Saturday 26 January 2013

பாடிப்பறந்த குயில் -7

7
“கங்கா!” என்று கத்தியவாறே வீட்டை நோக்கி ஓடினான் தியாகராஜன். ஜீவானந்தம் பிரமை பிடித்தவன் போல் நெடுமரமாக நின்றான். அவன் செவிகளையே அவனால் நம்ப முடியவில்லை. நேரமாக ஆகத்தான் அவனால் சுயநிலைக்கு வர முடிந்தது.
கங்கா! அந்தப் பெண் வாழவில்லை. வாழவும் விடவில்லை. என்னாலேயே சிறுகச் சிறுகச் செத்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு இது தண்டனையாக விதிக்கப்பட்டதா?
ஜீவானந்தம் கங்காவின் அழகிய உருவம் சிறுத்தையாமல் சின்னாபின்னாப்படுத்தப்படுத்தப்பட்டதையோ, அவளுக்கு நடந்த ஈமச் சடங்குகளையோ அல்லது அந்தச் சடங்குக்கு வந்த அவள் பெற்றோர், மலைக்கு வந்ததை அறிந்தும் அவர்களையோ பார்க்க அவன் விரும்பவில்லை.
அவனுடைய குடிசையின் கயிற்றுக் கட்டிலில் படுத்துக் கொண்டு அதன் சிறிய ஜன்னல் வழியே தெரியும் காட்டைப் பார்த்தவாறே அவனுடைய வாழ்க்கையைக் கவ்வியிருந்த பேரிருளையும், கங்காவையும் பற்றித் துக்கங்களால் சக்தியிழந்து, உணர்ச்சிகளே மரத்துப்போன மனத்தில் எண்ணிக் கொண்டிருந்தான்.
கங்காவின் இதயத்தில் அவன் மூட்டிவிட்ட அக்கினி, அணையாத காட்டுத் தீயாகிக் கடைசி வரையில் நின்று எரிந்து, உதிர்ந்த சாம்பல் குவியலில் அவள் அணைந்து விட்டாள். எத்தனை புனித அர்த்தத்தில் அவர்கள் உறவு முதன் முதலில் கொழுந்துவிட்டுக் கிளம்பிற்றோ, அந்த அர்த்தமே ஜீவானந்தத்துக்கு இப்போது நினைக்கப் பெரிதும் வருத்தத்தைத் தந்தது.
தியாகராஜன்! அவன்தான் எவ்வளவு பொறுமைசாலி; துப்பாக்கியும் கையுமாகத் திரிபவனாயிருந்தாலும் அவன் உள்ளத்தில்தான் எப்படிப்பட்ட மனிதத்தன்மை நிலவியிருந்தது; கங்கா மாறக்கூடும் என்று அவன் பொறுத்திருந்திருக்கிறான். சன்யாஸியைப் போல் கூடவாழும் ஒரு மனைவியைக் காலம் சிகிச்சைப்படுத்தும் என்பதற்காகச் சகித்து வந்திருக்கிறான். அவன் கேட்ட கேள்விகள், வலுவான இரும்புச் சங்கிலிகளாக ஜீவானந்தத்தைச் சுற்றிப் பிணைத்தன.
‘காதல் என்றும் தெய்வீகம் என்றும் பேசுகிறீர்களே - அதனால் பாதிக்கப்பட்டவர்கள் இப்படித்தான் குரூரமாகத் தண்டிக்கப்பட வேண்டுமா?’
‘இல்லை தியாகராஜன், இல்லை! உங்களைப் போன்ற மனிதர்களும் இந்தப்பூமியில் இருக்கிறார்கள். அவர்களுக்காகவாவது வாழவேண்டும்; அவர்களை வாழ்விக்க வேண்டும்.’
‘மிருதுவான உணர்ச்சிகளும், மாதுரியமான உள்ளமும் படைத்த கங்கா, தியாகராஜனுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கெல்லாம் என்னைக் குற்றவாளியாக்கி விட்டிருக்கிறாளே!’
தலையணையின் மீது முகத்தைப் புதைத்துக் கொண்டு, கண்ணீரும், ஓசையும் வெளியே தெரியாமல் ஜீவானந்தம் அழுதான்.
கங்காவின் உள்ளத்தில் பற்றியிருந்த அக்னி, யாருக்கும் உபயோகப்படாமல் வெறும் உணர்ச்சிகளின் மூர்த்தண்யத்தினாலேயே யாரைக் கையெடுத்துக் கும்பிட வேண்டுமோ அவனைப் பொசுக்கி வந்திருக்கிறது. அவளுடைய காதல் எவ்வளவு மேன்மையானது என்று ஜீவானந்தத்தால் உணரப்பட்டாலும், அதைப் பெருமையோடு அங்கீகரிக்க இயலவில்லை. பெண் வாழ்விப்பவள்தான். தன் உணர்ச்சிகளை, உள்ளத்தை, தன் வாழ்வையே மற்றவர்களை வாழ்விப்பதில்தான் அவள் செலவிடுகிறாள்.
“கங்கா! ஐயோ கங்கா!” ஜீவா அவளுக்காக, அவளுடைய தவறுகளுக்காக வருந்திக் கொண்டான்.
“நான் இங்கிலாந்துக்குப் போவதாக முடிவு செய்து விட்டேன்” என்று தமதுஅறையில் உட்கார்ந்திருந்த அனைவரிடமும் கூறினார் ஜான்ஸன். தியாகராஜன் தெம்பும் சோபையும் இழந்த முகத்தை உயர்த்தி அவரை நிமிர்ந்து பார்த்தான். ஜீவானந்தத்திடம் அவர் இவ்விஷயத்தை ஏற்கனவே சொல்லிவிட்டிருந்ததால் அவன் முகத்தில் எந்தச் சலனமுமில்லை.
ஜக்கோடன் மிகவும் கவலையோடு அவரை நிமிர்ந்து பார்த்தான். எல்லோரையும் ஒருமுறை நிதானமாகப் பார்த்தவாறே, “என் கூடவே என் மகள் நிஷாவும் வருகிறாள்” என்றார் ஜான்ஸன்.
“என்ன?” என்று ஆச்சரியத்தோடு ஜீவானந்தமும் தியாகராஜனும் ஒரே சமயத்தில் கேட்டார்கள்.
“ஆம்! நிஷா என் மகள்தான். இங்கு ஒரு மலைஜாதிப் பெண்ணுக்குப் பிறந்தாலும் அவளுடைய தந்தை நான்தான். ஏற்கனவே சொன்னாற்போல் நான் என் வாழ்நாளில் மேரிக்குச் செய்த இந்தப் பெரிய துரோகத்தையும் அவள் மன்னித்துவிட்டாள். இந்தக் குழந்தையைப் பெற்றுவிட்டு, நிஷாவின் தாய் காலமாகிவிட்டாள். மேரியின் இஷ்டப்பிரகாரம் நான் அந்தப்பெண் குழந்தையை ஜக்கோடனிடம் ஒப்படைத்துவிட்டேன். மேரிக்கு அப்புறம் அவள் இஷ்ட விரோதமாக நான் நடந்துகொள்ளப் பிரியப்படவில்லை. அவள் முழுக்க ஒரு மலைஜாதிப் பெண்ணாகவே வளர்ந்துவிட்டாள். ஆனால், அவளை என் தேசத்தில் நான் சுலபமாகத் திருத்திக் கொள்ளமுடியும். என் கூடவே ஒரு தமிழ் பேசும் மகளை அழைத்துக் கொண்டு நான் தாய்நாட்டுக்குத் திரும்புகிறேன்” என்றார்.
அவருடைய மேன்மை மிக்க பண்பாடும், ஒருமுறை செய்த தவறுக்காக வருந்தும் கழிவிரக்கமும் எல்லோர் நெஞ்சையும் உருக்கிவிட்டன.தியாகராஜன் ஜீவானந்தத்தை ஏறிட்டுப் பார்த்தான். அந்தப் பார்வையின் பொருள் அவனுக்குத் தெரிந்தது.
அந்தக் கள்ளங்கபடமற்ற குழந்தையைத் தான் காதலித்ததாகவும், அவளுடைய இழப்பைத்தான் சகிக்க முடியாதென்றும் தியாகராஜன் கருதுகிறான் என்பதைப் புரிந்து கொண்டான் ஜீவானந்தம். அவளை இழந்துவிட முடியாது என்பது என்னவோ அவனைப் பொறுத்தவரையில் உண்மைதான். ஆனால் தன்னந் தனியான ஜான்ஸனின் வாழ்க்கையில் அவள் ஒருத்திதான் இனி பற்றுக்கோலாக விளங்கப் போகிறாள். சொந்த தேசத்தையும் உற்றார் உறவினர்களையும் பார்க்க விரும்பும் அவர் ஆசைகளைப் பங்கம் செய்து, தன் வாழ்நாளில் ஒருவர் விடாமல் எல்லோருக்கும் துன்பமே அளித்து வந்ததுபோல் அவளுக்கும் ஏன் அளிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவன் தன் நினைவுகளை ஆழ மூடிப் புதைத்துவிட்டான்.
“நீங்கள் புறப்படுகிற வரையில் இங்கே இருந்துவிட்டு நானும்விமானப் படையில் போய்ச் சரணாகதி அடைந்துவிடுகிறேன் ஸார்!” என்றான் ஜீவானந்தம்.அங்கே கூடியிருந்த எல்லோருடைய உள்ளத்திலும் பெரிய புயல் வீசி அடங்கின களைப்புத் தென்பட்டது.
“ரொம்ப சரி! உனக்கு நான் அதையே சொல்லலாம் என்று நினைத்தேன். மை பாய்! இனிமேல் பெரிய விஷயங்களுக்காக ஆசைப்படு” என்று சுருக்கமாக, சொல்ல வேண்டியதைச் சொல்லி முடித்தார் அந்தக் கிழவர். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு, ஜான்ஸனுடைய வீட்டை விட்டு வெளியே வரும்போது, தியாகராஜனின் தோள்களை அன்போடு பற்றிக் கொண்டு ஜீவா கரகரத்த குரலில் பேசலானான்.
“உங்களிடம் நான் மன்னிப்புக் கேட்க வேண்டும், தியாகராஜன். என்னை அறிந்தோ அறியாமலோ உங்கள் வாழ்க்கையில் சண்டமாருதமாக நான் நுழைந்து உங்கள் இன்பங்களையும் நிம்மதிகளையும் சூறையாடியிருக்கிறேன். இந்த இளமைப் பருவத்தில் மூன்று வருஷ காலம் நீங்கள் வெந்து உள்ளுக்குள் சாம்பலாகிக் கொண்டிருந்தீர்கள். காலம் மாறுகிறது. தயவு செய்து என்னை மன்னிக்கிற சமிக்ஞையாகவாவது அதை மாற்றிக் கொள்ளுங்கள். எனக்கு உங்கள் கல்யாணப் பத்திரிகை ஒன்றை அனுப்பி வையுங்கள்” என்று கண்ணீர் மல்க கூறினான் ஜீவானந்தம்.
தன் தோள்களின் மேல் விழுந்திருந்த கைகளை எடுத்து, நன்றியும் துக்கமும் வேதனையும் சூழ்ந்திருந்த இதயத்திலிருந்து கண்ணீரைத் தவிர எந்த வார்த்தைகளும் வராமல் திணறினான் தியாகராஜன். அந்தச் சமயத்தில் அவனைப் பார்க்கையில், ஒரு போர்க்களத்தில் அனேக காயங்களுடன், வீட்டுக்கு நிர்ப்பந்தமாக அனுப்பப்பட்ட ராணுவ வீரனைப் போல் இருந்தது.
அந்த மலையில் - மாயவிக்னேசுவரர் கோவில் அருகில் - மூங்கிற் புதர்களுக்கு மத்தியில் - ரஸ்தாவுக்கு அருகில் போடப்பட்டிருந்த ஜீவானந்தத்தின் சிறுகுடிசையில் அதற்கப்புறம் பழைய சந்தடிகள் இல்லை. நிஷாவின் தண்டைச் சதங்கைகள் குலுங்கும் ஓசையும், ஜீவானந்தத்தின் குளியான குரலும், கிழவர் ஜான்ஸன் மாடுகளை ஏர் உழும்போது மிரட்டும் ஓசையும் நிரந்தரமாகக் கேட்கவில்லை. தியாகராஜன் எப்போதாவது குதிரையின்மேல் போகும்போது, மாய விக்னேசுவரர் கோவில் அருகில் ஒரு பாறை மீது குத்துக்காலிட்டு இரண்டு கைகளாலும் தாடையைத் தாங்கியவாறு உட்கார்ந்திருக்கும் ஜக்கோடனைப் பார்ப்பான். பிரியத்துடன் வளர்த்த பறவை ஒன்று பாடிவிட்டு எங்கோ தொலை தூரத்துக்குச் சென்றுவிட்டதைத் தாங்கமுடியாமல் ஏக்கத்துடன் அவன் அங்கேயே விக்கிரமாகிவிட்டது போலவே, தியாகராஜனுக்குப் பிரமை தட்டும்.
* * *

பாடிப்பறந்த குயில் -6


யாரும் ஒன்றும் பேசவில்லை. வெறும் பேச்சால் பிரதி நிதித்துவப் படுத்த முடியாத உயர்ந்த நினைவுகள் எல்லார் உள்ளத்திலும் இருந்தன.
“நான் உங்களை மிகவும் பாராட்டுகிறேன்” என்று ஆங்கிலத்தில்சிறிய குரலில் கூறினான் தியாகராஜன். சூழ்நிலைக்கு அந்த வார்த்தைகள் வெகு நன்றாக இருந்தன.
பறவைகளின் கூச்சலும், விலங்கினங்களின் ஆரவாரமும் இரவின் அமைதியில் சிறிது நேரத்துக்குள் புதைந்து விட்டன.
மாய விக்னேசுவரர் கோவில் மத்தியான வெய்யிலில், பாரத தேசத்தின் புராதனப் பண்பாடுகளும், தலைமுறை தலைமுறையாகக் காத்து வளர்க்கப்பட்ட புனிதமான தர்மங்களும் தன் மகிமையோடு சிரஞ்சீவியாக நின்று நிலைத்திருப்பது போல் எத்தனையோ வருஷங்களுக்கு முன் கட்டப்பட்டிருந்தும், குலைவுறாமல் கம்பீரமாகப் பிரகாசித்தது. அதைச் சுற்றிலும் ஓடிய அருவி, கற்றுணர்ந்து அடங்கிய ஞானிகள் போல் ஆரவாரமின்றி மெல்ல ஓடிக் கொண்டிருந்தது. ஜீவானந்தம் உயர்ந்த மரம் ஒன்றின் கீழே படுத்துக் கொண்டு யோசனையில் ஆழ்ந்திருந்தான்.
மூங்கில் மரங்களின் இலைகளிலிருந்து வரும் சசலசலவென்ற ரகசியங்களும், வெய்யிலில் சோம்பலோடு காய்ந்தவாறு மந்தமாக வட்டமிட்டுக் கொண்டிருந்த பருந்து ஒன்றும் சூழ்நிலை அழகாக்கின. திடீரென்று வளையல்களின் ஓசை கேட்டது. எழுந்திராமல் கழுத்தை மட்டும் வளைத்துப் பார்த்தான். நிஷாதான் வந்து கொண்டிருந்தாள். அவனுக்கு உடம்பு எரிந்தது.
“ஏய் நிஷா!” என்று அவளை உரக்கக் கூப்பிட்டான்.
அவனைப் பார்த்துக் கொண்டே கலகலவென்று சிரித்தவாறே அவனருகில் வேகமாக ஓடிவந்தாள் நிஷா.
“உட்கார்” என்று உணர்ச்சியின்றிச் சொன்னான் ஜீவானந்தம்.
“முடியாது” என்று வேடிக்கையாக மறுத்தாள் நிஷா.
“வேடிக்கையெல்லாம் வேண்டாம்; உட்கார்” அவன் குரலில் கடுமை ஏறிற்று. நிஷா விழித்தவாறு உட்கார்ந்தாள்.
“உனக்கு வெட்கமிருக்கிறதா? அந்தத் தியாகராஜன் கல்யாணமானவன். அவனுக்கு ஒரு மனைவி இருக்கிறாள். அவனோடு போய்ச் சிரித்துக் கொண்டும் ஆடிக் கொண்டும் இருக்கலாமா?” என்றான் ஜீவா.
“ஏன், என்ன தப்பு?” என்று ஒன்றும் புரியாமல் கேட்டாள் நிஷா.
“அவன் தன் மனைவியை அப்புறம் அடியோடு மறந்து விடுவான். நிஷா, உன்னால் அந்தப் பெண்ணின் வாழ்க்கை பாழாவதென்றால், இதோ ஓடும் இந்த அருவியில் உன் கழுத்தை நெரித்துத் தூக்கிப் போடுவேன்” என்று அநாவசியமாக இரைந்தான் ஜீவா.
நிஷா பயந்து போய் அவன் முகத்தைக் குழந்தைபோல் பார்த்தாள்.
“உன்னைக் குற்றம் சொல்லிப் பயன் இல்லை. அவன் அந்த வெறியனுக்குத் தன் கையிலிருக்கும் பொருளின் மதிப்புத் தெரியாது. அவள் எவ்வளவு நல்ல மனைவியென்று தெரியாமல் முரட்டு ஜன்மம்போல் நடந்து கொள்கிறான். அந்தப் பெண், கொட்டிலில், கட்டிவிட்ட பசுவைப்போல் சாகாமல் செத்துக் கொண்டிருக்கிறாள்.”
“சொன்னதெல்லாம் சரிதான் மிஸ்டர் ஜீவன்! ஆனால் பிற்பகுதிதான் நேர்மாறு” என்று திடீரென்று இடைமறித்தவாறு ஏந்திய துப்பாக்கியோடு எதிரில் வந்து நின்றான் தியாகராஜன்.
ஜீவானந்தம் திடுக்கிட்டுப் போய் எழுந்து உட்கார்ந்தான்.
“ஏன் பயப்படுகிறீர்கள்? உங்களை நான் சுட்டு விடமாட்டேன். நான் நிஷா போவதைப் பார்த்து அவளைத் தேடி வந்தேன். இப்போது சௌகரியமாகப் பேசலாம்” என்று கீழே உட்கார்ந்தான் தியாகராஜன்.
“நீ யாரென்று எனக்குத் தெரியும் ஜீவானந்தம். நீ விமானப்படையிலிருந்து தப்பி ஓடி வந்திருக்கும் ஒரு குற்றவாளி” என்று மரியாதையை விட்டுவிட்டு ஆரம்பித்தான் தியாகராஜன். ஜீவானந்தத்தின் முகம் இருண்டது.
“நீ நினைப்பதுபோல் நான் உன்னைக் கொல்ல மாட்டேன். அது வெகு அற்பமான விஷயம். உன்னைக் கொன்று விடுவதால் மட்டும் என்னுடைய குடும்ப வாழ்க்கையில் எனக்கு ஏற்பட்டிருக்கும் மனவேதனைகள் போய்விடப் போவதில்லை. ராவுஜியின் பெண்ணை - என் கங்காவை - நீ காதலித்தாய். கடைசியில் அவர் அனுமதிக்காததால் பிறகு விமானப் படையில் சேர்ந்துவிட்டாய்... ராவுஜி அவளை என் தலையில் கட்டினார். ஜீவானந்தம்! நீ படித்தவன். உன்னை ஒரு கேள்வி கேட்கிறேன், பதில் சொல்; நீ திருமணம் செய்து கொண்ட ஒரு பெண், கணவனை அடைந்த பிறகும் அவளுடைய பழைய காதலனையே நினைத்துக் கொண்டிருந்தால் உன்னால் சகிக்கமுடியுமா?” என்று இடிபோல் முழங்கினான் தியாகராஜன். அவன் முகம் சிவந்து கண்களும் செம்மையுற்றன.
“சொல்...” என்று அவன் மீண்டும் உறுமியபோது ஜீவானந்தம் தலை குனிந்தான்.
