் அன்பால் நிரம்பியிருப்பது போன்ற அந்த சாந்தி; அது எத்தகைய ஆனந்தம் என்று நினைத்துக் கொண்டார், சிந்தனை மேலே ஓடிற்று.
இந்த நிலையே மனிதன் அடைய வேண்டிய நிலை. ஆயினும் தவறானவற்றையே அவன் தேடிக் கொண்டிருக்கிறான். குழந்தைகள் மண் பொம்மைகளிலும் வெறும் பாவனைகளிலும் பித்துப் பிடித்திருப்பது போன்று அவனும் இருக்கிறான். இருந்தாலென்ன? கர்த்தரின் ஞானத்தைக் குறித்த ஆர்வம் அவர்களுக்குள் ஆரம்பமாகி விட்டது. பல கட்டங்களைக் கடந்தாயினும் அவர்கள் அதை அடைந்தே தீருவார்கள். இப்போதே அதற்காக அவர்களைக் கோபித்தும் சபித்தும் ஆகப்போவதென்ன?
ஸ்டீபன் அப்பாவை இப்போது தெளிவாகப் புரிந்து கொண்டார். மனசில் விஷமுள்ளாக உறுத்திய வெறுப்பையும் கிள்ளி எறிந்து விட்டு விசாலாமான இதயத்தோடு அவரை மன்னிக்கத் தயாரானார்.
‘எந்தத் துணை இழக்க முடியாது அவர் உள்ளம் தவிக்கிறதோ அது கொச்சையானது. துன்பக் கலப்பானது. அதை அவர் உணரும் காலம் வரும்,அந்தக் காயம் தாமதமாவதற்கு அவர் மீது வைத்திருக்கும் மரியாதையும் அன்பையும் ஏன் பாழாக்கி விடவேண்டும்?
ஸ்டீபன் அமைதியாக சிரசிலும் தோளிலும் சிலுவையிட்டுக் கொண்டு கட்டிலில் படுத்தார்.
கோவிலூரின் ஆலயமணி அடிக்கத் தொடங்கியது. ஸ்டீபன் மகிமைதாஸின் வீட்டை மெழுகி, மெழுகுவர்த்தியை வரிசையாகக் கொளுத்தி வைத்திருந்தார்கள். சர்ச்சுக்குப் போகும்போது எப்போதும் போட்டுக் கொள்ளும் கறுப்புக் கோட்டோடு நாற்காலியில் உட்கார்ந்திருந்தார் மரியதாஸ்.
‘தன்னுடைய மகன் மதகுருவாகி இதே சொந்த ஊரின் சர்ச்சில் பூஜை நடத்தப் போகிறான். இந்தச் சிற்றூரின் ஆசைகளையும் பாபங்களையும், துயர்களையும் முறையீடுகளையும் கர்த்தரிடம் சமர்ப்பிக்கப் போகிறான்! என்ன ஆச்சரியம்! சின்னப்பையனாக அவன் ஓடியாடியது. அப்பாவிடம் குறும்பு செய்தது. அவள் இருந்தால்...?’
பெருமூச்சு விட்டார் மரியதாஸ்.
பாதிரியின் தந்தை. சமூக அந்தஸ்தே கொஞ்சம் உயர்ந்து விட்டதை எண்ணி அவர் முகம் புன்முறுவல் பூத்தது.
“டாடி... போவோமா?” என்று ஸ்டெல்லா புதிய உடையில் அப்பா முன்னால் ஒளிவீச வந்து நின்றாள்.
“ஓ...எஸ்...! எல்லாரும் ரெடியா?”
“எப்பவோ தயார்.”
சிறிது நேரத்தில் உறவினரும் பிள்ளைகளும் தொடர்ந்து வர, தன் பிள்ளைகளும் நடத்தப்போகும் முதலாவது சர்வீஸுக்குப் புறப்பட்டார் மரியதாஸ்.
வாழ்க்கையிலேயே ஒரு முக்கியமான நாளைப் போன்று மனசிலே ஒரு நிறைவு. வழியில் சில முகங்களில் அவரைப் பார்த்தாலும் ஏற்படும் மரியாதை. சிலர் கைநீட்டிப் பேசிக் கொள்வது மெய்சிலிர்த்தது.
கோயிலை நெருங்கி விட்டார். பின்னால் நின்று விட்ட குடும்பத்தினரைப் பார்க்கத் திரும்பியபோது அவள் கண்களில் பட்டாள். மனசில் உருவாகிய பெருமை சற்றே சரிந்த சிறு அவமானம் தலை தூக்கிற்று.
கறுப்புச்சேலை, பளபளவென்று எண்ணெய் மினுமினுக்கும் கருத்த கூந்தல், முகத்தில் வயது தெரியாத ஆரோக்கியம், கவர்ச்சி, பார்வையில் உரிமை கொண்டாடும் ஒரு சந்தேகம். மின்னலைப் போல் அவள் கண் திரும்பினாலும் உதட்டில் சிறு சிரிப்பு, மரியதாஸ் பார்க்கிறார் என்ற நிச்சயத்தில் பிறந்த சிரிப்பு. போன இரவின் ஞாபகத்தை வெளியிடும் துணிச்சலான சிரிப்பு.
சட்டென்று மரியதாஸுக்கு முகம் கறுத்தது. அவள் அவரைத் தாண்டிக் கொண்டு ஆலயத்தில் நுழைந்தாள். உடம்பின் வெப்பமும் வாசனையும் அவர் மீது பட்டு மறைந்தன.
என்னமோ ஒரு அதிருப்தி... தன்னிழிவு... அவள் மீது ஆத்திரம்.[தொடரும்]

No comments:

Post a Comment