“நீ சகிக்க மாட்டாய். ஆனால் நான் சகித்துக் கொண்டேன். இன்னும் சகித்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் ஒன்று சொல்கிறேன் ஜீவானந்தம்; நான் அந்தப் பெண்ணை நிச்சயித்துக் கொள்ளப் போகுமுன்பே ஊரில் இலேசான வதந்தி எட்டிற்று. நீ வேறு ஜாதி என்பதால் அவர் உனக்கு மறுத்துவிட்டார்; அதற்கு அப்புறம் அவள் தங்கை இருக்கிறாள் என்ற பயம் அவருக்கு என்று எண்ணி உங்கள் காதலுக்காக நான் அவரிடம், ‘உங்கள் இரண்டாவது பெண்ணை நான் திருமணம் செய்து கொள்கிறேன். உங்கள்முதல் பெண்ணை அவள் நேசித்த இளைஞனுக்கே கொடுத்து விடுங்கள்’ என்று கேட்டேன். அப்படி எதுவும் நடக்கவில்லையென்றும், ஊரில் பொறாமையால் அப்படிக் கதை கட்டிவிடுகிறார்கள் என்றும் அவர் சொன்னார். அவர் மிகவும் நல்லவரானபடியால் அவர் வார்த்தைகளை நான் நம்பினேன். ஆனால் திருமணத்துக்குப் பிறகு என் மனைவியின் பெட்டியில் உன் புகைப்படம் ஒன்று கிடைத்தது. நீ ஒரு விமான விபத்தில்சிக்கித் தப்பித்துவிட்ட செய்தி வெளியாகியிருந்த பத்திரிகையையும் அவள் பெட்டியில் கண்டேன். நீ நம்பினால் நம்பு; நம்பாவிட்டால் போ. அவள் என்னிடம் ஒரு சன்யாஸிபோல் நடந்து கொள்கிறாள். இதயமற்ற எந்திரம்போல் அவள் என்னை மௌனமாக உதாசீனப்படுத்துகிறாள்.”
ஜீவானந்தத்தின் முகத்தைப் பார்த்துப் பேசப் பிடிக்காமல் தலைகுனிந்து கொண்டு பேசலானான் தியாகராஜன்.
“என் வாழ்க்கை பாழைந்துவிட்டது. எனக்கிருக்கும் ஒரே சந்தோஷம் வேட்டைதான். நான் பழிவாங்கப்பட்டவன் போல, மிருங்களைக் கொன்று கொன்று குவிப்பதில் ஜான்ஸனோடு காட்டுக்குப் போகிற வரையில் அலாதித் திருப்தி அடைந்து வந்தேன்... ஜீவானந்தம்! காதல் எவ்வளவு உயர்ந்த சங்கதி என்று எனக்குத் தெரியும். ஆனால் வாழ்வின் பல்வேறு உணர்ச்சிகளுள் அதுவும் ஒன்று. அந்த ஒன்றை மட்டுமே வைத்துக் கொண்டுஇந்த மாபெரும் வாழ்க்கை ஸ்தாபிக்கப்பட்டுவிடவில்லை. நிஷாவோடு கொஞ்ச நாட்கள் சிரித்துப் பழகியதற்கே நீ இவ்வளவு அவஸ்தைப்படுகிறாய் என்றால், மூன்று வருஷங்களாக நான் பட்டு வரும் வேதனைகள் எப்படி இருக்கும்?”
“தியாகராஜன்! கங்கா... கங்கா அப்படியா இருக்கிறாள்?” என்று திகைப்போடு கேட்டான் ஜீவா.
“அப்படியேதான் இருக்கிறாள். நீ கொஞ்ச நேரத்துக்கு முன் சொன்னாயே, அவள் எவ்வளவு உயர்ந்த மனைவி என்று. அவ்வளவு உயர்ந்த மனைவியை நான் பூரணமாக அடைய வேண்டும் என்கிற காரணத்துக்காக நான் பொறுமையோடு காத்துக் கொண்டிருக்கிறேன். அன்றயை தினம் காட்டுக்குப் போகும் வரையில் எமனாக வந்திருக்கும் உன்னைச் சுட்டுக் கொன்றுவிடுவது என்றுதான் நான் தீர்மானித்திருந்தேன். அந்தப் பிரிட்டிஷ்காரர் என் கண்ணைத் திறந்துவிட்டார்.என்னோடு வாழ்ந்தவாறே தன்னைக் கொன்று கொண்டிருக்கும் அந்தப் பைத்தியக்காரிக்காக நான் ஒருகொலைகாரனாக மாற விரும்பவில்லை. நீ சொல் ஜீவானந்தம். காதல் என்றும், தெய்வீகம்என்றும் ஓயாமல் நினைத்துக் கொண்டிருக்கிறார்களே - இப்படித்தான் அதனால் பாதிக்கப்பட்டவர்கள் குரூரமாகத் தண்டிக்கப்படவேண்டுமா?” என்று குமுறியவாறே கேட்டான் தியாகராஜன்.
ஜீவானந்தம் ஏதும் சொல்ல முடியாமல் நெற்றியை இரண்டு கைகளாலும் தாங்கிப் பிடித்துக் கொண்டு சித்திரவதையை அனுபவித்துக் கொண்டிருந்தான். தியாகராஜனின் ஒவ்வொரு வார்த்தையும் நொந்துபோன அவன் உள்ளத்தின் ஒவ்வோர் உருக்கமான புகார்களாக ஒன்றன் பின் ஒன்றாக வந்து தாக்கின.
‘கங்கா...! அவள் என்ன கற்சிலையா? உணர்ச்சியும் இல்லற அறிவுமற்ற இவ்வளவு வன்மையான உள்ளம் படைத்தவளா? இதோ, தியாகராஜன் சல்லடைக் கண்களாகத் துளைக்கப்பட்டவன் போல் நிற்கிறான். அவளுக்காக, என் பர்சில் இருந்த அவள் போட்டோவைக் கண்டு சகவிமானி கேட்ட கிண்டலான கேள்வியினால் ஆத்திரப்பட்டு அவனைத் தாக்கினேன். அந்த விபத்து என்னால் நேர்ந்தது. விபத்திலிருந்து மீண்டும் நான் விமானப் படைக்குப் போனால் விசாரணையில் என் குற்றம் ருஜுவாகிவிடுமே என்று தலை மறைந்து திரிகிறேன். கையை விட்டுப் போன பொருளுக்காக அவளும் நானும் எங்களைச் சித்திரவதைப் படுத்திக் கொண்டிருக்கிறோம். கிழவர் ஜான்ஸன் தம் மனைவியைக் கொன்ற புலியை மன்னித்து விட்டுவிட்டார். அதை வைத்து என்னை நினைக்கையில்... சே, என்ன கேவலம்?’
“தியாகராஜன்...! தியாகராஜன்!” என்று ஜான்ஸன் எங்கிருந்தோ கூவி அழைக்கும் குரலும், மலைவாசிகளின் கூச்சலும் அவன் நினைவுகளை அறுத்தெறிந்தன.
“என்ன? என்ன?” என்று பதறினாள் நிஷா.
“இங்கே இருக்கிறேன் ஸார்” என்று கூச்சலிட்டான், தியாகராஜன். மூவரும் பரபரப்போடு அவர் குரல் வந்த திசையை நோக்கி நடந்தார்கள். அவனைத் தேடிக் கொண்டு வந்த கும்பல் அவர்களைச் சந்தித்தது.
“நான் மிகவும் வருத்தப்படுகிறேன், தியாகராஜன்!” என்று சுருங்கிய முகத்தோடு பீடிகை போட்டார் ஜான்ஸன்.
“என்ன ஸார்?”
“உங்கள் மனைவி தண்ணீர் எடுக்க அருவிக்குப் போயிருந்தபோது ஒரு சிறுத்தை அறைந்து கொன்று விட்டது.”

பாடிப்பறந்த குயில்-5

5
மறுநாள் காலையில், தலை ஆற்றிக்கொள்ள மாடிக்கு வந்த கங்கா, மாடிக் கைப்பிடியைப் பற்றிக் கொண்டு அப்படியே நின்றுவிட்டாள். சூர்யோதயமாகி இளங் கிரணங்கள்,சிவந்து நீர் கலங்கிவிட்டிருந்த அவள் கண்களையும், துடி துடிக்கும் செவ்விதழ்களையும் வெகு அனுதாபத்தோடு தழுவின. இளம் வெய்யிலில் பிரகாசிக்கும் அந்தச் சோகத்தைத் தாளமாட்டாமல் ஜீவா தலைகுனிந்து கொண்டான். நேரம் வளர்ந்தது. கங்கா கைப்பிடியைப் பற்றியவாறே நின்று கொண்டிருந்தாள்.
“நேரமாகிறது, உள்ளே போ கங்கா!” என்று குரல் கலங்கச் சொன்னான்.
“ஊம், என்ன செய்யப் போகிறீர்கள்?” என்று கண்களைத் துடைத்தவாறே கேட்டாள்.
“அப்பா பேசினதையெல்லாம் கேட்டாயா?”
“கேட்டுக் கொண்டுதான் இருந்தேன். அவருடைய நியாயம் அவருக்கு. உங்களுக்கும் எனக்கும் எது நியாயம்?”
“கங்கா...” என்று வேகமாகக் கையை நீட்டியவாறு சொல்ல வந்தவன், குளிர்காலத்தில் உறைந்துபோகும் மஹா கங்கை போல் உள்ளம் சாம்பி நிற்கும் கங்காவின் தோற்றத்தைக் கண்டு,தன் வேகத்தைக் கட்டுப்படுத்தியவாறு, “கௌரவம் நிறைந்த ராவுஜியின் மகள் நீ. நித்யா, தாமு, கணேஷ், ராதா ஆகியவர்களுக்கு மூத்தவள். நமது விருப்பங்களை நியாயமாக்க முடியுமா?” என்று உருக்கமாய்க் கேட்டான் ஜீவானந்தம்.
“அப்படியானால் நீங்கள் ஒருபுறமும், நான் ஒருபுறமும் வேதனையால் செத்துக் கொண்டிருக்கலாமா?”
“கங்கா...” வருத்தத்துடன் அவளைத் தடுக்கப் போனான்.
கீழேயிருந்து ராயரம்மாளின் குரல் கூப்பிட்டது. “கங்கா!... அரீ கங்கா!”
“அம்மா கூப்பிடுகிறாள்” என்று அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்துவிட்டுக் கங்கா கீழே இறங்கிப் போய் விட்டாள். மாலையில் அவனுக்கு ராவுஜி வீட்டுக்குப் போகவே விருப்பமில்லை. அங்கே போகும் ஒவ்வொரு நிமிஷமும் கங்காவின் உணர்ச்சிகளையும், தன் உணர்ச்சிகளையும் பரிசோதனைக்குள்ளாக்கிக் கொள்வதாகத்தான் ஆகுமென்று அவனுக்கே தோன்றிற்று. ஆனாலும், ஏழு மணிக்கு ராவுஜியே கூப்பிட்டுக் கொண்டு போக வந்துவிட்டார்.
“என்னய்யா ஜீவு! நேத்திக்கு அவ்வளவு தூரம் சொல்லியனுப்பிச்சேன், இன்னும் இங்கேயே உட்கார்ந்துண்டு இருக்கியே? வா, வா. மாமி வேற காப்பி போட்டு வச்சுட்டுக் காத்துக் கொண்டிருக்கா” என்றார்.
அதை மறுப்பதுதான் தவறாக அவனுக்குத் தோன்றிற்று. வேதனையோடு அவர்கூட நடந்தான்.
“என்னடா ஜீவு! பொண்ணைத் தராத இந்த மனுஷாள் முகத்திலேயே விழிக்கிறதில்லைன்னு தீர்மானம் பண்ணிட்டியா? ஏண்டா கொழந்தே. நீயே ஒதறிட்டாலும் நாங்க சும்மா இருந்துடுவோமா? இந்தா, எங்க மஹாராஷ்டிர பட்சணம் ஸந்தேஷûம், பர்பியும். ஒனக்காக பண்ணியிருக்கிறேன். மாப்பிள்ளை முறுக்கெல்லாம் பண்ணிக்காமே சாப்பிடு. நீ வராமே எங்களவர் சாதகப் பட்சி மாதிரி தவிச்சுப்போயிட்டார். அவரும்தான் தம் பிரதாபத்தையெல்லாம் யாருகிட்டே கொட்டுவார்? நான் பொம்மனாட்டி. அடுப்பங்கரையாச்சு; அண்டைவீடாச்சு. பிள்ளைகளுக்கெல்லாம் அப்பா கதை பிடிக்காது. நீ ஒருத்தன் வசமாகச் சிக்கிட்டிருக்கே. அத்தனை லேசிலே உன்னை விடுவாரா?” என்று சிரிப்பும் குறும்புமாக நிலைமையைச் சுவாதீனப் படுத்தினாள் ராயரம்மாள்.
“அடியே!... அடியே!” என்று சிரித்தவாறு கிழவர் கையை ஓங்கிக் கொண்டு எழுந்தார்.
‘இவர்கள் வீட்டிலிருந்தா - மாறாத பாசமும் அன்பும் நிலவும் இந்த வீட்டிலிருந்தா - கங்காவை இஷ்ட விரோதமாகத் தான் கொண்டுபோக முடியும்?’ நெஞ்சு பொருமிப்பொருமிச் சக்தியிழந்து வந்தது. ராயரம்மாள் காப்பியை வைத்துவிட்டுப் போனாள்.
“என்ன ஜீவு! இதெல்லாம் வாழ்க்கையிலே ரொம்ப சகஜம். இந்த மாதிரி பிரச்னைகள் கூட இல்லேன்னா, அப்புறம் எதுதான் இருக்கு? இதுக்காக மனசு சங்கடப்படப்படாது. விஷயம் இப்படின்னு தெரிஞ்சுக்கிட்டியா - சரி, அதற்கேத்த மாதிரி நடந்துக்கணும். இதை நான் பெரிசா எடுத்துக்காதப்போ நீ ஏன் அவஸ்தைப்படறே?” என்று தெம்பூட்டினார்.
காப்பியைச் சாப்பிட்டானதும், “கங்கா! இந்தப் பாத்திரங்களை வந்து எடுத்துப்போ, அம்மா!” என்று மராட்டியில் கூறினார்.
கங்கா தலைகுனிந்தபடியே பாத்திரங்களை வந்து எடுத்துச் சென்றாள். ராவுஜி அறியாமலா, இல்லை, வேண்டுமென்று தானா இப்படி எல்லாம் அக்னி பரீட்சை செய்கிறார் என்று அவனுக்குத் திகைப்பாக இருந்தது. வெகு நேரம் வரையில் அவனைச் சம்பாஷணையில் சுவாரசியமாக ஈடுபட வைத்துவிட்டுத்தான் அனுப்பினார்.
தினசரி ராவுஜியின் வீட்டுக்குப் போவது தவறவில்லை. ஆனால், இப்போது அவர் அறையோடு சரி. முன்போல் வீட்டுக்குள்ளே நுழைந்து எல்லோரிடமும் கலகலப்பாகப் பேசுவதென்பது அவனாலேயே முடியாமற் போய்விட்டது. ஆனால் காலை வேளைகளில் மாடிச் சந்திப்பு நிகழ்ந்து வந்தது எவ்வளவு துக்கத்தை வெளியிட முடியுமோ, அவ்வளவு கங்கா வெளியிடலானாள். கொஞ்ச நாட்கள் தேற்றிப் பார்த்தாள். தன்னையே ஏமாற்றிக் கொண்டு நியாயம் கூறிப் பார்த்தாள். எல்லாம் வீணானபின், மௌனமாகக் கண்ணீர் விட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்கலானாள். கங்கா திட்டவட்டமாக வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ள முடியாது என்று தெரிவித்தும் விட்டாள். அந்த நேரத்தில் அவனை யாரோ பெண் பார்க்க வந்திருந்தார்கள்.
கங்கா என்ன செய்யப் போகிறாளோ என்று பயந்தவாறேதான் ஜீவா கல்லூரிக்குச் சென்றான். வீடு திரும்பியதும், முகம் கழுவிக் கொண்டு ராவுஜி வீட்டுப் பக்கமாகப் போனான். இன்னும் வந்தவர்கள் போகவில்லை. அன்றிரவு சீக்கிரமாகவே தூங்கிவிட்டான். அவன் மாடியில்தான் படுத்துத் தூங்குவது வழக்கம். ஏதோ ஓர் அகால வேளையில் திடுக்கிட்டு விழித்தான்.
“ஜீவா! ஜீவா...” என்று மிக மெல்லிய குரலில்ஒன்று அவனை அழைத்தது. ஆச்சரியத்துடன் எழுந்து பார்த்தான். நிலவொளி வீசிக் கொண்டிருந்தது. கனவு மோஹினிபோல் தலையில் ஒரு முக்காட்டுடன் அடுத்த மாடியில் கங்கா நின்று கொண்டிருந்தாள்.
“என்ன கங்கா?” என்று கலக்கத்தோடு கேட்டான்.
“கீழே இறங்கி வாருங்கள்” என்றாள்.
ஜீவானந்தம் திகைத்தவாறு ஓசை செய்யாமல் கீழே இறங்கி வந்தான். கையில் ஒரு பையுடன் தயாராகக் காத்திருந்த கங்கா அவன் வந்ததும், கையைப் பிடித்துக் கொண்டு விடுவிடென்று ஒரு கோயில் அருகில்அவனை அழைத்துச் சென்றாள்.
“ஜீவா!” என்று கோயிலை நெருங்கியதும் அவன் தோளின் மீது முகத்தைச் சாய்த்துக் கொண்டு விம்மிவிம்மி அழலானாள்.
“தயவு செய்து, எனக்காக என்ன விஷயம் நடந்ததென்று சொல்லமாட்டாயா? எங்கே? சொல்லு! சொல்லு!” என்று அவள் முகத்தை இரண்டு கரங்களாலும் ஏந்திக் கெஞ்சினாள் ஜீவா.
“என் மனப்பூர்வமாக உங்களுக்கு என்னை ஒப்படைத்து விட்ட பிறகு, அடிக்கடி நடக்கும் இந்தப் பெண் பார்க்கும் நாடகத்தில் நான் நடித்துக்கொண்டே இருக்க வேண்டுமா?”
ஜீவானந்தம் அதற்குப் பதில் சொல்லவில்லை.
“நீங்கள் என்ன பதில் சொல்வதாயிருந்தாலும், நான் மாட்டேன் ஜீவா. போதும் இந்த நரக வேதனை! உங்களையே முழுக்க நம்பிக்கொண்டு புறப்பட்டு வந்துவிட்டேன் வீடு, வாசல், அம்மா, அப்பா, சகோதரிகள் எல்லாரையும் துறந்துவிட்டு, கொண்டுபோய்க் கிணற்றில் தள்ளுவதாயிருந்தாலும் தள்ளிவிடுங்கள். இனி என் மன வேதனைகளை என்னால் சகித்துக் கொண்டிருக்க முடியாது.”
“கங்கா!” என்றான் சற்று உரக்கவே. தூக்கத்தில் நடமாடுபவனை உலுக்கி எழச் செய்வது போல், அவள் தோள்களைப் பற்றி உலுக்கி, “உனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா? உங்க அப்பா என்னை எவ்வளவு நேசிக்கிறார் தெரியுமா? அவர் என்னைக் கேவலமான ஈனப்பிறவியென்று தம் நல்ல உள்ளம் நோகக் காறித் துப்பவேண்டுமா? உன் உணர்ச்சிகளைப் பற்றி நீ பெரிதாக மதிக்கிறாயே ஒழிய, உனக்கப்புறம் நித்யா இருப்பதை அடியோடு மறந்தே போய்விட்டாயா? உன்னைக் கிணற்றில் தள்ளும் அதிகாரமோ, உன்னை எங்காவது அழைத்துக் கொண்டு செல்லும் அதிகாரமோ எனக்குக் கிடையாது. வீட்டுக்குத் திரும்பிப் போய்விடு. ராவுஜியின் மகளா இப்படி என்று எனக்கே மனம் திடுக்கிடுகிறது.”
“ஜீவா! ஐயோ ஜீவா...!” என்று அவன் கைகளைப் பிடித்து அதில் முகத்தைப் பதித்துக் கொண்டு அழுதாள். “நான் உங்கள் சொத்து நீங்கள் என்னை என்னவேணுமானாலும் செய்யலாம்” என்று சிறு குழந்தைபோல் அழுதாள். அவளைச் சமாதானப்படுத்தி, படாத பாடுபட்டு வீட்டுக்குத் திருப்பிக் கூப்பிடு வந்தான். கதவைத் தட்டி ராவுஜியை எழுப்பினான்.
பாதி உறக்கத்தில் என்னமோ ஏதோ என்று அவர் எழுந்து வந்தார். கங்காவோடு உள்ளே நுழைந்து, “ஸார், என்னை மன்னிச்சுடுங்கோ. நான் ஒரு கிராதகன். நீங்க எவ்வளவோ சொல்லியும் வலுக்கட்டாயமாகக் கங்காவை அழைச்சுட்டு ஸ்டேஷன் வரைக்கும் போயிட்டேன். அப்புறமாத்தான் எனக்குப் புத்தி தெளிந்தது. இதோ அழைச்சுட்டு வந்துவிட்டேன். என்னை என்ன பண்றதானாலும் பண்ணுங்கோ” என்றான்.
அவர் கங்காவை உள்ளே அனுப்பிவிட்டு, “ரொம்ப சந்தோஷம் ஜீவு! பொறுப்புணர்ந்த மனுஷனா, கொழந்தையைத் திருப்பி அழைச்சுக்கிட்டு வந்தியே, போதும். இனிமேயும் நான் உன்னோட பழகினா அது எனக்கும் நல்லா இருக்காது; உனக்கும் நல்லா இருக்காது. இதற்கு உன்னைத் தப்பு சொல்றேன்னு அர்த்தமில்லே. வயசு அப்படித்தான். எல்லாத்திலேயும் ஓர் அவசர முடிவு வரும். அது திடீர்னு மாறும். நானும் டிரான்ஸ்ஃபர் போயிடுவேன். அகாலமாகிவிட்டது. போய்த் தூங்கு போ” என்று சுருக்கமாகப் பேசிவிட்டுக் கதவை அடைத்தார். ஜீவானந்தத்துக்கு அந்த வீட்டின் கதவு மட்டுமல்ல, கங்காவின் மனக் கதவும் அடைக்கப்பட்டுவிட்டன. ஆனால் அது அத்தனை சுலபத்தில் அவன் நெஞ்சிலிருந்து மறைவதாயில்லை.
மௌனமாக வீதியில் தலை குனிந்து கொண்டே செல்லும் அவன் இதயத்தில் எப்பேர்ப்பட்ட போராட்டமும் எவ்வளவு காயங்களும் நிரம்பியிருக்கின்றன என்று யாரும் ஊகிக்க மாட்டார்கள். கங்கா அழுது தீர்த்துக் கொள்வாள். ராவுஜி தம்பதிகள் நொந்து தீர்த்துக் கொள்வார்கள். ஆனால் அவன்...?
ராவுஜிக்கு மாற்றல் வரும் வரை கூட அவனால் அங்கு இருக்க முடியவில்லை. ஒரு வாரத்தில் மாமாவிடம் சொல்லிக் கொண்டு படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டுப் புறப்பட்டு விட்டான். ஆனால் கங்கா அவன் நெஞ்சில் சாகவில்லை. ஊழிக் காலத்துக்கும் அணையாத செந்தழலாக, அவன் வாழ்வெங்கும் துக்கத்தினால், எரிந்து கொண்டிருந்தாள்.
காலடியோசைகளும் பேச்சுக் குரல்களும் கேட்டுத் துப்பாக்கியின் மீது கைகளையும், கைகளின் மீது முகத்தையும் ஊன்றிக் கொண்டிருந்த ஜீவா தலையை நிமிர்த்தித் திரும்பினான். சுட்ட மானைத் தோளில் போட்டுக் கொண்டு, ஜக்கோடன் பின்தொடர ஜான்ஸனும் ராஜவேலும் வந்து கொண்டிருந்தார்கள்.
கைக்குட்டையை எடுத்து முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டு, வரவழைத்துக் கொண்ட புன்சிரிப்போடு, ஜீவா எழுந்து அவர்களை நோக்கிச் சென்றான்.
“நிஷா எங்கே சாமி?”
“வெல் மை பாய்... நீ என்ன இங்கே உட்கார்ந்துகிட்டு இருக்கே? அவங்க எல்லாம் எங்கே?” என்றார் ஜான்ஸன்.
“அவன் அவளுக்குத் துப்பாக்கி சுடக் கத்துக் கொடுக்கப் போயிருக்கான்?”
அவன் குரலில் தொனித்த அவமரியாதையைக் கண்டு ஜான்ஸன் விருட்டென்று அவனை ஏறிட்டுப் பார்த்தார்.
“துப்பாக்கி சுடவா? நீங்க ஏன் சாமி அனுப்பிச்சீங்க? அந்தக் களுதையைக் கூட்டிக்கிட்டு வந்ததே தப்பு” என்று பொருமினான் ஜக்கோடன்.
“இரு இரு, ஜக்கோடா! அவள் துப்பாக்கி சுடக் கத்துக்கறதிலே என்ன தப்பு?” என்று அவனை அடக்கினார் ஜான்ஸன்.
ஜக்கோடன் குண்டுபட்டு, மருண்ட கண்கள் அச்சத்தால் நிலைகுத்தி நின்றுவிட்டிருக்க மாண்டுபோயிருந்த மானைக் கீழே இறக்கினான்.
“சாமி! நான் போயி அவளை இழுத்துக்கிட்டு வர்றேன்” என்று முன்னால் போன ஜக்கோடனை நிறுத்தி, “அவங்களை எங்கே போய்த் தேடுவே? இதோ ஒரு குண்டு சுடுவோம். அப்ப அவங்க புரிஞ்சுக்கிடுவாங்க” என்று துப்பாக்கியை உயர்த்தி ஒரு வேட்டு போட்டார் ஜான்ஸன். காடு அதிர்ந்தது.
சிறிது நேரத்தில் நிஷாவும் தியாகராஜனும் சிரித்தவாறே வந்து சேர்ந்தார்கள். அவர்களைச் சேர்த்துப் பார்க்கப் பார்க்க ஜீவாவின் உடம்பு பற்றி எரிந்தது. அவர்கள் இருவருக்கும் பின்னால் தியாகராஜன் வீட்டில், ஏக்கம் நிறைந்த முகத்தோடு கண்ட கங்காவின் இரண்டு பெரிய கண்ணீர்த் துளிகள் தெரிவது போல் அவனுக்குத் தோன்றியது. ஒரு வரையறையில்லாத முரடனிடம் கங்காவை ஒப்படைத்து விட்டிருக்கிறாரே அவள் தந்தை என்று உள்ளம் கொதித்தது. அவன் ஏதாவது பேசவும் பயந்தான். அந்தப் பேச்சு அவனை உஷ்ணப்படுத்தி விபரீதமான காரியங்களில் இறக்கி விடக் கூடும் என்பதே அதன் காரணம். சாப்பாட்டிலும் கலகலப்பான பேச்சுக்களிலும் காலம் கழிவதே தெரியாமல் மாலை மங்கிவிட்டது.
“எஸ்; பரணெல்லாம் தயார்தானே, ஜக்கோடன்?” என்றார் ஜான்ஸன். நிஷாவுக்கு இப்போதுதான் சற்றுப் பயம் தட்ட ஆரம்பித்தது. மிருங்களில் மோசமானதும் குரூர புத்தி வாய்ந்ததுமான சிறுத்தை வேட்டைக்கு அது ஒரு பீடிகை என்று அவளுக்குள் உணர்வு பாய்ந்து உடம்பு குளிர்ந்தது.
“எல்லாம் தயார் சாமி!” என்றான் ஜக்கோடன்.
சிறுத்தை தண்ணீர் குடிக்க வரும் ஒரு துறைக்குச் சற்றுத் தூரத்தில் ஓர் அடர்ந்த மரத்தில் சௌகரியமாகப் பரண் அமைக்கப்பட்டிருந்தது.
“நிஷா! ஒண்ணும் பேசக்கூடாது. இருமக் கூடாது. தும்மக்கூடாது. ஏதாவது பண்ணினால் உயிருக்கே ஆபத்து. ஜாக்கிரதை!” என்று அவளைத் தாழ்ந்த குரலில் எச்சரிக்கை செய்துவிட்டுப் பரணின் மேல் சாத்தியிருந்த ஏணியில் ஏறத் தொடங்கினார் ஜான்ஸன். ஒருவர் பின் ஒருவராக மௌனமாக ஏணியின் மீது ஏறினார்கள். நிஷாவுக்கு முன்னால் பரணில் ஏறிவிட்ட தியாகராஜன், நிஷா ஏறும்போது அவளுக்குக் கைகொடுத்துத் தூக்கி விட்டான். ஜீவாவின் முகம் வெறுப்பினால் கறுத்தது.
அனைவரும் அமைதியாக, இலேசான சுவாச ஓசை மட்டும் கேட்கப் பரணின் மீது படுத்திருந்தார்கள். காட்டில் ஏற்படும் சின்னஞ்சிறு சருகோசைகள், சிட்டுக் குருவிகள் ‘விர்’ரென்று சிறகடித்துச் செல்லும் ஓசை, காட்டுக் குயில்கள் எப்போதாவது இடைவிட்டு, இடைவிட்டுக் கூவும் குரல் எல்லாம் அவர்களைச் சிலிர்க்க வைத்தன. மரணச் சாயையின் மகாமௌனம் அங்கே பரிபூரணமாக நிலவியது.
சீக்கிரத்தில் சந்திரோதயமானதால், காட்டில் பளிங்கு போன்ற இள நிலவின் தண்ணொளி பரவியது. நீல விளக்கால் அக்கானகம் அலங்கரிக்கப்பட்டது போல் ஒரு விசேஷமான அழகு சுற்றிலும் சோபித்தது. ஐந்து துப்பாக்கி முனைகள் ஐந்து வெவ்வேறு திசைகளில் குறி பார்த்தன. மருள மருள விழித்தவாறு நிஷா படுத்துக் கொண்டிருந்தாள். அவளுடைய இதயத் துடிப்பு அதிகரித்தது, அவளுடைய மார்பு விம்மி விம்மித் தாழ்வதிலிருந்து தெரிந்தது. நீண்ட நேரமாக அவ்விதம் காத்துக் கொண்டிருந்தார்கள். திடீரென்று காட்டில் இயற்கைக்கு மாறான ஒரு சலசலப்பு ஏற்பட்டது. சிறுத்தை தண்ணீர் குடிக்கும் துறையை நோக்கித் துப்பாக்கியைக் குறி வைத்துக் கொண்டிருந்த ஜான்ஸனின் கண்களில் நீண்ட பளபளப்பான ஓர் உடல் கறுப்பு வரிகளும், மஞ்சள் பட்டைகளும் தெரிய நெளிந்தது தெரிந்தது. அவருடைய பிடி இறுகியது. குறி பார்க்கும் துவாரத்தில் அவருடைய கூர்மையான கண் உஷாராயிற்று.
“அப்பா! அப்பா...! தொறவுக்குப் புலி வந்திருக்குது!”
என்று சிறு குரலில் நிஷா அப்பாவிடம் சொல்லி விட்டாள்.
“உஸ்!” என்று யாரோ எச்சரித்தார்கள்.
“அசைய வேண்டாம்!” என்று எல்லோருக்கும் ஜான்ஸன் எச்சரித்தார். தியாகராஜன் வேட்டை வெறியனாதால் அவனுடைய துப்பாக்கி மட்டும் மிக மெதுவாகத் துறையை நோக்கித் திரும்பியது. அந்தச் சிறிய ஓசைகளையே சந்தேகப்படுவதுபோல் அந்தப் புலி - ஆம், அது சிறுத்தையல்ல - மெதுவாகத் தலையைத் தூக்கிப் பார்த்தது. கண்கள் அக்கினிக் கொழுந்து போல் செஞ்சுடர் வீசின எதிர்ப்புறத்திலிருந்த பிரதேசத்தின் ஆத்மாவையே துருவிப் பார்ப்பது போல் வெகு பயங்கரமான பார்வை! நிலவொளியில் அதன் உடல் நன்கு தெரிந்தது. சவுக்கு போன்ற நீளமும் லாவகமும் வாய்ந்த அழகான புலி அது. வயதாகி விட்டது என்று சற்று வளைத்தபோதுதான் அதற்குள் ஒரு விசேஷ அடையாளம் தெரிந்தது. எல்லாப் புலிகளுக்கும் போல் அல்லாது, கழுத்திலிருந்து முன் முதுகு வரை அதற்குக் கறுப்பு வரிகளே இல்லை.
“ஹா!” என்று ஏதோ உணர்ச்சி வசப்பட்டவர் போல் ஜான்ஸன் கிசுகிசுத்தார்.
தியாகராஜன் சட்டென்று துப்பாக்கியை உயர்த்தினான்.
“நோ... நோ... நாட் நௌ!” என்று தம்மைச் சமாளித்துக் கொண்டு அவனைக் கடுமையாக எச்சரித்தார் ஜான்ஸன்.
புலி சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு மெல்ல உறுமியவாறே முன்னங் கால்களைச் சௌகரியமாக இரண்டு பாறைகளின் மீது ஊன்றிக் கொண்டு தலையை வளைத்து, உறுஞ்சி உறிஞ்சித் தண்ணீர் பருகலாயிற்று. நேரம் மரணப்பளுவோடு தள்ளாடிக் கொண்டு கழிந்தது. ஜான்ஸன் குறி வைத்து டிரிக்கரை (விசையை) அழுத்த முயலும்போது இன்னொரு புலி அதைத் தொடர்ந்து உடலைக் கம்பீரமாக வளைத்தவாறு புதர் மறைவிலிருந்து வெளிப்பட்டது.
தியாகராஜன் மீண்டும் துப்பாக்கியை உயர்த்தினான்.
“தியாகராஜன்! நான் உங்களை எச்சரிக்கிறேன்! அந்தப் புலிக்காக இருபது வருஷங்கள் காத்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் அதைச் சுட முயன்றால் ஒரு நாயைச் சுடுவதுபோல் உங்களைச் சுட்டுக் கொல்லுவேன்...” என்று வெறி பிடித்தவர்போல் ரத்தம் உறைந்துபோகும் மெல்லிய குரலில் எச்சரித்தார், ஜான்ஸன். அவர் அதைச் செய்வார் என்று அந்தக் குரல் தாட்சண்யமின்றித் தெரிவித்தது. தனது உடலில் பொங்கிய ஆத்திரத்தைப் புத்திசாலித்தனமாகக் கட்டுப்படுத்திக் கொண்டு தியாகராஜன் துப்பாக்கியைத் திருப்பிக் கொண்டான்.
நிஷா மிகவும் பயந்துவிட்டாள். ஜான்ஸனுடைய கோபத்தை அவள் இதுவரை கண்டதேயில்லை. எதிரில் புலி உலாவுவதைவிட அதிகமாக அவருடைய கோபாக்கினி வீசும் முகம் அவளுக்குக் கிலி ஊட்டியது.
தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கும் புலிக்கு அருகில் சென்று தானும் தண்ணீர் பருக ஆரம்பித்தது புதிய புலி. சிறிது நேரம் சென்றதும் தண்ணீர் குடிப்பதை நிறுத்திவிட்டு முதலில் வந்த பெண் புலியின் உடலை நக்கிக் கொடுக்கத் தொடங்கிற்று. பெண் புலியும் தண்ணீர் பருகுவதை நிறுத்திவிட்டுத் திரும்பி ஒரு வீட்டு நாய்போலக் கழுத்தை இசைவாக அதற்குக் காட்டிற்று. அதன் கழுத்தையும் முகத்தையும் நாவால் நக்கிக் கொடுத்தது ஆண் புலி.
நிலவொளி வீசும் அந்த முன்னிரவில், அடர்ந்த கானகத்தில் வெறும் விலங்குகளின் மிருக உணர்ச்சிபோல் அந்த நிகழ்ச்சி தோன்றவில்லை. யுக யுகாந்திரங்களாக, அன்பும் பாசமும் தழுவிக்கொள்ள, ஜீவராசிகள் மன லயிப்போடு நடத்தி வரும் முடிவற்ற காதல் நாடகமாகவே அது தென்பட்டது. சிற்றலைகளால் மெல்ல சப்திக்கும் அந்த நீர்த்துறையின் அருகில், அந்த வயோதிகத் தம்பதிகளின் சரசம் வெகு அழகாக இருந்தது. புதிய மேகங்களும், புதிய பறவைகளும் ஜான்ஸனின் மன வானில் பறந்தன. அவர் துப்பாக்கியைத் தாழ்த்தி, கண்களில் மளமளவென்று நீர் வழிய, இமைகளைச் சிமிட்டிச் சிமிட்டி மங்கும் கண்களைத் தெளிவாக்கியவாறே, எல்லோரும் மூச்சையும் அடக்கிக் கொண்டு காத்திருக்கும் அந்த அவ்வேளையில் முழு மனித உணர்ச்சியோடு அதை ரசித்துக் கொண்டிருந்தார். இளந்தம்பதிகள் போல் அந்தப் புலிகள் கட்டிப் புரண்டு விளையாடின.
“அவைகளைச் சுடுங்கள், மிஸ்டர் ஜான்ஸன்! சுடுங்கள்!” என்று வேட்டை வெறியோடு கிசுகிசுத்தான் தியாகராஜன்.
“சுடுங்கள், சார்! இன்னுமேன் தாமதம்?” என்று ஜீவாவின் குரல் பின்னாலிருந்து வந்தது.
நிஷா மெதுவாகக் கையை நீட்டி ஜான்ஸனின் முதுகைத் தொட்டாள். அவள் விரல்கள் நடுங்குவதை அவர் அறிந்தார். ஆனாலும் தாழ்த்திய துப்பாக்கியை உயர்த்தவில்லை.
“நான் கெஞ்சுகிறேன் மிஸ்டர் ஜான்ஸன்” என்று கூறியவாறே அதற்கு மேலும் தாளமாட்டாதவன் போல் துப்பாக்கியை உயர்த்தி “டிரிக்கரை’த் தள்ளினான். தியாகராஜன். சட்டென்று தம் துப்பாக்கியால் அந்தக் குறியைத் தடுத்து வேகத்தோடு அவனுடைய துப்பாக்கியை மேலே உயர்த்தினார் ஜான்ஸன். சீறிக் கொண்டு ஒரு குண்டு கிளம்பி ஏதோ ஒரு மரத்தின் உச்சியில் வெடித்தது. கீச்கீச்சென்று பறவைகளின் பெரிய ஓலமும், குண்டின் எதிரொலியும் வெகு பயங்கரமாகக் கிளம்பின.
உஷார் அடைந்த புலிகள் ‘உர்’ரென்று உறுமியவாறே குண்டு வந்த திசையை நோக்கிப் பாய்ச்சல் நோக்கில் தயாராக நின்றன. சட்டென்று துப்பாக்கியை தூக்கி நீலவானத்தில் இரண்டு முறை சுட்டு வேட்டுக் கிளப்பினார் ஜான்ஸன். பளிச்சென்று திரும்பி மின்னல் போலத் துள்ளிப் புதருக்குள் பாய்ந்தோடிவிட்டன. அந்தப் புலிகள். காட்டில் சிறிய மிருகங்களின் அச்சக் கூக்குரலும், பறவைகளின் சோகமான முறையீடுகளும் ஓயாத அலைபோல் ‘ஓ’வென்று கேட்டுக் கொண்டிருந்தன.
“இது என்ன மடத்தனம்?” என்று கத்தினான் தியாகராஜன்.
“என்ன சார், வேண்டுமென்றா விட்டுவிட்டீர்கள்?” என்று ஆச்சரியத்தோடு ஜீவானந்தம் கேட்டான்.
“என்னாங்க, தொரை! உங்க குறி எப்பேர்ப்பட்டது! உங்களுக்கா தப்பிச்சுக்கிச்சு?” என்று விஷயம் தெரியாமல் அங்கலாய்த்துக் கொண்டான் ஜக்கோடன்
எல்லாவற்றுக்கும் மௌனமாக இருந்த ஜான்ஸன், முகத்தில் பூத்திருந்த வேர்வையை ஒரு கைக்குட்டையால் சாவதானமாகத் துடைத்தவாறு பைப்பை எடுத்துத் தீக்குச்சியினால் பற்றவைத்துக் கொண்டு பேசலானார்.
“முதலில் உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன், மிஸ்டர் தியாகராஜன்!” என்று தம் கையில் இருந்த துப்பாக்கியைத் தோளில் சாத்திக் கொண்டு தியாகராஜனுடைய துப்பாக்கி பிடித்த கையைத் தமது பெரிய கைகளால் பற்றிக் கொண்டு உலுக்கினார். பரண் கிறீச்சிட்டு மெல்ல அதிர்ந்தது. வயதான அந்தப் பெரியவரின் பணிவைக் கண்டு, தன் உணர்ச்சிகளை மறந்த தியாகராஜன், அந்தக் கைகளை இடது கையால் பிடித்துக் கொண்டான்.
“நான் மிகவும் வருந்துகிறேன், மிஸ்டர் தியாகராஜன். அந்தப் பெண் புலியைப் பார்த்ததும் எனக்கு வெறி பிடித்து விட்டது. அதற்காகத்தான் நான் தேசத்தை விட்டு, உற்றார் உறவினர்களையெல்லாம் விட்டுவிட்டு இருபது வருஷங்கள் இந்த மலைப் பிராந்தியத்திலே காத்துக் கொண்டிருந்தேன்” என்று மேலே பறந்து கொண்டிருந்த பறவைகளைப் பார்ப்பது போல உணர்ச்சிகளைச் சமாளித்தார் ஜான்ஸன்.
“அப்படின்னா...?” என்று ஜக்கோடன் இழுத்தான்.
“ஆம், ஜக்கோடன், அதுதான் என் மனைவி மேரியை அடித்துக் கொன்றது. நான் அதனால்தான் இங்கே தாமதித்துவிட்டேன். என் இளமைப் பிராயமெல்லாம் என்னோடு அருமையான சாந்தியையும் தேடித் தந்த மேரியை அது வீடுபுகுந்து அடித்துக் கொன்றது. அதுவே ஒரு மனிதனாக இருந்தால், அவன் எந்தக் கண்டத்துக்கு ஓடியிருந்தாலும் நான் அவனை விட்டிருக்கமாட்டேன். நான் கொலை வெறிபிடித்து அலையவில்லை. என் மேரியின் மேல் நான் வைத்திருந்த அன்பு அத்தனை பரிபூரணமானது. உணர்ச்சி வசத்தினால் அவளுக்கே துரோகம் செய்யக்கூடிய அவமானகரமான காரியம் ஒன்றில் நான் ஈடுபட்டும் கூட, என்னை வாய் பேசாமல் மன்னித்து அவள் ஏற்றுக் கொண்டாள். அவள் விவாகரத்து செய்துவிட்டு பிரிட்டனுக்குக்கூடப் போயிருக்கலாம். அவள் ஒரு தேவமகள் - அப்படிச் செய்யவில்லை. அப்படிப்பட்ட சொத்தை நான் இழந்தேன். இருபது வருஷ காலமாக அவளை அடித்துக் கொன்ற புலியை நான் இந்தக் காட்டின் ஒவ்வொரு மூலை மூடுக்கிலும் தேடினேன் - அதைத் துடிக்கத்துடிக்கச் சுட்டுக் கொல்லவேண்டும் என்று. என் நரம்புகளெல்லாம் கொதித்தன. நாளாக நாளாகத் தனிமையும் பைபிளும் என்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு வந்தன. அதன் அடையாளத்தைப் பற்றி சம்பவம் நடந்தபோது பார்த்தவர்கள் சொன்னார்கள். இன்று அதையே, என் வாழ்நாட்களையெல்லாம் பாலைவனமாக்கிவிட்டு ஒரு நாடோடிப் பிரயாணிபோல் அலையவிட்ட அந்தப் புலியையே பார்த்தேன். ஆனால் காலம் மாறிவிட்டது” என்று ஜான்ஸன் யோசனை லயிப்பில் சற்று நிறுத்தினார்.
“அந்தப் புலியும் என்னைப்போலவே வயோதிகம் அடைந்துவிட்டது. மேலும் அதன் ஆண் புலியும் கூட வந்திருந்தது. எந்தப் பிரிவை நான் இப்போது சகித்துக் கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறேனோ, அதை பிரிவைச் சதா உறுமியவாறு சாகும் வரையில் அந்த ஆண் புலியின் மேல் சுமத்த நான் அனுமதிக்கப்படவில்லை. நான் ஒரு உண்மையான கிறிஸ்தவன்; ஒரு கன்னத்தில் அடிவாங்கி விட்டு, மறு கன்னத்தைக் காட்டக் கடமைப்பட்டவன். இந்த வயதான காலத்தில் ஒரு கோழையைப் போல் அந்தப் புலியை வஞ்சம் தீர்த்துக் கொள்ள விரும்பவில்லை. அது கேவலம் மிருகம்; நான் இதயமுள்ள ஒரு மனிதன். என்னிடம் நியாயமாகக் கர்த்தரால் எது எதிர்பார்க்கப்படுமோ அவ்விதம் நான் நடந்து கொண்டேன்” என்று நிறுத்தினார் ஜான்ஸன்.
“ஸார்...” என்று உணர்ச்சி வசப்பட்டு அவரது பெரிய தோளில் கையை வைத்தான் ஜீவானந்தம்.
“உண்மையிலேயே, மேரியின் மீது நான் வைத்திருந்த அன்பை உங்களுக்கு என்னால் விளக்க முடியாது. அப்படியே சிரமப்பட்டு நான் விளக்கினாலும் அதை நீங்கள் நம்புவது கஷ்டம். இயற்கையின் பொது விதிகள் எனக்கும் அந்தப் புலிக்கும் ஒன்றுதானே மிஸ்டர் ஜீவா?” என்று கேட்டார் ஜான்ஸன்.
[தொடரும்]

பாடிப்பறந்த குயில் -4

4
ஜீவாவுக்கும் அப்புறம்தான் வேறு நினைவுகள் வந்தன. ‘என்னடா இது, அசடன் மாதிரி வெறிக்க வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டோமே! அந்தப் பெண் என்ன நினைத்தாளோ?’ என்று வருந்தினான். ஆனால் அன்று காலையில் அவனது ஒவ்வொரு நடவடிக்கையிலும் ஒரு புத்துணர்ச்சி பாய்ந்திருந்தது. விடிகாலையில் கண்ட அந்த நேர்த்தியான சித்திரம், அன்றையத் தினத்தின் அனேக அலுவல்களுக்கிடையில் அடிக்கடி ஞாபகம் வந்தது.
மறுநாள் காலையில் அவள் அங்கு வரக்கூடும்என்று எதிர்பார்த்தான். மாறாக, கல்லூரிக்குப் போவதற்காக அவன் புறப்பட்டபோது வீதியில் அவளைக் கண்டான். கையில் புத்தகங்களை அடுக்கியவாறு, பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தாள். அடக்கமான, பெருமிதம் கலந்த தளிர்நடையும், சற்றே தாழ்ந்த முகமாக அவளைப் பார்க்கப் பார்க்க ஜீவாவுக்கு முந்தின நாள்காலையின் ஆச்சரியம் சற்றும் மாறவில்லை. நிதானமான நடையோடு அவன் பஸ் ஸ்டாண்டை அடையும்போது அவள் அவனைக் கடந்தாள். நினைவில் கல்வெட்டுப் போல் அந்த முகமும் நடையும் பதிவாகிவிட்டன.
அவர்களுக்குள் ஒருவர் இதயத்தின் பாஷை எப்படி மற்றவரால் புரிந்து கொள்ளப்பட்டது என்று இருவருக்குமே தெரியாது. சிறிது நாட்களில் பார்வையிலும், உதடுகளிலும் ஒரு சௌஜன்யம் நிலவத் தொடங்கியது. ஜீவானந்தம் இளமையின் வசந்த வேளையில் இருந்தாலும் அவனுக்கு மற்றவர்களைப் போல் அனாவசியமான மனக் கிளர்ச்சிகள் ஏற்பட்டதில்லை. அநாதையாக மாமா வீட்டில் தங்கிப்படிக்கிறோம் என்ற எண்ணமும், வாழ்க்கையில் முன்னுக்கு வர வேண்டும் என்ற உள்ளத் தீயும் அதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். பக்கத்து வீட்டில் குடி வந்திருக்கும் யுவதியின் பெருந்தன்மையான தோற்றமும், அருளும் மனத்தின் பிரகாசம் கலந்த புன்னகையும், அவனையறியாமல் அவன் வாழ்வில் ஒரு புது விறுவிறுப்பை ஏற்படுத்தின.
அதிகாலை நேரத்தில் படிப்பதற்காக அவன் புத்தகத்தை விரித்துக் கொண்டு உட்காரும்போது, தலைக்குக் குளித்துவிட்டு அவள் தலையை ஆற்றிக் கொள்ள வருவது நித்திய நிகழ்ச்சியாயிற்று. அவர்கள் மத்தியில் சம்பாஷணை இல்லை. ஏன், இருவர் குரலுமே இருவருக்கும் சரியாகத் தெரியாது. யாராவது கீழே இருந்து கூப்பிட்டால்‘இதோ வர்றேன்’ என்று அவள் போவாள். வெளியில் வீதியில் எப்போதாவது ஓரிரண்டு வார்த்தைகளை அவன் யாரோடாவது பேசும்போது அவள் கேட்டிருப்பாள்.
இரண்டு கஜ தூரத்தில் அவர்கள் நெஞ்சின் ஆசைகள் வளர்ந்தன. வெறும்பார்வையிலும், கண்ணியமான சிரிப்புக்களிலும் ஒப்பற்றதும் சத்தியமானதுமான பிரேமை ஆடம்பரமின்றி வளர்ந்து வந்தது. பின்னால் பேச்சுவாக்கில் அத்தை மூலமாக அவளைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொண்டான் ஜீவானந்தம். அவள் மஹாராஷ்டிரக் குடும்பத்தைச் சேர்ந்தவள். அவளுடைய அப்பா ஒரு சப்-ரிஜிஸ்டிரார். மிகவும் நல்லவராம். அவள் பெயர் கங்கா. பெயரைக் கேட்டதும் ஜீவானந்தம் திடுக்கிட்டான். அவளைக் கண்ட முதல் சந்தர்ப்பத்தில் அவளுடைய அழகும் பெருந்தன்மையும் எந்தத் தொனியில் அவன் நெஞ்சில் அலை எழுப்பினவோ அதற்கு ஒத்தாற் போலவே அவள் பெயரும் கங்காதான் என்று கேள்விப்பட்டது அவனுக்கு ஆச்சரியத்தை உண்டு பண்ணிற்று. கங்காவுக்கு அப்புறம் நித்யா என்றும், ராதா என்றும் இரண்டு சகோதரிகள் இருப்பதாகவும், இரண்டு பிள்ளைகள் படிப்பதாகவும் அறிந்து கொண்டான்.
விடுமுறை நாட்களில் தென்னந்தோப்புக்கள் அடர்ந்த பாலாற்று மணலில் படிக்கப் போகிறவன் இப்போது மாடியிலேயே விழுந்து கிடந்தான். அவளும் கீழே உள்ள குழந்தைகள் கூச்சலுக்காக, மேலே படிக்க வருவாள். இருவரும் முழுக்க ஒரு பக்கம் படிக்கமாட்டார்கள். அதற்குள் நிமிர்ந்து பார்ப்பார்கள். ஜீவானந்தம் பார்ப்பதையறிந்து வெட்கத்துடன் இங்கிதமான புன்முறுவல் மலர, கங்கா தலையைக் கவிழ்த்துக் கொள்வாள். ஜீவாவும் தன் அடக்கமின்மைக்காக லஜ்ஜையடைந்து புத்தகத்தில் மனத்தைப் பதியவைப்பான். எதுவும் அதிக நேரம் நிற்காது. பளபளவென்று பளிங்கு போல் மின்னும் கங்காவின் கருவிழிகளில் எழுதிக் காட்டப்படும் அவளுடைய மன உணர்ச்சிகளை அலுக்காமல் ஜீவா பார்த்துக் கொண்டிருப்பான்.
இந்த நிலை அதிக நாட்கள் நீடிக்கவில்லை. மணிக்கூண்டு சம்பவத்துக்கு அப்புறம் கங்காவின் வீட்டுக்குச் சென்று படிக்கவும், போக வரவும் சந்தர்ப்பம் வாய்த்துவிட்டது. அன்று காலை காலேஜுக்குப் போக பஸ்ஸை எதிர்பார்த்துக் கொண்டு ஜீவா நின்று கொண்டிருந்தான். ஏனோ கங்கா அன்று தாமதித்து வந்தாள். பஸ் ஸ்டாண்டுக்குள் இருக்கும் மணிக்கூண்டில் மணி பார்க்கிற சாக்கில் ஜீவாவைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே நடந்தாள். இடப்புறம் வந்த பஸ்ஸை அவள் கவனிக்கவில்லை. எதிரில் வந்த சைக்கிளைத் தான் கண்டாள். அதற்கு வழிவிட ஒதுங்கியபோது, பின்னால் ஹார்ன் ஓசை கேட்டது. திகைத்துத் தடுமாறினாள். அதற்குள் சைக்கிள்காரன் பிரேக் பிடிக்க முடியாமல், வந்த வேகத்திலேயே அவள் மீது மோதிவிட்டான். கங்கா தடுமாறிக் கீழே விழுந்துவிட்டாள். நடுச்சாலையில் புத்தகங்கள் சிதறின. அவள் புத்தகத்தை எடுப்பதற்குள், தன் பேரில் தப்பு வராமல் இருக்க சைக்கிள்காரன் ‘கன்னா பின்னா’ வென்று பேச ஆரம்பித்துவிட்டான்.
“ஏம்மா, கண்ணு தெரியல்லே? நான்தான் எதிரிலேயே மணி அடிச்சுக்கிட்டு வர்றேன். நீ நடு ரோட்டிலே டான்ஸ் ஆடிக்கிணு இப்படியும் அப்படியும் நடக்கிறயே! ஒரு ஓரமாப் போவறதுதானே?” என்று இஷ்டம்போல் பேசிக் கொண்டே போனான்.
ஜீவானந்தம் அவசரமாக அங்கே போனான். கங்கா தலைகுனிந்து கொண்டு புத்தகங்கள் எடுத்துக் கொண்டிருந்தாள். கண்களில் நீர் கலங்கிவிட்டது என்று உதடுகள் துடிப்பதிலேயே தெரிந்தது.
“யோவ், யாரய்யா காட்டானா இருக்கிறே! அவங்க பேரிலே மோதிட்டது இல்லாமே மெரட்டிக்கிட்டு நிக்கறயே? ஏதோ தவறி நடந்துட்டதுன்னு விடாமே, பெண்கள்னு கூடப் பார்க்காமே நடுரோட்டில் கேஸ் விசாரிச்சுட்டுக் கூட்டம் கூட்டறியே? போய்யா சரிதான்” என்று அவனை விரட்டிவிட்டுக் கீழே விழுந்திருந்த புத்தகங்களைப் பொறுக்கிக் கொடுத்தான் ஜீவா.
கங்கா நன்றி ததும்பப் பார்த்தவாறு அவன் கையிலிருந்த புத்தகங்களையெல்லாம் வாங்கிக் கொண்டாள்.
“உங்களுக்கு அடிபட்டுவிட்டதா, கங்கா?” என்று கேட்டுவிட்டான், அவள் பெயரை உச்சரிக்கிறோம் என்ற பிரக்ஞையில்லாமல், நெஞ்சில் சதா ஒலித்துக் கொண்டிருந்த அந்தப் பெயர் தானாக வந்துவிட்டது.
அவள் நாணத்துடன் தலையைத் தாழ்த்திக் கொண்டு “இல்லை” என்று சிறு குரலில் சொன்னாள்.
“உங்களுக்கு ஆட்சேபணை இல்லையென்றால் பள்ளிக் கூடம் வரையில் நான் வரலாமா?”
அதற்கு என்ன பதில் சொல்வது என்று அவள் தீர்மானிப்பதற்குள் ஜீவா அவளோடு நடக்கத் தொடங்கினான்.
“ஹிந்து ஹைஸ்கூல்தானே?”
“ஆமாம்” என்றாள் கங்கா.
“என்ன படிக்கிறீர்கள்?”
“எஸ்.எஸ்.எல்.சி.”
“ஓ! தனியாக வருகிறீர்களே, தம்பி தங்கைகள் எல்லாம்...”
“அவர்கள் கன்கார்டியாவில் படிக்கிறார்கள்...”
முன்னால் பள்ளிக்குச் செல்லும் மாணவிகள் கும்பல் ஒன்று போய்க் கொண்டிருந்தது. கங்கா அவர்களைக் கண்டதும் அவனுக்கு மட்டும் கேட்கும் மெல்லிய குரலில் வினயத்துடன், “நான் அவர்களோடு சேர்ந்து கொள்கிறேன். ரொம்ப நன்றி. இரண்டு பேரையும் பார்த்தால் ஏதாவது வித்தியாசமாக நினைப்பார்கள்!” என்றாள்.
“சரி, வரட்டுமா? எனக்கும் பஸ் வந்துவிட்டது” என்று விடைபெற்றுக் கொண்டான் ஜீவா.
அன்று மாலை வாணியம்பாடியிலிருந்து திரும்பியதுமே, பக்கத்து வீட்டில் கூப்பிட்டனுப்பியதாக ஒரு பையன் வந்தான். ஜீவானந்தம் போனான். நெற்றியில் இலேசான விபூதியுடன் சிவந்த மேனியும் புன்னகை செய்யும் கண்களுமாக ஐம்பது வயது மதிக்கத்தக்க மனிதர் ஒருவர் உட்கார்ந்து ஒரு பைலைப் புரட்டிக் கொண்டிருந்தார்.
“நமஸ்காரம்” என்று கைகளைக் கூப்பினான் ஜீவானந்தம்.
“ஓ! வாங்க... நமஸ்காரம். நீங்கள்தான் பக்கத்து வீட்டுப் பிள்ளையா? காலையிலே மணிக்கூண்டுக்கிட்டே நடந்ததைப் பற்றிக் கங்கா சொன்னாள். உட்காருங்கோ ஸார். கூச்சப்படறேங்களே! என்ன ஸார், இந்தக் காலத்து காலேஜ் பிள்ளைங்கள்ளாம், ஊரையே கலக்கறாங்க. நீங்க பக்கத்து வீட்டிலே இருக்கிறதும் தெரியறதில்லே, போறதும் தெரியறதில்லே. அட, உட்காருங்க ஸாருன்னா...” என்று வலுக்கட்டாயப்படுத்திக் உட்கார வைத்தார்.
பிறகு அன்றிரவு ஒன்பது மணிக்குத்தான் வீட்டுக்குத் திரும்பினான் ஜீவானந்தம்.
“பக்கத்திலேதானே இருக்கிறீங்க? அடிக்கடி வீட்டுக்கு வாங்கோ ஸார். இந்தச் சின்ன வயசிலே எவ்வளவோ விஷயம் தெரிஞ்சுண்டு இருக்கீங்க. அடிக்கடி வாங்க. ஏதாச்சும் வாழ்க்கையிலே பெரிசா செய்ய முடியல்லேனாலும் பெரிசாவாவது பேசிட்டிருப்போம் என்ன, வர்றீங்களா? சொல்லுங்கோ ஸார். எனக்கும் ஆபீஸ் ரெகார்டுகளோட மாரடிச்சுட்டு வீட்டுக்கு வந்தால் ஒடம்பு நொடிச்சுப் போறது. உற்சாகமாகப் பேசறதுக்கு ஆள் இருந்துட்டா நான் அவங்களை விடத் தயாரில்லே” என்று விடை கொடுத்து அனுப்பினார் வெங்கோஜி ராவ். மிகவும் நல்ல மனிதர். மனசில் கல்மிஷமின்றிக் குஷியாக வயது, அந்தஸ்து பாராமல் பேசினார். அவர் பேசப் பேச உட்கார்ந்து கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல் தோன்றியது.
அவன் எங்கே வரக் கூச்சப்படுவானோ என்று கருதி, ஆபீஸில் ஏதோ வேலையாக வந்த அவன் மாமாவையும் பார்த்து, “என் மூன்று குழந்தைகளுக்கும் டியூஷன் சொல்லிக் கொடுக்கணும். உங்க பிள்ளையை அனுப்பி வையுங்க” என்று சொல்லிவிட்டார். கங்கா வீட்டுக் கதவு அவனுக்காகத் திறந்து விடப்பட்டது.
ஒரு மணி நேரம் டியூஷன் - கங்காவுக்கும் கூடத்தான் - நடத்திவிட்டு, ராயரம்மாள் போட்டுத் தரும் அற்புதமான காப்பியை மணக்க மணக்கப் பருகிவிட்டு, அவரோடு அரட்டைக் கச்சேரியில் உட்கார்ந்து கொள்வான் ஜீவானந்தம். வானசாஸ்திரத்திலிருந்து வெங்காய ஏற்றுமதிவரை சுவாரஸ்யமாக - பயனுள்ள வகையில் - அவர்கள் அரட்டை செல்லும் வெங்கோஜி வம்பு, தும்பு என்று வீண் விவாதம் பேச மாட்டார். அவர் ஒரு பல்கலைக் களஞ்சியம். வாழ்க்கையில் நிரம்ப அடிபட்டவர். அவருக்கேற்ற மனைவி. கங்காவோடு ஜீவா தனித்திருந்தால் கூடத் துளியும் தப்பாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள். ஜீவா அப்படி நடந்து கொண்டான் என்பதோடு அவர்களும் அவ்வளவு தங்கமானவர்கள்.
டியூஷன் நேரத்திலேயே கங்காவோடு பேச வேண்டியதையெல்லாம் கலகலப்பாகப் பேசிவிடுவான். அந்தப் பெருந்தன்மையான வீட்டில் அவனுடைய மனம் இன்னும் பிரகாசமடைந்தது. வெங்கோஜியின் குடும்பமே, மௌனமாகக் கல்லூரியில் சொல்லிக் கொடுக்கப்படாத பல நல்ல பண்புகளை அவனுக்குச் சொல்லித் தந்தது. கூட கங்காவும் இருந்தாள். மணி விளக்கு குளிர்ந்த சுடர் வீசி ஒளிர்வது போன்று அவள் புன்னகையும் இருந்தது.
அந்த நாட்கள் உண்மையில் தெய்வ நாட்கள்தான். வாழ்க்கையின் எந்த மூலையிலிருந்தாலும், எந்த தேசத்திலிருந்தாலும் புராதனமான அந்த வீட்டில் வசித்த நாட்களை, பண்பாடு மிக்க வெங்கோஜி ராவின் குடும்பத்தை இலேசில் மறக்க முடியாது. எப்போது நினைத்தாலும் சிரித்த உருவமும் கம்பீரமான தோற்றம் உள்ள ராயர் தம்பதிகள் அவன் மனத்துக்கு நிழல் தரும் விருட்சங்கள்போல் தென்பட்டார்கள். குறும்பும், பாசமுமுள்ள நித்யா, குழந்தைகள் கணேஷûம், தாமோதரும். இவர்களையும் மறக்க முடியாது.
அவர்களுக்கெல்லாம் டியூஷன் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்த பின் அவர்கள் வீட்டில் அவனுக்கு முழு சுதந்திரம் ஏற்பட்டது. ராவுஜி வேலைத் தொந்தரவுள்ளவரான படியால், ஏதேனும் கடைக்குப் போவதாயிருந்தாலும், சினிமாவுக்குக் குடும்பத்தை அழைத்துப் போவதாயிருந்தாலும், ஜீவாதான் போவான். மாமா வீட்டில் அதற்கு ஏதும் நல்ல காலமாக ஆட்சேபணை கிளம்பவில்லை. ராயரம்மாவே ஒரு தடவை வாய்விட்டுச் சொல்லிவிட்டாள்.
“என்னடா, ஜீவு நீ எங்க வீட்டுப் பிள்ளையாய் இல்லாமே போயிட்டியே. பேசாமே கண்ணை மூடிக் கொண்டு கங்காவை உன் கையிலே ஒப்படைச்சுட்டு மறுவேலை பார்ப்பேனே” என்று ராயரம்மாள் சிரித்தவாறே அங்கலாய்த்துக் கொண்டாள். ஜீவா, கங்காவைத் திரும்பிப் பார்த்தான். கண்கள் சந்தித்தன. நாணம் ததும்பக் கங்கா தலையைத் தாழ்த்திக் கொண்டாள்.
எந்தவிதத் தடைகளுமில்லாமல் கானகத்தில் முற்றிக் காய்ந்த சருகுகளிடையில் தீயைக் குடி வைத்துச் சந்தர்ப்பக்காற்றும் வீசவே காதல் சுயேச்சையாகப் பற்றத் தொடங்கிவிட்டது. இப்படி ஒன்று நேர்ந்துவிடக் கூடாது என்று பொதுவாக எல்லோரும் எதற்குப் பயப்படுவார்களோ அதற்கு ராவுஜி ஜீவானந்தத்தின் குணவிசேஷத்தைப் பார்த்து, பயப்படாமல் நம்பிக்கையோடு இருந்தார். ஆனால் ஜீவாவின் உள்ளத்தில் கங்கா என்ற காதல் ஜோதி எந்நாளும் அயைõத உன்னத ஜோதியாய்ப் பிரகாசிக்கத் தொடங்கிவிட்டது.
நடுவில் ஒரு நாள் ராவுஜியின் கண்களுக்கும் அது தென்பட்டது. உணர்த்தப்பட்டது. ஜீவா கண்ணியமாகவே நடந்து கொண்டான். ஆதலால் எந்த விஷமும் அவர் நெஞ்சில் படரவில்லை. கங்காவைப் பெண் பார்க்க வருவதாக யாரோ கடிதம் எழுதி இருந்தார்களாம். முதலில் திருமணமே வேண்டாம் என்று மறுத்தவள் பிறகு அப்பாவிடம் வெட்கத்துடன் ஜீவாவைப் பற்றிச் சொல்லிவிட்டிருக்கிறாள். அன்றைக்கு டியூஷனுக்குப் போனபோது ராவுஜியே வீட்டிலிருந்தார்.
“வா, ஜீவு” என்று அவனைத் தன் அறைக்கு அழைத்துக் கொண்டு சென்றுவிட்டார். பின்பு சிரித்த முகத்துடனேயே விஷயத்தை ஆரம்பித்தார்.
“ஜீவு! சின்ன வயசிலே வயசுக்கு ஒத்த அழகான ஆசைகள் எத்தனையோ ஏற்படலாம். அது நிறைவேற முடியாதுன்னு தெரிந்தாலும் வயசும் மனமும் பிடிவாதத்தை விடாது. நான் எதையும் வெளிப்படையாகச் சொல்லிவிடுவேன். சமூகக் கட்டுப்பாடு, அதன் வரம்பு, இவைகளெல்லாம் ஆயிரமாயிரம் வருஷங்களாக மனுஷ மனசிலே ஊறிப்படிஞ்சு போனவை. அவைகளெல்லாம் மாறி முன்னேறணும்னா அது எவ்வளவு லேசா? நீ சொல்லு.”
அவன் பேச்சின் பீடிகையே அவர் எதைச் சொல்ல வருகிறார் என்று தெளிவாகிவிட்டது. அதைப் புரிந்து கொண்டாலும் நியாய உணர்ச்சியோடு ஜீவா பேசத் தொடங்கினான்.
“நான் ஒப்புக்கறேன், ஸார். ஆனா, மாற்றம்... புரட்சின்னுல்லாம் வேண்டற நாம் அதற்கு ஊக்கந் தராட்டா அந்தச் சமூகக் கட்டுப்பாடு எப்படித் தானாக அகல முடியும்?”
“தர்க்கரீதியா நீ சொல்றது சரி. ஆனால் சமூக மனப்பான்மை என்பது வளர்ச்சி பெறாதவரைக்கும் ஒரு தனிமனிதன் எந்தத் துணிச்சலான காரியத்திலும் ஈடுபடறது சமூக விரோதமாகத்தானே நெனைக்கப்படறது! சமூகம், இந்தக் கட்டுப்பாடுகளையெல்லாம் ஒரு நன்மையை உத்தேசித்து விதிக்கிறது. அதன் கருத்துப்படி இது நியாயம் அந்தச் சமூகத்தைச் சேர்ந்த பண பலமோ,ஆள் பலமோ இல்லாத ஒருத்தன் தீவிரமா இருந்தால் அது அவனை அல்லது அவன் குடும்பத்தைத் திரஸ்கரிக்கிறது.”
அவர் பேச்சின் நியாயத்தை உணர்ந்து ஜீவா மௌனமாயிருந்தான்.
“கங்கா நேத்து வர இருந்த ஒரு சம்பந்தத்தைப் பிடிவாதமாக உதறிவிட்டு உன்னைத்தான் நேசிக்கிறதாக எங்கிட்டே சொன்னாள். ஜீவு! உண்மையிலேயே சொல்றேன். எனக்குத் தர்மசங்கடமாப் போச்சு. என் பெண்ணை ஒனக்குக் கொடுக்கறதிலே எனக்கு எவ்வளவு சந்தோஷம் தெரியுமா? துரதிர்ஷ்டவசமா நான் ஒரு மகாராஷ்டிரன். எனக்குக் கங்கா ஒரே பெண்ணாயிருந்தாலாவது முன்னே சொன்னேன் பாரு, அந்த மாதிரி சமூகத்திலே ஒரு கிளர்ச்சிக்காரனாக, உன்னைப் போன்ற ஒரு நல்ல மாப்பிள்ளைக்காக இருந்து பார்ப்பேன். கங்காவுக்கு அப்புறம் நித்யா இருக்கா. அவளுக்கும் விவாகமாக வேண்டும். நான் என்ன செய்வேன்? நீ சொல்லு. என்னைப் போல் ஒரு தகப்பன் ஸ்தானத்திலே நின்று நீ யோசிச்சுப் பார்.”
பகிரங்கமாக அவன் விசாரிக்கப்பட்டபோது ஜீவானந்தத்தினால் ஒன்றும் பேச முடியவில்லை. ராயரம்மாள் புன்சிரிப்புடன் காப்பி கொண்டு வந்து வைத்தாள்.
“என்னங்க, அதைப் பிடிச்சிட்டு விசாரிச்சுக்கிட்டு இருக்கேங்க. அது நம்ம பிள்ளை. அதற்கு இத்தனை சொல்லணுமா? ‘வாண்டாண்டா, என் பிள்ளைக்கே என் பெண்ணைத் தர முடியாது’ன்னு ஒரு வார்த்தை சொன்னால் ஒப்புக் கொண்டு போகிறான்.”
ராயரம்மாளின் குளிர்ந்த முகமும், பாசம் நிறைந்த சொற்களும் அவனை இன்னும் வெட்கிக் குறை வைத்தன.
“காப்பி சாப்பிடுடா ஜீவு.”
அதைத் தவிர வேறெதுவும் செய்ய முடியாததால் ஜீவா காப்பி சாப்பிடத் தொடங்கினான். அவன் சாப்பிட்டானதும், “இதனாலே நம்ம நட்பு முறிஞ்சு போயிட்டதாக நீ நெனைக்கக் கூடாது ஜீவு. நாளைக்குச் சாயந்திரம் நான் உன்னை இங்கே கட்டாயமா எதிர்பார்க்கிறேன். நீ வரல்லைன்னா அங்கேயே வந்து உட்கார்ந்துட்டாலும் உட்கார்ந்துடுவேன்” என்று அவர் சிரித்தவாறு மிரட்டினார்.
மனசில் அழுத்தும் பாரத்தால், ஜீவாவின் கண்கள் கலங்கின. அவன் ராவுஜி தம்பதிகளைக் கைகூப்பி வணங்கி விடை பெற்றுக் கொண்டான். மௌனமாகவே அதன் டியூஷன் நிறுத்தப்பட்டுவிட்டது. வந்து போகும் பெண்ணைப் போல் கங்காவையும், பருவக் கிறுக்கினால் ஏற்பட்ட உணர்ச்சி என்று அவள் காதலையும் அவன் எப்போதும் கருதியதில்லை. எளிய வார்த்தைகளில் உண்மையான அன்போடு தங்கள் குடும்ப நிலையை எடுத்துக் கூறிய ராவுஜியின் வேண்டுகோளையும் அவனால் நிராகரிக்க முடியவில்லை. பொன்னால் விலங்கிட்டிருந்தாலும் முறித்துவிடலாம்; நம்பிக்கை நிறைந்த இதயத்தோடு ராவுஜி அவனுக்குப் பூ விலங்கிட்டிருந்தார். அதை அறுக்க முடியாது. ஜீவாவைப் போல் ஒரு விசுவாசம் நிறைந்த இளைஞன் - ஒரு பண்பு மிக்க குடும்பத்தால் மிகவும் நேசிக்கப்பட்ட ஒருவன் - அதை மீறவும் மாட்டான்.
ஜீவா வாழ்க்கையில் தாய், தந்தையர் இல்லாமையால் எத்தனையோ கஷ்டங்கள் பட்டிருக்கிறான். சொல்லப் போனால் எதிர்பாராத சிக்கலான திருப்பம் இப்போது அவன் எதிரே நின்றது. கங்கா! பழகிக் கொஞ்ச மாதங்களாவதற்குள் அவளை வைத்து எவ்வளவு கோட்டைகள் கட்டிவிட்டான்? நேரிலும் மறைவிலும் ஒவ்வொரு நிமிஷத்திலும் உணர்ச்சிகளால் தீர்மானிப்பது நிதானமாக அவளைப் பற்றிச் சிந்தித்த வேளையெல்லாம் அவளுடைய பிரசின்னம் அவன் வாழ்க்கைக்கு எத்தனை அத்தியாவசியமானது என்று அவனே ஆச்சரியப்படுமளவு, அவள் நிறுவனமாகிவிட்டாள். இன்று அவனே விரும்பினாலும், அவளுடைய ஸ்தானத்திலிருந்து அவளை விலக்க முடியாது. அவனுக்குப் பைத்தியம் பிடித்துவிடும்போல் ஆகிவிட்டது.

பாடிப்பறந்த குயில் -3

3
கோபமும், ரோஷமும், அவமானமும், வருத்தமும் அவளுடைய அழகிய சிவந்த முகத்தில் தத்தளித்தன. உதடுகளை இறுக மூடிக் கொண்டு அவள் எதிரிலேயே நின்றாள்.
“பாவம், அதுவும் வரட்டுமே!” என்று அவளுடைய தோற்றத்தை ரசித்தபடியே கூறினான் தியாகராஜன்.
“உங்களுக்குத் தெரியாதுங்க எஜமான்! இந்தப் பொம்பளைப் பிள்ளைக்கு அளவுக்கு மீறிச் செல்லம் கொடுத்திட்டேன். இது தம் போக்கிலே ஆடுது. வேட்டைக்கு வந்து இவ என்னத்தைக் கிளிக்கப்போறா?”
“இல்லை, ஜக்கோடன்! இவளும் வரட்டும். மலை ஜாதிப் பெண்ணானால், தைரியமும் வீரமும் அவள் உடம்பிலேயே ஓடணும். வேட்டைகளை அவள் பார்க்கணும்” என்று இடைமறித்தார் ஜான்ஸன்.
ஜக்கோடன் முகத்தில் ஒரு தர்மசங்கடம் நிலவியது. அவர் வார்த்தை அவனுக்குத் தேவ வாக்கு. அவன் பேசாமல் இருந்து விட்டான். நிஷாவின் முகத்தில் புதுப் பூவொன்று மெல்ல மலர்வதைப் போன்ற களிப்பு உருவாகியது. அவள் அவசரத்தோடு ஜீப்பில் ஏறி ஜீவானந்தத்தின் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள். அங்கேதான் சிறிது இடமிருந்தது; முன்புறம் இல்லை. ஜீப் மெல்லப் புறப்பட்டதும் நிஷாவின் முகத்திலிருந்த மந்தஹாசம் ஜீப்பின் இயக்கத்தால் புளகாங்கிதமுற்று அதிக சப்தமில்லாத சிரிப்பாக மலர்ந்தது. ஜீப்பின் ஓசையால் ஜீவானந்தத்துக்கும் ஜான்ஸனுக்கும் மட்டுமே அது கேட்டது.
அந்திக்கு மேல்தான் கருஞ்சிறுத்தைகள் நடமாட்டம் ஆரம்பிக்கும். ஆகவே, காட்டில் விஸ்தாரமாக நுழைந்து பார்த்துவிட்டு வருவது என்று தியாகராஜன் தன் திட்டத்தைப் பிரஸ்தாபித்தான். ஜான்ஸனுக்கும் அது சரியென்று பட்டது. நிஷாவையும் கூட இழுத்துக் கொண்டு அலைவது நன்றாயில்லை என்று ஜக்கோடன் அபிப்பிராயப்பட்டான். ஆனால் அவள் தன் பலத்த ஆட்சேபத்தை முகத்திலேயே தெரிவித்துக் கொண்டாள். அதனால் வளையும் கூட அழைத்துக் கொண்டு செல்ல வேண்டி நேரிட்டது. எல்லோரும் அந்த அமைதி நிறைந்த காட்டில் கலகலவென்று பேசியபடியே உயிர் சந்தடியை ஏற்படுத்திக் கொண்டு நடந்தனர். பூட்ஸ் ஓசைகளையும், சிரிப்பொலிகளையும் கேட்டுப் பயந்து சில பறவைகள் கூட்டை விட்டுப் பறந்தன. அடர்ந்த புதர் ஒன்றின் அருகில் திடீரென்று ஒரு சலசலப்பு கிளம்பியது. சட்டென்று அனைவரும் சிலைகள் போன்று நின்றுவிட்டனர்.
மறுகணம் “டீர்... டீர்... மான்!” என்று கத்திக் கொண்டே ஜான்ஸன் துப்பாக்கியை உயர்த்தி, அந்த வேகத்திலேயே குறியை நிதானித்துக் கொண்டு விரைவாகச் சுட்டார். ஷிகாரியின் அடுத்த குண்டும் ஜக்கோடனின் குண்டும் அதைத் தொடர்ந்தன. புதரிலிருந்து ஒரு மின்னல் போல் துள்ளிப் பாய்ந்து அவர்களைத் தாவிக் கொண்டு ஓடியது ஒரு காட்டு மான்.
“அது தப்பிக்க முடியாது, ஜக்கோடன்!” என்று மலை போன்ற, வயதான கிழவர் ஜான்ஸன் இளைஞன் போல் துள்ளிக் கொண்டு அதைப் பின் தொடர்ந்தார். ஜக்கோடனும், ஷிகாரி ராஜவேலுவும் அவரைப் பின்பற்றி அடர்ந்த புதர் வழிகளில் இறங்கி ஓடலானார்கள். அந்த நடுக்காட்டில் திடீரென்று தனியே விடப்பட்ட மூவரும் மௌனமாக இருந்தார்கள். வெகு நேரம் கழித்துக் காட்டின் அதிக தூரத்துக்கப்பால் உறுமல் போன்று ஒரு துப்பாக்கி ஓசை கேட்டது.
“சுட்டுவிட்டிருப்பார்களா மிஸ்டர் ஜீவன்?” என்று அவனைத் திரும்பிப் பார்த்தான் தியாகராஜன். இவ்வளவு நேரம் வரையில் தூங்கி எழுந்தது போல் அவனுடைய சுபாவம் மீண்டும் திரும்பியது.
“கட்டாயமா சுட்டிருப்பாங்க!” தலையை அசைத்துக் கொண்டு முந்தின நிஷா. அவள் பக்கமாக விசித்திரமான பார்வையோடு திரும்பிப் பார்த்தான் தியாகராஜன். அடர்ந்த மரங்கள். விந்தையான செடி, கொடிகள். வெள்ளைக் கூழாங்கற்கள். விசித்திரமான இயற்கையின் அந்தப் பச்சைப் பந்தலின் கீழே அவளுடைய அழகில் ஓர் அபூர்வ லாகிரி சேர்ந்திருந்தது. தியாகராஜன் அடங்காத இதய தாகத்தோடு அந்த லாகிரியில் மெல்ல மெல்ல அவளையே பருகி விடுவது போன்று பார்த்தான். பின்பு ஏதோ ஒரு முக்கிய விஷயம் சொல்வது போன்ற குரலில் ஜீவானந்தத்தின் பக்கம் திரும்பி, “இவள் ஒரு வனமோகினி மாதிரி இல்லை, மிஸ்டர் ஜீவன்?” என்று கேட்டான்.
ஜீவானந்தத்தின் நெற்றி நரம்புகள் புடைத்தன. துப்பாக்கியை நிலத்தில் ஊன்றியிருந்த அவனுடைய இரண்டு கைகளிலும் அடக்கமாட்டாத ஓர் உக்கிரம் தோன்றி, அவை விறைத்தன.
‘இவ்வளவு துச்சமானவனிடமா கடைசியில் கங்கா ஒப்புவிக்கப்பட்டுவிட்டாள்? ரத்ன மண்டபத்தின் உப்பரிகையில் நிலவின் அமிர்த கிரணங்கள் தூங்கச் செய்ய, மந்தமாருதம் கோதிவிட, மேன்மையான இடத்தில் இருக்க வேண்டிய அந்த இள மலர் எவ்வளவு நீசமானவனிடம் விசிறி எறியப்பட்டிருக்கிறது!’
ஜீவானந்தம் காலாக்கினி போன்ற ஆத்திரத்தின் வசப்பட்டான். துப்பாக்கியை உயர்த்தி வெறும் வானத்தை நோக்கிச் சுட்டான். நிஷா பீதியடைந்து தியாகராஜனின் தோளைப் பற்றிக் கொண்டாள். அந்தக் குண்டின் ஓசை ஒரு தெளிவற்ற முனகல் ஒலிபோல் மெல்லமெல்ல அடங்கியது.
தியாகராஜன் கடகடவென்று சிரித்தான். “என்ன மிஸ்டர் ஜீவன்! துப்பாக்கி சுட்டுப் பழகிக் கொள்கிறீர்களா?” என்று நறுக்கென்று கேட்டான்.
ஜீவானந்தம் பளிச்சென்று அவனை நிமிர்ந்து பார்க்கையில் தியாகராஜனின் தோளைப் பிடித்துக் கொண்டு நிஷா மலங்க மலங்க விழித்தபடி நின்றிருந்தாள். அவளைக் கண்டதும் அவனுடைய இருதய வேகம் தாழ்ந்தது. தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான்.
“ஒன்றுமில்லை சார் சும்மா, துப்பாக்கி சுடுகிறதா என்று பார்த்தேன்.”
“அப்படியா?” என்று அலட்சியமாகப் பார்த்தபடி” அதைத் தான் நம்பவில்லை என்பதுபோல் தியாகராஜன் நின்றான்.
“இன்னும் இவர்களைக் காணவில்லை. நாம் கொஞ்சம் அப்படியே சுற்றிவிட்டு வருவோமா?” என்று அவன் அலட்சியத்தை மதியாது ஜீவானந்தம் நடக்கத் தொடங்கினான். அவன் மனத்தில் அந்தக் கோபமெல்லாம் அப்படியே ரஸவாதமானது போல் வருத்தமாகி விட்டது.
“ஓ, போகலாம்! ஆனால் நீங்கள் துப்பாக்கி சுடுகிறதா என்று என் மேலே சுட்டுப் பார்த்துவிடாதீர்கள்... என்ன நிஷா?” என்று கூர்மையான அர்த்தத்தோடு சிரித்தான் தியாகராஜன். ஜீவானந்தத்தால் பேச முடியவில்லை. நிஷா தான் சளசளவென்று தியாகராஜனோடு பேசிய வண்ணம் வந்து கொண்டிருந்தாள். “துப்பாக்கி எப்படிச் சுடுகிறது? எப்படிச் சுட வேண்டும்?” என்று என்னென்னவோ கேள்விகளைக் கேட்டுக் கொண்டே வந்தாள். பேச்சு சுவாரசியத்தில் தியாகராஜனும் நிஷாவும் பின்னால் ஓரடி தள்ளிவிட்டதால் ஜீவானந்தம் முன்னால்நடந்து கொண்டிருந்தான். கங்கா என்ற வட்டத்தைச் சுற்றியே ரத்தம் சிந்தியவாறு அவன் எண்ணம் ஓடியது. பழைய நினைவுகள்... பழைய சம்பாஷணைகள்... பழைய காலம்...!
“இவ்வளவு கேக்கிறியே! உனக்குத் துப்பாக்கி சுடணும்னு ஆசையாய் இருக்கா?” என்று கேட்டான் தியாகராஜன்.
“அப்பப்பா! எனக்கு எவ்வளவு ஆசை தெரியுமா?” என்று சிவந்த உதடுகள் குவிய அவனைப் பார்த்தாள் நிஷா.
“முதல்லே நான் சுட்டுக் காட்டறேன், அதோ அந்தப் பறவையை!” என்று அவன் சொல்லி முடிக்குமுன், ஜீவானந்தத்தின் தலைக்கு வெகு அருகில் ஒரு குண்டு சீறிக் கொண்டு நீல வானில் ஹாய்யாக வட்டமிட்ட ஒரு ராஜாளியை நோக்கிப் பறந்தது.
ஜீவானந்தம் திடுக்கிட்டுத் திரும்பினான்.
ராஜாளி ஒன்று சற்றுத் தொலைவுக்கப்பால் போய்த் துவண்டு விழுந்தது.
“பயந்துவிட்டீர்களா மிஸ்டர் ஜீவன்? நிஷாவுக்குச் சுட்டுக் காண்பிச்சேன். அதோ பாருங்க, அந்தப் பறவையை!” என்று அவனக்குச் சுட்டிக்காட்டினான் தியாகராஜன். நிஷா கலகலவென்று நகைத்துக் கொண்டுகீழே விழுந்த பறவையை எடுத்துவர ஓடினாள்.
ஜீவானந்தம் தீர்க்கமாக அவனையே உற்றுப் பார்த்தான். தியாகராஜன் அந்தப் பார்வையை லட்சியம் செய்யாமல் நிஷாவைப் பின் தொடர்ந்து நடந்தான்.
“என்ன நிஷா, கெடச்சுடுச்சா?” என்று அவனது குரல் ஜீவானந்தத்தைப் பரிகாசம் செய்வது போல் காற்றில் மிதந்து வந்தது. அவன் துப்பாக்கியைக் கீழே ஊன்றி, ஒரு பாறையின்மீது உட்கார்ந்தான். கைகள் இரண்டும், கோத்தாற்போல் துப்பாக்கியைப் பிடித்திருந்தன. நெற்றியின் மீது இரண்டு கைகளையும் துப்பாக்கியையும் சாத்திக் கொண்டு மெல்லக் கண்களை இறுக மூடிக் கொண்டான்.
“ஜீவா... ஜீவா! நீ வரவில்லையா?” என்று நிஷா கத்தினாள்.
“இல்லே” என்று கண்களைக் கூடத் திறக்காமல் பதில் சொன்னான் ஜீவானந்தம்.
“என்ன சமாசாரம் மிஸ்டர் ஜீவன்?” என்று கேட்டான் தியாகராஜன்.
“தலை ஒரு மாதிரியா வலிக்கிறது!”
“அப்போ இங்கேயே உட்கார்ந்திண்டு இருங்க. இவளுக்குத் துப்பாக்கி சுடக் கத்துக் கொடுக்கிறேன்... நிஷா! அந்த ராஜாளியைக் கொண்டுபோய் அவர் பக்கத்திலே போட்டுட்டு வா” என்றான் தியாகராஜன்.
நிஷா ராஜாளியைக் கொண்டு வந்து அவனருகில் போட்டுவிட்டுச் சிறிது நேரம் நின்றாள். துப்பாக்கியின் மீது குனிந்து கொண்டிருந்த அவனைக் கருணையோடு நோக்கினாள். மெதுவாக அலையலையான அந்தக் கிராப்பை வருடிய வண்ணம் மனத்தினுள்ளிருந்து பேசுவதுபோல், “ரொம்ப நோவுதா ஜீவா?” என்றாள். ஜீவானந்தத்துக்கு மனம் கலங்கியது. நிமிர்ந்து அவளைப் பார்த்தான். விளையாட்டுத்தனம் நிறைந்த அந்தக் கண்களில் உண்மையான வருத்தம் கண்டிருந்தது.
“கொஞ்சம்தான்.”
“இங்கேயே ஒக்காந்துக்கிணு இருப்பியா?”
“ஊம்.”
“சரி; நான் போவட்டுமா?”
“செய்” என்று அவளை அனுப்பி வைத்தான் ஜீவானந்தம். அவர்கள் இருவரும் பிரிந்து சென்றதும் எந்தக் கட்டுக்களுமற்று அவன் மனம் ‘ஹோ’வென்றது பொங்கி எழுந்தது. கரையின் மீது நுரையைத் துப்பிவிட்டுத் திரும்பி ஓடும் அலைபோல் அவன் நினைவுகள் சீறின. அந்த அலையோசøயில் செயலற்றுச் சிறுகச் சிறுக அமிழ்ந்துவிட்டான் ஜீவானந்தம்.
ஜீவானந்தத்தின் பழைய நாட்கள்! அநாதையான அவன் ஆம்பூர் கஸ்பாவில் மாமா வீட்டில் தங்கிப் படித்துக் கொண்டிருந்தது.... அடுத்தடுத்த இரண்டு மாடி வீடுகளில் பக்கத்து மாடி வீட்டில் கங்காவின் குடும்பம் வசித்தது... இனிமை வாய்ந்த அநேக தினங்கள்... ஆகியவைகளெல்லாம் அவன் அகக் கண்ணில் பிலிம் சுருள்போல் வேகமாக ஓடின.
ஜீவானந்தத்தின் மாமா பாலகிருஷ்ண முதலியார், ஆம்பூரில் ஒரு பெரிய தோல் கிடங்கில் கணக்குப் பிள்ளையாக வேலை பார்த்து வந்தார். முப்பது வயதுக்கு மேல் அவர் கல்யாணம் செய்து கொண்டதால் ஜீவானந்தம் அங்கே படிக்கப் போய்ச் சேர்ந்தபோது குஞ்சும் குளுவானுமாக அவருக்கு அரை டஜன் குழந்தைகள். அவருக்கு ஜீவானந்தத்தின் பேரில் மிகவும் பிரியம். மாடியையும் அதிலிருந்த அறையையும் அவனுக்காகவே ஒழித்துக் கொடுத்துவிட்டார். அந்த வீடும் சரி, அதற்கு அருகிலிருந்த இன்னொரு மாடி வீடும் சரி - பழங்காலத்து முறையில் கட்டப்பட்டவை. மாடியிலிருந்து கீழே எட்டிப் பார்க்கக் கொஞ்சம் இடத்தை நடுவில் விட்டுவிட்டு மற்ற நான்கு பக்கங்களிலும் கம்பிகள் பொருத்திச் சுவர் எழுப்பியிருப்பார்கள்.
அவன் பள்ளிப் படிப்பையெல்லாம் முடித்துவிட்டு, ஆம்பூருக்குப் பக்கத்திலுள்ள வாணியம்பாடியில் கல்லூரியில் சேர்ந்திருந்த நேரம் அது. பக்கத்து வீட்டுக்குப் புதிய குடித்தனக்காரர்கள் வந்திருப்பதை அறிந்திருந்தான். ஆனால் யார் இன்னாரென்று தெரியாது.
அன்று அதிகாலை வழக்கம்போல் விளக்கைப் போட்டுக் கொண்டு படித்துக் கொண்டிருந்தான் ஜீவானந்தம். மனம் லயித்துப் படித்துக் கொண்டிருந்த ஜீவா, பட்டென்று பக்கத்து வீட்டு மாடியில் மின்சார விளக்கு போடப்பட்டதையும் வளையல் ஓசையும் கேட்டுத் திரும்பினான். இந்த வீட்டு மாடியிலிருந்தவாறே பக்கத்து மாடியை நன்கு பார்க்க முடியும். விடிவின் வெளிம்பில் தோய்ந்த பொன்போல் பிரகாசிக்கும் மின்சார வெளிச்சத்தில் ஈரத் தலையை ஆற்றியவாறே ஒரு துண்டைக் காயப் போட்டுக் கொண்டிருக்கும் ஓர் இளம் பெண் அவன் கண்ணில் தென்பட்டாள். ஜீவா அதிசயமும் குறுகுறுப்பும் மனத்தில் நிலவ, செயலிழந்து பார்த்துக் கொண்டேயிருந்தான். சிவந்த மேனியும் ஒரு கம்பீரமான சாந்தமும் முகத்தில் நிலவ, அடர்ந்திருந்த கூந்தலைச் சுயேச்சையாய் அவிழ்த்து விட்டு, ஆடிய இளங்காற்றில் அதை ஆற்றிக் கொண்டிருப்பது,மஹா மங்கை பகீரதன் தவத்திற்காக வானின்று இறங்கி வந்தது போல் அவனுக்குத் தோன்றிற்று. அப்படி ரவிவர்மாவின் படம் ஒன்றை அவன் பார்த்திருக்கிறான்.
அவளுடைய நீண்ட விழிகள், காற்றின் இலேசான கொஞ்சலை அனுபவிப்பது போல் சற்றே மூடியிருந்தன. இதழ்களில் ஒரு புன்முறுவல். ஜீவா பார்ப்பதை அவள் கவனிக்கவில்லை. எனவே அவளுடைய முழு சௌந்தர்யமும் அந்தக் காலை வேளையில் சுயேச்சையோடு விகிசித்தது.
அதற்குள் வீதியில் பாடிக் கொண்டு போகும் ஒரு முஸ்லிம் பக்கீரின் குரல் கேட்டது. அவள் கீழே எட்டிப்பார்த்துவிட்டுத் திரும்பினாள். ஓர் இளைஞன், ஆச்சரியமான பார்வையோடு தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டு திடுக்கிட்டுத் திரும்பி நடந்தாள். மின்சார விளக்கு அணைந்தது.[தொடரும்]

பாடிப்பறந்த குயில் -2

2
“சும்மா வேடிக்கைகுப் பேசினோம். நாளை கிழக்குக் காட்டுப் பக்கமா இவளுடைய அப்பா வேட்டைக்குப் போகிறாராம். என்னையும் அழைச்சிருக்கார். நீங்க வந்து கலந்துக்கிறதுன்னா எனக்கென்ன ஆட்சேபம்? தாராளமாக வாங்க!” என்று சலனமற்ற குரலில் கூறினான் ஜீவானந்தம்.
“ஓ! நீங்க ஆட்சேபிக்க மாட்டீங்கன்னு நான் அப்பவே யூகிச்சேன். வர்றீங்களா? நான் கிளம்பறேன். நீங்க இன்னும் கொஞ்ச நேரம் இருந்துட்டு வருவீங்க” என்று கூறித் திரும்பினான் தியாகராஜன்.
அவனுக்காக - அவனுடைய விஷம் தடவிய வார்த்தைகளின் விகல்ப அர்த்தத்துக்காக - ஜீவானந்தம் புறப்படத் தொடங்கினான்.
“சரி, நிஷா! நீ வீட்டுக்குப் போய், நான் காலையிலே வர்றதாக உங்கப்பாகிட்டே சொல்” என்று அவளை அனுப்பி வைத்தான்.
“நிஷா! ரொம்ப அழகான பேர் இல்லையா மிஸ்டர் ஜீவன்? அந்த வார்த்தை மனசிலே தூண்டில் மாதிரி விழுந்து எதையோ இழுக்கிற மாதிரி இருக்கு.”
அவனுடைய அந்தத் தைரியமான பேச்சைக் கேட்டு ஜீவானந்தம் இரண்டு கைகளையும் இறுகப் பிசைந்து கொண்டான். அவன் ‘ஜீவன்’ என்று அழைக்கும்போதெல்லாம் அவனுடைய உள்ளத்தின் மென்மையான பாகத்தில் வீற்றிருக்கும் அந்த மகத்தான துக்கம் மெதுவாக ஞாபகப்படுத்தப்படுகிறது. ‘ஜீவன்’ - ‘அவள்’ தான் அப்படி அழைப்பாள். அவள் ஒருத்திக்குத்தான் அந்தப் பெயரை அவ்வளவு உயிரோடு சுருக்கத் தெரிந்தது. இவன் யார்? ஜீவானந்தத்தின் துக்கங்களும் ரகசியங்களும் தெரிந்தவனா? தன்னோடு பழகும்போதெல்லாம் குத்தீட்டிகள் போன்று இவன் ஏன் வார்த்தைகளை உபயோகிக்கிறான்? ஜீவானந்தத்துக்கு ஒன்றும் புரியவில்லை.
“சரி! மிஸ்டர் ஜீவன், நான் இப்படியே பங்களாவுக்குப் போகிறேன். வேட்டை, நாளைக்குக் காலையில்தானே? நீங்க நாளைக்குக் காலையிலே பங்களாவுக்கு வரணும். காலையிலே ‘டிபன்’ அங்கேதான் என்ன?” என்றான் தியாகராஜன்.
‘அதை மறுத்துவிடு... மறுத்துவிடு’ என்று உள்ளத்திலிருந்து ஓர் உறுத்தல் கட்டளையிட்டது. ஆனால் ஜீவானந்தம் ‘சரி’ என்று ஒப்புக் கொண்டான்.
“நான் உங்களை அவசியம் எதிர்பார்ப்பேன்” என்று கட்டளையிடுவது போல் கூறிவிட்டு ஒரு குறுக்குப் பாதையில் நுழைந்தான் தியாகராஜன். ஜீவானந்தம் ஜான்ஸன் துரையின் வீட்டை நோக்கிச் செல்லலானான்.
ஜீவானந்தம் தனது துப்பாக்கியை எடுத்துத் தோளில் மாட்டிக் கொண்டு கிளம்பினான். சூரியனின் பொற்கதிர்கள் பறவைகளின் உதய நேரக் குதூகலிப்பை ஊக்குவித்தவாறு மர இலைகளினூடே, அருவி ஓலத்தின் மேலே ஜரிகை போல் நீண்டு விழுந்தன... அவன் உல்லாசமாகச் சீட்டியடித்த வண்ணம் மனித வாழ்வில் சாந்தியின் இந்த அபூர்வ தரிசனத்தை அனுபவித்துக் கொண்டே பாரஸ்ட் பங்களாவை நோக்கி நடந்தான். பங்களாவுக்கு வெளியிலேயே ஆபீஸ் உடையோடு பியூன் ஒருவன் பெரிய பலாப்பழத்தை உரிக்கிற முயற்சியில் ஈடுபட்டிருந்தான். அவனும் புதியவன்தான். பங்களாவுக்குச் சற்றுத் தள்ளி ஒரு பன்னீர் மரநிழலில் ஷிகாரி வெள்ளைக் குதிரைக்கு எண்ணெய் தடவி ‘மாஸேஜ்’ செய்து கொண்டிருந்தான். தொலைவிலிருந்து பார்க்கும்போது சதுரமாகச் செதுக்கி விட்டிருந்த அந்த வெட்டவெளியில் வைத்த வெள்ளைமுத்துப்போல் சமீபத்தில் பூச்சு வேலை செய்யப்பட்ட பங்களா தோன்றியது. பங்களாவை ஒட்டியே ‘சிமெண்ட் ஷீட்’னால் போர்த்தப்பட்டிருந்த ஒரு ஜீப் ஷெட் இருந்தது. ஆனால் அதில் குதிரையைக் கட்டி வைக்க விரும்பாமலோ என்னவோ, மூங்கிலாலும் மஞ்சம் புல்லினாலும் வேயப்பட்டு, குதிரைக்கென்று ஒரு தனிக்கொட்டகை மலைவாசிகள் நாலைந்து பேர்களால் கட்டப்பட்டுக் கொண்டிருந்தது. தியாகராஜன் அதை மேற்பார்வையிட்டுக் கொண்டு நின்றிருந்தான்.
“டிய்யூ... டிய்யூ” என்று ஒரு காட்டுக்குயில் எங்கிருந்தோ கூவிற்று. குதிரை ‘மாஸேஜின்’ சுகத்தை வாலை ஆட்டியபடி மெல்லக் கனைப்பதன் மூலம் தெரிவித்தது. தியாகராஜன் பூட்ஸ் ஓசையைக் கேட்டதும் ‘டக்’கென்று திரும்பினான், ஜீவானந்தம்.
“ஹல்லோ, மிஸ்டர் ஜீவன்! பரவாயில்லையே, கரெக்டா வந்துட்டீங்களே!” என்று பேசியபடியே அவனருகில் வந்து தோள்மேல் கை வைத்து உள்ளே அழைத்துச் சென்றான்.
முன்பு பல தடவை ஜீவானந்தம் அந்தப் பங்களாவுக்கு வந்திருக்கிறான். அந்தப் பங்களா தானா இது என்ற ஐயம் அவனுக்கு இப்போது ஏற்பட்டது.
முன் ஹாலில் ‘லினோலியம்’ விரித்திருந்தது. பழைய நாற்காலி மேஜைகள் அகற்றப்பட்டு, கருங்காலி மரத்தினால் செய்யப்பட்ட பளிச்சென்ற ஆசனங்கள். கவிஞர்களும், மகான்களும், பெரிய எழுத்தாளர்களும் இருந்த படங்களுக்குப் பதில் பாடம் செய்து மாட்டப்பட்டிருந்தன, மிருக வர்க்கங்களின் தலைகள். நேர்ச்சுவரின் நடுவில் இரட்டைக் குழல் துப்பாக்கிகள் இரண்டு ஒரு ஸ்டாண்டில் நிறுத்தப்பட்டிருந்தன. தியாகராஜனின் பக்தி நிறைந்த உபாஸனைக்கு ஆளான தெய்வங்கள் போல், பளபளவென்று அவை நன்கு மெருகேறி எதிர் ஜன்னலில் வந்து விழுந்த சூரிய கிரணத்தைப் பார்த்துச் சிரித்தன. ஈட்டியைத் தோளுக்கு மேலே ஓங்கிக் கொண்டு கண்களில் கனல் தெறிக்க, ஸ்பார்ட்டன் சிலை மார்பளவு பெரிய உருவில் நடுவில் வைக்கப்பட்டிருந்தது.
“உட்காருங்கள்” என்று ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு அவனுக்கு ஒரு சோபாவைச் சுட்டிக் காட்டினான் தியாகராஜன்.
“பங்களா எப்படியிருக்கிறது? முன்னே வந்து பார்த்திருப்பீர்கள். இப்போது சொல்லுங்கள்” என்றான். அவன் கண்களிலும் உதடுகளிலும் எதை ஜீவானந்தம் மனப்பூர்வமாக வெறுத்தானோ, அந்த அகம்பாவம் தென்பட்டது.
“பயங்கரமாக இருக்கிறது” என்று கச்சிதமாகப் பதிலளித்தான் ஜீவானந்தம்.
“ஓஹோ!” என்று வாய்விட்டுச் சிரித்தான் தியாகராஜன்.
அதில் சிரிப்பதற்கு என்ன இருந்ததோ என்று புரியாமல் ஜீவானந்தம் விழித்தான்.
“இருந்தாலும் நீங்க ரொம்பப் பயந்தவர், மிஸ்டர் ஜீவன்!” என்று அவனை நோக்கி ஒற்றை விரலை ஆட்டிய படியே தியாகராஜன் எழுந்தான்.
“உட்காருங்கள். இதோ, உள்ளே போயிட்டு வர்றேன். ஹும், உங்களுக்குப் புரட்டிக் கொண்டிருக்க ஏதாவது புத்தகம்” என்று மேஜை டிராயரை இழுத்து எதையோ புரட்டலானான்.
“அடேடே! உங்களிடம் புத்தகமெல்லாம் கூட இருக்கிறதா?” என்று உணர்ச்சியற்ற குரலில் கேட்டான் ஜீனாவந்தம்.
“என்ன அப்படி நினைத்துவிட்டீர்கள்?” என்று ஹிட்லரைப் பற்றிய ஒரு புத்தகத்தை அவனிடம் நீட்டினான் தியாகராஜன்.
“அதுதானே கேட்டேன்!” என்று மனசுக்குள் சொல்லிக் கொண்டு ஜீவானந்தம் புத்தகத்தைப் புரட்டினான். அந்தக் கொலைக்காரப் புத்தகத்தில் அவனுக்கு மனசு செல்லவில்லை. அதை மூடி ‘டீப்பா’யின் மீது போட்டுவிட்டு அறையை ஒரு பார்வை பார்த்தான். அங்கே ரசிக்க ஒன்றும் இல்லை. ஜன்னலின் வழியே குதிரையும் ‘மாஸேஜ்’ செய்து கொண்டிருந்த ஷிகாரியும் தெரிந்தார்கள். உட்கார்ந்தவாறே அந்தச் சதுரம் வரை தடுக்கப்பட்டிருந்த வெளியுலகை நோட்டமிட்டான்.
வீட்டுக்குள்ளேயிருந்து கிணற்று ராட்டினம் கிறிச்சிடும் ஒலியும், மெல்லிய இனம் விளங்காத மதுர சங்கீதம் போல் வளையல்கள் கிலுகிலுக்கும் சப்தமும் கேட்டன. வாளி ஒன்று தரையின் மீது வைக்கப்பட்டது.
“டேய், ஜானகிராம்!” என்று அமுத்தலான குரலில் உள்ளேயிருந்து தியாகராஜன் அழைத்தான்.
“வர்றேன் சார்!” என்று பதிலளித்தபடி பலாப்பழத்தைக் கையில் ஏந்தியபடி ஆபீஸ் பியூன் உள்ளே சென்றான். அப்புறம் ஏதோ மந்தமான குரலில் யாரோ பேசினார்கள். மறுநிமிஷம் தியாகராஜன் வெளியே வந்தான்.
“எஸ் மிஸ்டர் ஜீவன்! கை கழுவிக்கலாமா? வாங்க போவோம்.”
ஜீவானந்தம் பூட்ஸ் லேஸைக் கழற்றி அவிழ்க்கத் தொடங்கினான்.
“ஓ, அந்தச் சம்பிரதாயமெல்லாம் பார்க்கிறீங்களா?”
“சம்பிரதாயம் ஒன்றுமில்லையே. கால் கழுவணுமேன்னுதான்.”
பூட்ஸையும், சாக்ஸையும் கழற்றி மேஜைக்கடியில் போட்டுவிட்டு ஜீவானந்தம் அவனோடு உள்ளே நுழைந்தான்.
சாப்பாட்டு அறையில் நுழைந்ததும்தான் இந்த வீட்டிலும் தெய்வீகம் கொஞ்சம் இருக்கிறது என்று ஜீவானந்தத்துக்கு நம்பிக்கை வந்தது. கண்ணனை இலேசான வர்ணமயக்கில், நினைவின் ஓவியம்போல் தீட்டியிருந்தது. படத்தில் மீராவும், நினைவின் நிறைந்த பாவமும்தான் புராதனமாகச் சித்திரிக்கப்பட்டிருந்தது. பக்கத்திலே பத்திரிகையிலே இருந்து கிழித்துப் படம் போட்டிருந்த ஆண்டாள் படம். இரண்டுக்கும் எதிரில் ஒரு ஸ்டாண்ட். அதன் மீது ஒரு ஊதுவத்திக் குழல். மறுபுறம், குளிர்ந்த நீலச் சுடர் வீசி நிற்கும் ஒரு பாவை விளக்கு. ஊதுவர்த்திக் குழலில் செருகியிருந்த வத்தியிலிருந்து மெல்லத் தன் வழியை நிதானித்துக் கொண்டாற்போன்ற அலை அலையான புகைச் சுருள். அதிலிருந்து கிளம்பிய இங்கிதமான வாசனை, இருதயத்தின் மீது எந்த அதிர்ச்சியையும் ஏற்படுத்தாமல் மெல்லத் தவழ்ந்து வந்து ஓர் அபூர்வ சுகத்தை அளித்தது.
ஒரு குடும்பத்தின் இந்தக் காட்சி!
ஜீவானந்தத்துக்கு மெய் சிலிர்த்தது. அதை அவன் அனுபவித்ததைக் கவனித்த தியாகராஜன் அலட்சியமாகச் சிரித்துக் கொண்டே, “எல்லாம் நம்ம மனைவியின் ருசி. நமக்கு இதெல்லாம் பிடிக்கிறதில்லே” என்று கூறிக் கொண்டே அவனைச் சாப்பாட்டு மேஜையருகில் அழைத்துச் சென்றான். இருவரும் அமர்ந்தனர்.
“கங்கா!” என்று தியாராஜன் கூப்பிட்டுவிட்டுப் பிறகு ஜீவானந்தத்தோடு பேச்சை ஆரம்பித்தான்.
“கங்கா!” என்று அவன் கூப்பிட்டதும் ஜீவானந்தத்துக்குத் தன்னிலை மறந்துவிட்டது. மனக் குகையில் அந்த ஒலி அலைபட்டுக் கங்கை நதியின் கம்பீர முழக்கத்தைப் போல் பலத்த எதிரொலிகளைச் சிருஷ்டித்தது. எந்தப் பெயர் அவனுடைய வாழ்க்கையில் தேவாலயத்துத் தூங்கா மணி விளக்குப் போல் துக்கத்தினூடே ஒளி வீசிக் கொண்டிருந்ததோ அந்தப் பெயர் அது. அந்தப் பெயரைத் தொடர்ந்து, நிலாமுற்றத்தின் விளிம்புக்கு மேலே மெல்ல மெல்ல எழுந்து வரும் சந்திர வட்டம்போல் அவனது நினைவின் பொறிகளில் மெதுவாக... மெதுவாகப் பாதசரங்கள் கூட அதிகம் சப்திக்காமல் அவள் வந்து கொண்டிருந்தாள். தியாகராஜன் ஜீவானந்தத்தின் மனத்துக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்தப் போராட்டத்தை உணராமல் சளசளவென்று பேசிக் கொண்டிருந்தான்.
“உங்களுக்கு ‘மீரா’ கேரக்டர் பிடிக்கிறதா மிஸ்டர் ஜீவன்? நான் விரும்புவதில்லை. புருஷனுக்கும் மீறிய, அவனையும் தாண்டிய பக்தின்னா என்னாலே ஒத்துக்க முடியல்லே. அது நம்ம சாஸ்திர தர்மங்களுக்கு விரோதமாயிருக்கிறதாக எனக்குப்படுகிறது. ‘ஆண்டாள் பரவாயில்லே. கண்ணனுக்காகத் தவமிருந்து, அவனுடைய காதலைக் குறித்தே ஏங்கியிருந்தாள். தன்னுடைய மனசும் மேனியும் மானிடருக்கு என்று பேச்சுப் பட்டால் எவ்வளவு கொதிக்கிறதுன்னு திருமணம் செஞ்சுக்காமலே இருந்தாள். இது காதல்!”
ஒரு பக்கம் மனத்துக்குள் அந்த மகோன்னதமான அவஸ்தையை அனுபவித்துக் கொண்டு, ஜீவானந்தம் மறுபுறம் இந்த வார்த்தைகளையும் கேட்டான். அதற்காக அவன் தர்க்கிக்க விரும்பவில்லை.
அந்நேரத்தில் வாசற்படியோரத்தில் ஒரு எவர்சில்வர் தட்டை ஏந்திய இரு சிவந்த கரங்களும், சந்தன வண்ணப்பட்டுச் சேலையின் சிவப்புக் கரை முன்றானை காற்றில் அசைந்தாடுவதும் தெரிந்தன. அவள் தயக்கத்தைப் பார்த்துத் தியாராஜன் ‘உள்ளே வா!’ என்று உத்தரவிட்டான். அவள் மெதுவாக உள்ளே வந்தாள்.
ஜீவானந்தத்தின் உள்ளம் பதைத்துத் துள்ளியது. அதன் இயக்கம்? ஒரு கணம் நிசப்தமாகிப் பேரிரைச்சலோடு மீண்டும் தொடங்கிற்று. அவள் தான் ஜீவானந்தத்தின் ஜீவ யாத்திரையில் இதுகாறும் இருந்து வந்த தீபவெளிச்சம். அவனுடைய கங்காவேதான். ஒரே ராகமாக அவனுக்குள் அமர்ந்திருந்த ஜீவனின் நாதம், பற்பல கிளைகளாகப் பிரிந்தது. அவன் வெகு வருத்தத்துடன் அவளை ஏறிட்டுப் பார்த்தான்.
பழைய சாந்தம் தவழ்ந்த அதே முகம். இன்னும் அவள் அவனைப் பார்க்கவில்லை. எனவே முகத்தில் நிலவியிருந்த சகஜ பாவமே ஒரு சோகமான சோபையைக் கொடுத்தது. அவனுக்கு அப்போது தியாகராஜன் மறைந்து விட்டான். இருக்கை மறைந்தது. இடம் மறந்தது. ஓர் ஆழ்ந்த மனக் குறையை மலர்த்தட்டில் ஏந்தியவாறு தெய்வத்துக்கு நிவேதிக்க வந்த மௌன கங்கையாக அவள் மட்டும் தெரிந்தாள்.
“இவர்தான் மிஸ்டர் ஜீவானந்தம். இவள்தான் என் மனைவி” என்று தான் இருப்பதை ஸ்தாபிப்பதுபோல் தியாகராஜனின் குரல் கேட்டது.
எதைத் தாள முடியாது என்பதற்காக - எது நிகழக்கூடாது என்று ஜீவானந்தம் மனப்பூர்வமாக எதிர்பார்த்தானோ அது நேர்ந்தது. கங்கா அவனை நிமிர்ந்து பார்த்தாள். முதல் வெட்டில் மெல்லத் தள்ளாடும் வாழைபோல் கங்கா தடுமாறினாள்.
“நமஸ்காரம்” என்று தொண்டை மெல்லக் கலங்க அவளை எச்சரித்தான் ஜீவானந்தம்.
மறுகணம் கங்கா சமாளித்துக் கொண்டாள். சட்டென்று சகித்தற்கரிய அந்தப் பார்வையைக் கீழே தாழ்த்திக் கொண்டு, “நமஸ்காரம்” என்று ஒலி குறைந்த குரலில் கூறினாள் கங்கா.
“சீக்கிரமா பரிமாறு கங்கா! வேட்டைக்கு இப்பவே நேரமாயிடுச்சு” என்று கட்டளையிட்டான் தியாகராஜன். அவனுடைய முகம் இலேசாய்க் கறுத்தது.
துடிதுடித்துக் கொண்டிருக்கும் ஜீவானந்தத்தின் மார்புக்கெதிரில், கங்காவின் கை, பலகாரத் தட்டுக்களை எடுத்து வைத்துப் பரிமாறிற்று. அவளுடைய கூந்தலிலிருந்து அவனுக்கு மறக்க முடியாத தைலத்தின் வாசனை. ஜீவானந்தம் உதட்டைக் கடித்தபடி தலையைத் தாழ்த்தவிட்டான்.
“என்ன மிஸ்டர் ஜீவன்! மீராவைப்பற்றி நீங்கள் ஒன்றுமே சொல்லவில்லையே?” என்று தியாராஜன் ஆரம்பித்தான்.
பளிச்சென்று மின்னல்போல் அவனுடைய வார்த்தை ஜீவானந்தத்தைத் தகித்தது. அவன் எதையோ சிலேடையாகக் குத்திக் காட்டுகிறானா? பலகாரத் தட்டிலிருந்து ஒரு விள்ளல் எடுத்து வாயில் போட்டுக் கொள்ளும் சாக்கில் கங்காவைப் பார்த்தான். கங்கா சுவரோரமாக இடதுகையால் மணிக்கட்டைப் பிடித்த வண்ணம் நின்றிருந்தாள். உதடுகள் துடித்தன. கண்களைக் கீழே தாழ்த்திச் சூழ்நிலையிலிருந்து தன்னைச் சிறையிட்டுக் கொண்டு நின்றாள்.
“மீராவை எனக்கு மதிக்கத் தோன்றுகிறது ஸார்! அவளுடைய பக்தி ஆத்மீகமானது. அது காதலில்லை. ஆண்டாள் கண்ணனைக் காதலித்தாள். அவள் பாவம் வேறு; மீராவின் பாவம் வேறு.”
“அப்படியா! உங்களுக்கு மீரா ‘கேரக்டர்’ பிடிக்கிறதுன்னு சொல்லுங்க. என் மனைவிக்கும் அப்படித்தான் மிஸ்டர் ஜீவன்!”
ஜீவானந்தம் பதறிப்போய் அவனைத் திரும்பிப் பார்த்தான்.சாதாரண வார்த்தையொன்று சொல்லியவன்போல் தியாகராஜன் அமைதியாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். எது வாயில் வரக்கூடாதோ அதுவே தியாகராஜன் வாயிலிருந்து வந்தது. அவன் அபிப்பிராயம் என்ன என்பது மூடுமந்திரமாகப் பெரிய புயலுக்கோ மழைக்கோ சூலுற்றிருக்கும் வானம் போல் எச்சரித்தபடியேயும் இருந்தது. அதற்கப்புறம் ஜீவானந்தம் பேசவேயில்லை. எழுந்து கை கழுவச் சென்றபோது மட்டும் தற்செயலாகக் கங்காவின் கண்கள் அவனைச் சந்தித்தன. மேனியெல்லாம் காயம்பட்டுத் தீனமாகப் பார்க்கும் பேடைப் புறாவைப்போல் அந்தச் சமயத்தில் கங்கா புறப்பட்டாள். சரேலென்று ஜீவானந்தம் அவளைக் கடந்து விட்டான்.
வெளி ஹாலுக்கு இருவரும் வந்தனர். நிஷாவின் தந்தை தேடிக் கொண்டிருப்பதாக பியூன் வந்து சொன்னான்.
“என்ன ஜீவன்! நீங்க தயார் தானே?” என்று கேட்டவாறு சுவரில் நிறுத்தியிருந்த துப்பாக்கியை மடித்துச் சரி பார்க்கலானான் தியாகராஜன்.
“ஓ, நான் தயார்!”
“அப்ப கிளம்புவோம்... ஜானகிராம்! ராஜவேலைக்கூப்பிடு” என்று பியூனுக்குத் தெரிவித்தான் தியாகராஜன்.
சிறிது நேரத்தில் ஷிகாரி ராஜவேல் அங்கு வந்து நின்றான். அவனைக் கண்டதும் தியாகராஜனின் குரலில் இருந்த அதிகார மிடுக்கு சிறிது தளர்ந்தது.
“நீ டிபன் செஞ்சாச்சாப்பா?”
“முன்னேயே ஆயிடுச்சு சார்!”
“அப்ப, புறப்பட வேண்டியதுதானே? ஜானகிராம் கிட்டே என்னென்ன தேவையோ எடுத்துக்கச் சொல்லிடு... ஜானகிராம்! ஆறு பேருக்குச் சாப்பாட்டுக்குச் சொல்லியிருக்கிறேன். ஒழுங்காகக் கட்டியெத்து ஜீப்பிலே கொண்டு போய் வை. சீக்கிரமா போ. சரி, ராஜவேல், நீ கையைக் கழுவிக்கிணு சீக்கிரம் வாப்பா” என்று இருவரையும் அனுப்பினான்.
“ஜீப் காரு அந்தப் பக்கம் போவாதுங்க!” என்று வெளியே நின்றிருந்த நிஷாவின் தந்தை ஜக்கோடன் மரியாதையுடன் தெரிவித்தான்.
“அப்படியா...? எவ்வளவு தூரம் வரையில் போகும்?”
“நாம் போக வேண்டிய இடத்துக்கு ரெண்டு மைல் இப்பாலிலேயே பாட்டை நின்னுடுதுங்க.”
“சரி! அதுவரையில் போனாப் போவுது! ஆமா, முன்னாடியே அந்த இடத்துக்குப் போயிருக்கிறீயா நீ?”
“என்ன எசமான், அப்படிக் கேட்டீங்க? போனவாட்டி போய்ப் போட்டுட்டு வந்த பரணை இன்னும் பிரிக்கிலீங்க!”
“சரி, மிஸ்டர் ஜீவன்! நாம் போய் ஜீப்பை ஸ்டார்ட் பண்ணிக் கொண்டு வருவோம்; வாங்க!”
ஜீவானந்தம் பூட்ஸை மாட்டிக் கொண்டு எழுந்திருக்கலானான். இருவரும் வெளியே வந்தபோது ஜான்ஸன் வெளியே போய்க் கொண்டிருந்தார்.
“ஹலோ! குட்மார்னிங் ஸார்! நாங்கள் வேட்டைக்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறோம். நீங்களும் வந்து கலந்து கொண்டால் அது மிகவும் மகிழ்ச்சிகரமாக இருக்கும்” என்று அவரிடம் திரும்பி வணக்கத்தைக் கூட எதிர்பாராமல் விடுவிடுவென்று சொன்னான் தியாகராஜன்.
ஜான்ஸன் புன்னகையோடு அவன் சொல்லிமுடிக்கும் வரை நின்றார். ஜீவானந்தம் ஒன்றும் கூறாமல் வெறுமனே வணங்கினான்.
“எஸ், எனக்குத் துப்பாக்கியெல்லாம் வீட்டிலே இருக்கு” என்று பதிலிறுத்தார் ஜான்ஸன்.
“ஓ, நீங்க இஷ்டப்பட்டால் என்னுடையதை என்னிடம் இரண்டு இருக்கு. உபயோகப்படுத்திக் கொள்ளலாம்” என்றான் தியாகராஜன்.
அரை மணி நேரத்தில், ஐவரைச் சுமந்து கொண்டு கிழக்கு நோக்கி ஜீப் புறப்பட்டது.
தியாகராஜன் ஜீப்பை ஓட்டிக் கொண்டிருந்தான். வண்டி புறப்பட்டு, காட்டுப் பாதையின் கரடுமுரடான குலுக்கலுக்கும், அதிர்ச்சிகளுக்கும் ஆளாய்ப் போய்க் கொண்டிருந்தபோது ஜீப்புக்கு எதிரில் இரண்டு கைகளையும் ஆட்டியவாறே நிஷாவின் உருவம் தூரத்திலிருந்து ஓடி வந்தது.
“ஹோய்ய்...! வண்டியை நிறுத்து! நிறுத்து!”
தியாகராஜனின் முகம் மலர்ந்தது. அவன் புன்னகையோடு வண்டியை நிறுத்தினான்.
“என்னாம்மா, நிஷா!” என்று கோபத்தோடு கேட்டான் நிஷாவின் தந்தை.
“நானும் வேட்டைக்கு வருவேன்” என்று நன்றாக நிச்சயம் பண்ணிக் கொண்டு பேசுபவள்போல, வராவிட்டால் அடம்பிடித்து அழிச்சாட்டியம் செய்வாள் என்று எச்சரிக்கிற தொனியில் பேசினாள் நிஷா.
“வேட்டையுமாச்சு, கோட்டையுமாச்சு! போ, போ. உங்காத்தாக்கிட்டே அப்புறம் நான் பதில் சொல்ல முடியாது” என்று ஜீப்பில் இருக்கிற அத்தனை பேரையும் மறந்து கத்தினான் ஜக்கோடன்.(தொடரும்)

பாடிப் பறந்த குயில்-1

 பாடிப் பறந்த குயில்
 1
பாதசாரிக்கு இதுதான் வழி! நீங்க இஷ்டப்பட்டிருந்தால் அப்படியே கூடப் போயிருக்கலாம்” என்று அடக்கமாகப் பதிலளித்தான் ஜீவானந்தம்.
“அப்படியா...?” என்று அவனை ஏற இறங்கப் பார்த்தபடியே மெல்ல விசிலடிக்கத் தொடங்கினான் அவன். அவனுக்கு என்ன தோன்றிற்றோ, பிறகு ஜீவானந்தத்துடன் மரியாதையாகவே பேசத் தொடங்கினான்.
“நீங்க யாரு? காட்டிலே எத்தனை நாட்களாகத் தங்கியிருக்கீங்க?”
ஜீவானந்தம் அவன் ஒருபடி இறங்கி வருவதைக் கண்டதும் தான் விட்டுக் கொடுக்காமல் திருப்பிக் கேட்டான்.
“நான் இங்கே  மூணு மாசமா காட்டிலே இருக்கிறேன். நேற்றைய வரைக்கும் உங்களைப் பார்த்ததில்லே. நீங்க யாரு என்று நான் தெரிஞ்சுக்கலாமா?”
அந்த மனிதனின் முகத்தில் ஒரு கடுமை கலந்த புன்னகை பரவியது. “நான் இன்னிக்கு காலையிலேதான் வேலைக்கு வந்தேன். காட்டிலாகா அதிகாரி ஐ.ஸி. தியாகராஜ்” என்று அறிமுகத்துக்குக் கையை நீட்டுவது போல் அவன் குதிரையின் கடிவாளத்தை இடது கைக்கு மாற்றிக் கொண்டு வலது கையை நீட்டினான்.
“நான் ஜீவானந்தம். மிஸ்டர் வில்லியம் ஜான்ஸனின் நிலத்தைப் பார்த்துக்கறேன். அவருடைய சிறிய பள்ளியையும் கவனிச்சுக்கறேன்” என்று தன்முன் நீட்டப்பட்ட கரத்தைப் பற்றிக் குலுக்கினான் ஜீவானந்தம்.
“நீங்க விமானப் படையிலே இருந்திருக்கீங்களோ? நீங்க தோளை மேலும் கீழுமா அசைச்சு அசைச்சு நடக்கிறதைப் பார்த்துத்தான் கேட்கிறேன்” என்றான் தியாகராஜன்.
ஜீவானந்தம் திகைத்துப் போனான். “சரி, நான் வரட்டுமா? அப்புறமா சந்திப்போம்” என்று கையை ஆட்டி விடைபெற்றுக் கொண்டு அவன் புறப்பட்டுவிட்டான். ஒரு சரிவில் இறங்கிக் கொண்டிருந்த அவனுடைய உருவத்தையே உற்றுப் பார்த்தபடி நின்றான் ஜீவானந்தம். அவனால் தியாகராஜனைச் சட்டென்று புரிந்து கொள்ள முடியவில்லை. அவனுடைய கடைசிக் கேள்வி சாதாரணமாகத்தான் கேட்கப்பட்டதா, அன்றி, எந்த விசேஷ அர்த்தத்தோடாவது கேட்கப்பட்டதா என்பது தெரியவில்லை. ஜீவானந்தம் வெறுப்புடன் தன் கண்முன்னால் சிறுகச் சிறுக மறைந்துபோகும் அந்த வெள்ளைக் குதிரையைப் பார்த்துக் கொண்டிருந்து விட்டுத் தன் குடிசையை நோக்கி நடந்தான்.
சூரியன் அஸ்தமித்துவிட்டான். சிவப்புக் கடல்போல் அவன் அஸ்தமனமான வட்டத்துக்குச் சரியாகக் கிரண வெள்ளம் பரவிக் கிடந்தது. ஜீவானந்தம் வருகிறபோதே பூட்ஸைக் கழற்றி ஒரு பாறை மறைவில் வைத்து விட்டு, விக்னேசுவரர் கோவிலின் பின்புற வழியாக வந்தான். எதிரில் நீலநிறம் கொண்டது போல், வெள்ளி நரைகள் சீறிப் பெருக, மலையருவி ஓடிக் கொண்டிருந்தது. அருவியருகில் ஒரு சாய்வு நாற்காலிபோல் அமைந்திருந்த ஒரு பாறையின்மீது போய்ப் படுத்துக்கொண்டான் ஜீவானந்தம். முழங்கால் வரை கால்சட்டையை மடித்துவிட்டு, குதுகுதுப்பும் வேகமும் நிறைந்த அருவியில் இரண்டு கால்களையும் விட்டுக் கொண்டான். ஜலம் மெல்ல உந்தித் தள்ளுவது போல் அவன் கால்களின் கனத்தைக் குறைத்து விட்டு ஓடிக் கொண்டே இருந்தது. வீடு திரும்பும் பறவைகள் வானத்தில் விமானங்களின் வரிசை போன்று சென்றன. வானம் ஊதா நிறம் பெற்று, வெள்ளித் திலகம்போல் ஓர் ஒற்றை நட்சத்திரம் சுடர் வீசியது.
அதற்கு மேல் அவனால் பார்க்க முடியவில்லை. இரண்டு தன்மையான கரங்கள் அவன் கண்களைப் பொத்தின. நிஷா தான்.
“என்ன நிஷா! இதுக்கு மேலே நான் பார்க்கக் கூடாதா?” என்று அவள் கைகளை விலக்காமலேயே கேட்டான்.
“எவ்வளவு நேரமா நான் பின்னாலேயே நிற்கிறது! நீ திரும்பிப் பார்த்தால்தானே ஜீவா?” என்று அலுத்தபடியே அவன் கண்களிருந்தது கரத்தை எடுத்தாள் நிஷா. மெய்யாகத்தான் கோபித்துக் கொள்கிறாளோ என்று படுத்தவாறே தலையைப் பின்னுக்குச் சாய்த்து அவளைப் பார்த்தான். உதட்டில் மெல்லிய புன்னகை நெளிந்தது. ஜீவானந்தம் எழுந்து விக்னேசுவரர் கோவில் கல்மேடைக்குத் தாவினான்.
சாட்டை போன்ற இரு நீண்ட பின்னல்கள் மார்பின் மீது துவள, நிஷா அவன் அருகில் வந்து உட்கார்ந்தாள். இன்றைக்கு என்னவோ அவளுடைய முகத்தில் புன்னகையின் பிரகாசம் மங்கவேயில்லை. இருவரும் வந்து அமர்ந்தபோது சந்திரோதயம் ஆகிவிட்டது. சந்திரிகையின் இலேசான கிரணங்கள் முத்துத் தூள் பூசனாற்போல், நிஷாவின் முகத்தில் பட்டன. அவளுடைய யௌவனத்தின் வடிவழகு, அந்நேரத்தில் மெல்லப் பாடும் அருவியும், புராதனமான ஆலயமும் இருக்கும் சூழ்நிலையில் ஜீவானந்தத்துக்கு கம்பீரமான உள்ளக் கிளர்ச்சியைக் கொடுத்தது. அவளோடு பக்கத்தில் அமர்ந்து பேசவோ எந்தத் தாழ்ந்த வகையிலும் அவளுடைய நட்பை அர்த்தப்படுத்திக் கொள்ளவோ அவன் விரும்பவில்லை. கடந்த இரண்டு வருஷ காலமாக அவன் மனத்தில் ஆறாத் தீயாக வருத்தி வரும் வேதனை ஒன்று உண்டு. அதன் வேலிகளைத் தாண்டி ஜீவானந்தம் வரமாட்டான். எனவே சற்று நகர்ந்து உட்கார்ந்தான். அதை நிஷா கவனிக்கவில்லை.
“ஜீவா, ஜீவா! உன்கிட்டே இப்போது ஒண்ணு சொல்லணும்னுதான் இங்கே வந்தேன்! அது என்னவா இருக்கும் சொல்லு?” என்று குழந்தை புதிர் போடுவது போலக் கேட்டாள் நிஷா. அவள் குழந்தையேதான். ஜீவானந்தத்துக்கு இதைக் கேட்டதும் சிரிக்கத் தோன்றிற்று. ஆனால் அவள் மனம் புண்படக்கூடாதே என்பதற்காக, “எனக்கு எப்படித் தெரியும் நிஷா?” என்றான்.
“சரி; அது அப்புறமா சொல்றேன். நீ எங்கே மத்தியானம் முழுதும் குடிசையிலேயே இல்லே? நான் நாலைஞ்சு தடவை வந்து வந்துஉன்னைப் பார்த்துவிட்டுப் போனேன்!”
“நான் தொரைகிட்டே போயிருந்தேன். சீக்கிரம் வந்துட்டேனே, நீ எப்பத் தேடினே?”
“உச்சி வேளைக்கு.”
“அப்ப சரிதான்” நான் அங்கே இருந்தேன். சரி; என்ன விஷயம் சொல்லு?”
“அப்பா உன்னைக் கூப்பிட்டுக்கிணு வரச் சொன்னாரு. அதுக்காக வந்து தேடினேன்.”
“அப்பா கூப்பிட்டாரா? எதுக்காக?”
“நாளைக்குக் கிழக்குக் காட்டுக்கு வேட்டையாடப் போகணுமாம். அதுதான் விஷயம்.”
வேட்டை என்று கேள்விப்பட்டதும் ஜீவானந்தம் சிறிது உற்சாகமடைந்தான். அதில் ஒன்றில் தான் மனத் தொல்லைகளெல்லாம் மறந்து போய்விடுகின்றன. வேட்டையாடப்படும் மிருகத்துக்கும் மனிதனுக்கும் இருக்கும் விறுவிறுப்பான உயிர்ப் போட்டியில் முழுக்க ஐக்கியமாகும்போது அவனும் அதுவும் மட்டும் நிற்கிறார்கள். ஜீவானந்தத்துக்கு அதனாலேயே வேட்டை மிகவும் பிடித்தது.
“நாளைக்கா?”
“ஆமாம், ஜீவா! நான்கூட வரட்டுமா? எனக்கும் துப்பாக்கி சுடக் கத்துக்குடு” என்று மலைவாசி மக்களுக்கே உரிய துணுச்சலோடு கேட்டாள் நிஷா.
“ஏன், உங்கப்பாவையே கேளேன்!”
“கேட்டாக்க, ‘அதெல்லாம் உனக்கு வேண்டியதில்லேன்னு’ செல்கிறாரே, ஜீவா!”
“அம்மாடி! அந்தப் பழி எனக்கு வேண்டாம். அப்புறமா இந்தக் காட்டிலே பார்க்கிறதுக்கு ஒரு பட்சிக்கூட நிக்காது. நீ விளையாட்டுத்தனமா என்ன செய்யறோம்னு தெரியாமலேயே சுட்டுத் தீர்த்துடுவே!”
“அப்ப...” என்று இழுத்த நிஷாவின் முகம் குன்றி வருத்தத்தினால் வாடியது. “நான் அவ்வளவு கொடூரமானவளா?”
ஜீவானந்தம் வேடிக்கையாக, “இல்லையா, பின்னே?” என்றான்.
நிஷாவுக்கு ரோசம் வந்தது. “கொடூரமானவளோடே எதுக்குப் பேசணும்? ஒண்ணும் இனிமேல் பேசவேண்டியதில்லே” என்று கோபமாகக் கூறியபடியே எழுந்து இரண்டடி எடுத்து வைத்துவிட்டாள். ஊதிவிட்ட நெருப்புப்போல் முகம் கன்றிச் சிவந்திருந்தது.
ஜீவானந்தம் அவசரத்தோடு எழுந்து அவளது வலது கையைப் பிடித்து நிறுத்தப் போனான். அவள் நின்றிருந்த இடம் அருவிக்குச் சிறிதே தூரம் தள்ளியிருந்த சின்னக் கல்மேடை. அவன் பிடித்து இழுத்த வேகத்தில் அவள் தடுமாறிக் கொண்டு அருவியில் விழ இருந்தாள். சட்டென்று தியாகராஜன் அங்கே தோன்றி அவள் மேனியைத் தாங்கிப் பிடித்துக் கொண்டான். அவன் எப்போது அங்கே வந்து சேர்ந்தான் என்பது தெரியவில்லை. ஆனால் ஜீவானந்தத்தின் முகத்தில் ஒரு சுருக்கம் தோன்றியது. நிஷாவை அவன் பற்றியிருந்த பாவனையும் கண்களில் தெரிந்த உணர்ச்சியும் ஒரு சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்கிறவன் போல் தான் தெரிவித்தன. நிஷா ஆச்சரியத்தால் கொஞ்ச நேரம் சும்மா இருந்துவிட்டாள். பின்னர் அலட்சியமாக அவனுடைய இரண்டுகைகளையும் தட்டிவிட்டு, “ப்பூ! விழுந்திருந்தாக்கூட நான் ஒண்ணும் முழுகிப்போயிருக்கமாட்டேன்! எனக்கு நீச்சல் தெரியும்” என்று பளிச்சென்று பதில் சொன்னாள்.
“ஓ, அப்படியா!” என்று அசடு வழியச் சிரித்தான் தியாகராஜன்.
இன்னும் தன் பக்கமே வராமல் தியாகராஜன் அவனையே பார்த்தபடி நின்று கொண்டிருப்பதையும், இச்சமயத்தில் தான் மௌனம் சாதித்துக் கொண்டு சும்மா இருப்பதையும் சகிக்காமல் ஜீவானந்தம் அவனோடு பேச்சை ஆரம்பித்தான்.
“இந்தச் சமயத்தில் வந்து உதவினதற்கு ரொம்ப நன்றி!”
தியாகராஜன் அவன் பக்கம் முடுக்கோடு திரும்பி, “நன்றி ஒன்றும் அவசியமில்லை மிஸ்டர்... ஆங், உங்கள் பெயர் என்னச் சொன்னீர்கள்?” என்றான்.
“ஜீவானந்தம்!” என்று உணர்ச்சியற்ற குரலில் சிறிது தாமதமாகச் சொன்னான்.
“ஆங், மிஸ்டர் ஜீவன்! சமயத்திலே வந்து உதவிய சந்தோஷமே எனக்குப் போதும்.”
“எனக்கு நீ ஒண்ணும் உதவி செய்யலே! எனக்கென்ன கையில்லையா? கால் இல்லையா?” என்று வெடுக்கென்று இடைமறித்தாள் நிஷா.
தியாகராஜன் கலகலவென்று சிரித்தான். “இந்தப் பெண்ணுக்கு மரியாதை தெரியல்லே. ஆனால் அழகாகக் கோவிச்சுக்கிறாள், இல்லையா மிஸ்டர் ஜீவன்?” என்றான்.
இந்த வெட்கமற்ற பேச்சும், அவனைக் கேலி செய்வது போல் இருந்த அந்தக் கேள்வியும் ஜீவானந்தத்தைக் கொதிப்புறச் செய்தன. ஆனால் அவனுக்கு ஒன்றும் செய்யத் தோன்றவில்லை. தன் அதிருப்தியைக் கண்களில் காட்டிக் கொண்டான். நிஷா அவனுக்காகச் சும்மா இருப்பவள் போல் திரும்பி நின்று, அருவியின் ஓட்டத்தைக் கவனிக்கலானாள்.
“நான் இறங்கி வந்து கொண்டிருக்கிற போது வேட்டை நாளைக்குன்னு என்னவோ பேசிக் கொண்டிருந்தாப்போலிருக்கு. என்ன விஷயம்? எனக்கு வேட்டைன்னா ரொம்ப இஷ்டம். உங்க ரெண்டு பேருக்கும் பாதகமில்லேன்னா நானும் கலந்துக்கப் பிரியப்படறேன்” என்றான் தியாகராஜன்.
அவன் பேச்சில் குறும்பு கலந்திருந்தது. அவன் எந்த அர்த்தத்தில் ‘உங்க ரெண்டுபேருக்கும் பாதகமில்லைன்னா’ என்ற வார்த்தைகளைப் பிரயோகப்படுத்தினான் என்பதை ஊகித்ததும் ஜீவானந்தத்துக்கு உடல் கூசிற்று. அவன் அதிக நேரமாக அவர்கள் பேச்சைக் கேட்டிருக்க வேண்டும். கன்னத்தில் அறைவது போல் ஜீவானந்தம் அதற்குப் பதில் கூற விரும்பினான். ஆனால் ஏதோ ஒரு சக்தி அவனை இழுத்துப் பிடித்தது.(தொடரும்)